(தமிழுக்குப் புனைபெயர் கம்பன் & கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரையை முன்வைத்து)

hqdefaultபெருங்காவியங்கள் உருவாகும் வேளையில் அதற்கான நோக்கத்தையும் காவிய ஆசிரியர்கள் அறிவிப்பார்கள்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுதலும்”
என, இளங்கோவடிகள், தான் பாட்டுடைச் செய்யுள் நாட்டிட விழைந்தமையின் நோக்கத்தை விளம்புவார்.

தன் படைப்பின் நோக்கம் கண்ணன் மீதுள்ள பக்தியே என்பது வில்லிப்புத்தூரார் வாக்கு.

“மன்னு மாதவன் சரிதம் இடையிடை மன்னுதலால்” என்பார் அவர்.

இராமன் என்னும் நாயகப் பாத்திரம் வழியாய் வெளிப்படும் விழுமியங்களைச் சுட்டவும், செயல் வழியே ஒருவனின் மாண்பினை உலகம் உணரும் விதமாய் வாழும் முறையைப் போற்றவும் கம்பன் முற்படுகிறான்.

தன் காவியத்தை “நடையில் நின்றுயர் நாயகன்” சீர்மையை பாடுவதாகப் பேசுகிறான்.

“காசில் கொற்றத்து இராமன் கதையை
ஆசை பற்றி அறையலுற்றேன்”
என்கிறான்.

அறத்தின் நிலைபேற்றுத் தன்மையை நிறுவவே கம்பன் காவியம் பாடினான் என்பதை கவிப்பேரரசு வைரமுத்து தன் கட்டுரையில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

பல்லாண்டுகளுக்கு முன்னர்; கம்பனைப் பற்றிப் பாடிய கவிதை ஒன்றில்,

“நெறிகேட்ட தேவதாசி நிலைவந்து சேர்ந்த நாளில்
சரியென்று சொல்லச் சோழன் சட்டங்கள் செய்த நாளில்
ஒருவனுக்கொருத்தி என்ற உயர்வேதம் தந்த உன்னைக்
கருவிருந் தீன்ற தாயின் கால்களை வணங்க வேண்டும்”
என்று அவர் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

தனிமனித அறம் & உறவியல் அறம் & சமூக அறம் & அரசியல் அறம் & போர்நெறி அறம் என்று பல்வேறு நிலைகளிலும் அறன் வலியுறுத்தும் களஞ்சியமாய் பரந்து கிடக்கிறது கம்பன் செந்தமிழ்.

காளிதாசனை விதந்தோதிய பண்டித ஜவஹர்லால்நேரு, கம்பனை அறிந்திராமையை, “விதியின் பிழையன்று & அவரிடம் கம்பனைக் கொண்டு சேர்க்காத நம் மதியின் பிழை” என்றும் குறிப்பிடுகிறார்.

ஆனால் அதற்கு நேருவின் மனத்தடை கூடக் காரணமாக இருந்திருக்கக் கூடுமென்று கருதத் தோன்றுகிறது. கம்பனை அறிந்திருந்த ராஜாஜி நேருவுக்கு நெருக்கமாய் இருந்திருக்கிறார். கம்பனில் ஆழ்ந்த ரசிகமணி டி.கே.சி நேரு மனையில் விருந்துண்டிருக்கிறார்.

காந்தியடிகளுக்கே கம்பராமாயணம் சொன்ன டி.கே.சி நேருவிடம் கண்டிப்பாக கம்பன் குறித்துப் பேசியிருக்க வேண்டும். நேருவின் பண்டித மனோபாவம் பிறர் வழியே ஒன்றை அறிந்து கொள்வதா என்னும் மனத்தடையை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

சாகித்ய அகாதெமி கண்காட்சியன்றில், குறிப்பிடத்தக்க தமிழறிஞர் ஒருவரின் சிறந்த தமிழ் நூலை புரட்டிப் பார்த்துவிட்டு “இது நல்ல நூலாக இருக்க வாய்ப்பில்லை” என்று மட்டையடி அடித்தவர் அவர் என்றொரு செய்தியும் உண்டு.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி மீண்ட பிறகு அவரைத் தொடர்ந்து கொண்ட பேரறிஞர் ஜே.எம். நல்லுசாமிபிள்ளை, இராமானுஜரைப் பற்றி நீங்கள் உங்கள் உரைகளில் குறிப்பிட்டீர்கள். சைவ சிந்தாந்தம் பற்றிப் பேசவில்லையே” என்று கேட்ட போது “தான் அது பற்றி அறிந்திருக்கவில்லை” என ஒப்புக் கொண்டாராம் விவேகானந்தர்.

நேரு, கம்பனை அறிய முயற்சியும் செய்யவில்லை அறியக் கூடிய சூழல் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று தோன்றுகிறது.

“வரங்களெல்லாம் தவமிருந்த காரணத்தால் வந்துதித்த தேவமகன்” என்று நேருவைக் கொண்டாடிய கவிஞர் இதனை ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.

காளிதாசன் & வான்மீகி & ஷேக்ஸ்பியர் ஆகியோருடன் ஒப்பிட்டு கம்பனின் மேன்மைகளை உணர்த்தும் இடங்கள் இந்தக் கட்டுரையின் மும்மணிகள்.
“தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை” என்று, வாலி எள்ளல் மொழியில் சொன்னதாய் கருதப்படும் இடத்தை, வாலி புரிதலின் பாற்பட்டுச் சொன்னதாய் கவிஞர் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

வாலி & இராமன் வாக்குவாதம் இருவேறு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று காவிய நுட்பம் வெளிப்படும் புறவயமான வாதம். மற்றொன்று ஆன்மீக அடிப்படையிலான அகலாயப் பரிணாமம். (இதில், இரண்டாம் நிலைகுறித்து “கம்பன் காட்டும் யோகியர்” & நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்).

வான்மீக வாலியை விடவும் கம்பன் வாலி பண்பட்டவன் என்பதையும் கவிஞர் தன் கட்டுரையில் சுட்டுகிறார்.

மேக்பெத் சீமாட்டியையும் மந்தரை மூதாட்டியையும் ஒப்பிடடு கவிஞர் வைரமுத்து தீட்டும் ஒப்பாய்வுச் சித்திரம் புதியது.

பெயர்ச் சொற்களை பிறமொழிகள் சிதைக்கவியலும் வினைச் சொற்கள் சிதைக்கவியலாது என்பதும் புதிய கண்டறிதலே

தசரதன் என்று பாடுவதா தயரதன் என்று பாடுவதா என்று கம்பன் கூடக் குழம்பியதுண்டு.

“தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே”
என்ற கம்பனின் நான்கடிப் பாடலில் எட்டு வினைச்சொற்கள் பெய்யப்பட்டிருப்பதை கவிஞர் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இராமன் அரசாளப் போகிறான் என்றதும்
“சுடர்க்கெலாம் நாயகம் அனையதோர் மாலை”யை கையேயி
கூனிக்கு நல்க, அந்த மாலையைப் பெற்றதும் கூனி
ஆடிய நாடகத்தின் வர்ணனையே அந்த நான்கடிப் பாடல்.

இந்தப் பாடலுக்குள் கம்பன் நிகழ்த்தும் மற்றொரு பெருமாயமும் ஒளிந்திருக்கிறது.

பாத்திரங்கள் உணர்ச்சி வாயப்பட்ட நிலையில் செயல்படுவதை சித்தரிக்கும் போது உயர் திணைக்குரிய “அன்”/ “அள்” விகுதிகளைக் கம்பன் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

இலக்குவன் மயங்கிக் கிடப்பதை இராமன் காண நேர்கையில் அவனுக்கு நேரும் சமன்பாட்டுக் குலைவினை

“உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும் ; உணர்வு சோரும்
இழைக்குவது அறிதல் தேற்றான் “இலக்குவா இலக்குவா” என்று அழைக்கும்” என்பான் கம்பன்.

அதிகாயன் இறந்த செய்தி கேட்டு இராவணன் பதைப்புறுவதை
“திசையினை நோக்கும் ; நின்ற தேவரை நோக்கும் ; வந்த
வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப்
பிசையுறும் கையை மீசை கறுக்கொள உயிர்க்கும் பேதை
நசையிடைக் கண்டான்என்ன, நகும் அழும் முனியும், நாணும்”
என்று பாடுகிறான்.

ஆனால் மந்தரையோ உண்மையில் உணர்ச்சி வயப்பட்டு நடக்கவில்லை. சமன் குலைந்தாற்போல நாடகமாடுகிறாள்.

இராமனுக்கு அரசாட்சி என்றதும் கையேயி மகிழ்வாள் என்று நன்கறிந்தே அவளை மனம் திரியச் செய்ய மந்தரை சுயநினைவோடு நடத்தும் நாடகம் என்பதாலேயே “அள்” விகுதியிட்டு

“தெழித்தனள் ; உரப்பினள்; சிறுகண் தீ உக
விழத்தனள்; வைதனள் ; வெய்து உயிர்த்தனள் ;
அழித்தனள்; அழுதனள்”.

என்று கம்பன் அடுக்குகிறான். இதுவரை உளவியல் பாற்பட்டு சிந்தித்த இந்தப் பாடலை இலக்கணப் பார்வையில் கவிஞர் வைரமுத்து காட்டுகிறார்.

கம்பனை புதிய நோக்கில் அணுகவும் அறியவும் “தமிழுக்கு புனைபெயர் கம்பன்” எனும் கட்டுரை கைவிளக்காகத் திகழுமென்பதில் ஐயமில்லை.

இணைப்பு : தினமணி கட்டுரைக்கான சுட்டி.

www.epaper.dinamani.com/995325/Dinamani-Chennai/09112016#page/8/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *