நேற்றைய மழைத்துளி காயவில்லை – அது
தாவர வேர்களில் நுழைந்திருக்கும்
நேற்றைய கதிரொளி போகவில்லை – அது
நேற்றின் செயல்களில் நிறைந்திருக்கும்
நேற்றைய சருகுகள் மறையவில்லை – அவை
நிச்சயம் பூமியில் கலந்திருக்கும்
நேற்றைய கனவுகள் மறையவில்லை – அவை
நாளைய செயல்களில் மலர்ந்திருக்கும்

பேசிய வார்த்தைகள் மறைவதில்லை – அவை
பழியோ புகழோ கொண்டுதரும்
வீசிய விதைகளும் அழிவதில்லை – அவை
விளைந்து வளர்ந்து வடிவம்பெறும்
ஊசியில் ஒட்டகம் நுழைவதில்லை – நம்
உயர்ந்த இலட்சியம் நுழைந்துவிடும்
ஆசையின் பயணங்கள் முடிவதில்லை – அவை
ஆயிரம் வழிகளில் தொடர்ந்துவரும்

நீயாய் வளர்த்த கனவுகளை – ஏன்
நீர்க்க விடுகிறாய் நம்பாமல்
காயாய் வரும்வரை காத்திருந்து – அதைக்
கனியச் செய்திடு வெம்பாமல்
ஓய்வே இல்லா இதயத்திலே – உன்
இலட்சியம் உள்ளது உறங்காமல்
தீயாய் எழுந்து ஒளிபரப்பு – எந்தத்
திசையின் இருட்டுக்கும் தயங்காமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *