இரண்டே சிறகுகள் இருக்கும் பறவை
எதிர்த்திசைக் காற்றைக் கிழித்துவிடும்!
மருண்டு தவிக்கிற மனிதா&உனது
முயற்சிகள் உன்னை மலர்த்திவிடும்!
வேர்பிடிக்கும்வரை தாவரமெல்லாம்
வலிகள் தாங்கிப் போராடும்!
யார்தான் வெற்றியை எளிதில் பெற்றது?
இருளுக்குப் பின்தான் பூபாளம்!
தற்காலிகம்தான் தோல்விகள் & அவற்றைத்
தலைவிதி என்பது பழையகதை!
குற்றாலத்து அருவியைப் போல் நீ
குதித்துக் கிளம்ப ஏது தடை!
சோதனை வருகிறபோதினில் தானே
சூரியன் போல் நீ எழவேண்டும்!
மேதினி முழுவதும் வெளிச்சம் தெளித்து
முடித்த பின்னால் தான் விழ வேண்டும்
கண்ணில் சுமக்கிற கனவுகள் ஆயிரம்
மண்ணில் நிஜமென்று மாற்றிவிடு!
எண்ணித் துணிந்தவன் தோற்பதில்லை
என்பதை நீயிங்கு காட்டிவிடு