யோகம் என்றால், பொருந்துதல். ஒன்றுடன் ஒன்று ஒத்திசைதல். தன்னில் தான் பொருத்தி, அதாவது, ஊனும், உயிரும், உணர்வும், சக்தி நிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில், ஒருமையுள் திளைப்பவர் யோகியர்.

நொடிகள் ஒவ்வொன்றிலும் முழுவதும் பொருந்தி நிகழ்கணத்தின் சாரம் பருகி வாழும் எவரும் யோகியரே! பாம்பணைப் படுக்கையில் முழுதுணர் அறிதுயிலில், நிகழ்கணத்தின் நிலைபேறாய் விளங்கும் இறைவனின் அவதாரம் நிகழுங்காலை, யோகியர் அவரவர் நெறிநின்று, அவதார நோக்கம் நிறைவேறத் துணை புரிந்தார் என்பதை இராமகாதை காட்டுகிறது.

இன்னொரு புறம், தன்னிடம் முரண்பட்டிருந்தும், தகுதியுள்ள உயிர்களுக்கு, நேர்ந்த பிறப்பின் நிறைவுக் கணத்திலேனும், அந்த ஒருமையை அருளிய பரமதயாளனின் பெருங்கருணைத் தன்மையையும் இராமகாதை காட்டுகிறது.

சம்பவங்களின் சாகசப் பின்னலே, இதிகாசத்தின் இன்றியமையாத அம்சம். புறத்தே உரையாடல்கள், உறவாடல்கள், களவாடல்கள், யுத்தங்கள் என எத்தனையோ நிகழ்ந்தாலும் இறைவன் திருமுன்னர், அடியவனாகவோ  கொடியவனாகவோ சென்று சேரும் உயிர்களுக்கு முக்தி அருளப்படுகிறது. அந்த உயிர் விழிப்புணர்வின் உச்சத்தில் விகசித்துக் கரைகிறது.

பரமாத்மாவுடன் சிற்றுயிர் ஒருமையை உணரும் உன்னத சம்பவங்களை கம்பன் காட்டுகிற போது, காவியத்தில் புறவயமாய் நிகழ்ந்தவற்றைவிட சூக்கும நிலையில் நிகழ்ந்தவை எத்தகைய அற்புதங்கள் என்னும் வியப்பு மேலிடுகிறது.

கம்பனில் யோகியர் செயல்படும் தன்மைகளையும், யோகநிலை அருளப்படும் தன்மைகளையும் அறிய முற்படுவதே இந்த நூலின் நோக்கம்.

யோகா என்றாலே விதம்விதமான ஆசனங்களைத்தான் மனம் முதலில் கற்பனை செய்து பார்க்கும். அவை, யோக நிலையை அடைவதற்கான முயற்சியில் ஒரு படிநிலை மட்டுமே ஆத்ம சாதகன் ஒருவன், தன் அவயவங்களைப் பயிற்சி. யோக நிலையை எட்டுவதற்கான முனைப்புக்குத் தடையாகும் பொறி புலன்கள் யோகப் பயிற்சியால் ஆன்மிகப் பயணத்திற்குத் துணையாக மாறுகின்றன.

இந்தப் பக்குவத்தை அருள்பவன் இறைவன் என்கிறார் திருவள்ளுவர்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்”

பொறி புலன்களைப் பக்குவப்படுத்தும் யோகக் கலை நீடுவாழும் நிலையையும் தருவது. உடம்பினை ஓம்புவதன் அவசியத்தைத் திருமூலர் உணர்த்தும் போது உடம்புளே உத்தமன் கோயில் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடமபினை யானிருந்து ஓம்புகின்றேனே

உடம்பை இழுக்கென எண்ணாமல், அதனை இறைவன் உறையும் ஆலயமாகக் கருதிப் பேணும்போது, ஆன்மிகப் பாதைக்குத் தடைசெய்த ஐந்து புலன்களே, அந்தப் பாதையில் விளக்காக மாறுகின்றன என்பதும் திருமூலர் வாக்கு.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே”.

பொறி புலன்கள், புறக்காட்சிகளிலும் புற நிகழ்வுகளிலும் தோய்ந்து, அதன் வழி மனதை சலனப்படுத்தக் கூடியவை. இந்தப் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் போது, மனமானது சமநிலை அடைகிறது. மனப்போராட்டம் அடங்குகிறது.

கம்பர், ஆற்றுப் படலத்தின் முதல் பாடலிலேயே இதனை விளக்குகிறார். நதிக்கரை நாகரிகம் என்பது நம்முடைய மரபு. சரயு நதிக்கரையின் நாகரிகம் யோக நாகரிகம் போலும்! மனப்போராட்டத்தை ஏற்படுத்தும் ஐம்புலன்களாகிய அம்புகள் நெறிமாறிச் செல்லாத வாழ்வுடையது கோசல நாட்டின் நாகரிகம் என்கிறார் கம்பர்.

“ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண்எனும்
பூசல் அம்பும்,நெறியின் புறம் செலாக்
கோசலம்”

என்கிறார்.

“பொறிகளின் மீது தனியரசாணை” என்பார் மகாகவி பாரதி. ஆன்ம விடுதலையே உயிர்க் கொள்கை என்று வந்து விட்டால், பொறிகளின் மீது அந்த இலட்சியம் மட்டுமே தனியாக ஆட்சி செலுத்த வேண்டும்.

சலனம், சபலம், என்று கலவை உணர்வுகள் கூட்டாகச் செயல்படவிடாமல், கோசல நாட்டில் வாழ்பவர்கள், தங்கள் ஐந்து பொறிகளையும் நெறியின் புறம் செல்லாத வண்ணம் தனியரசு செலுத்தினர் என்பது ஆற்றுப் படலத்தின் முதல் பாடலிலேயே புலனாகிறது.

யோகம் என்னும் சொல் பொருந்துதல், ஒருமை, -ஐக்கியம் ஆகிய பொருள் தருவது எனினும் யோகத்திற்கான பாதைகள் பல. அவற்றுள் க்ரியா யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்த நால்வகை யோகங்களின் வழிநின்று, தங்கள் ஆத்ம சொரூபத்தை உணர்ந்தவர்கள் அனைவருமே ஞானியர் தாம். தங்கள் ஆத்ம சொரூபத்தில் தாங்களே லயித்திருக்கும் ஞானியர் ஒரு தேசத்தில் திருவடிகள் பதித்தாலே அங்கே வளங்கள் பெருகும். அப்படியரு ஞானியை கம்பர் காட்டுகிறார். தன் மெல்லிய இயல்புகளால் மான் போன்ற வடிவம் கொண்ட வராகிய கலைக்கோட்டு முனிவரே அவர். கலைக்கோட்டு முனிவரைப் பற்றிச் சொல்லும் போது, “சக மனிதர்களை விலங்குகள் என்று கருதும் தன்மையர்” என்பதை கம்பர் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

“பாந்தளின் மகுட கோடி பரித்தபார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கென்று உன்னும் மனத்தன்”

“ஓத நெடுங்கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கெனவே உன்னும்
கோதில் குணத்து அருந்தவன்”

இத்தகைய முனிவர் வருகையால், மழை வளம் குன்றிய தன் தேசத்தில் மழை பொழியும் என்பதால் உரோமபதன் என்னும் அரசன் தன்னுடைய மண்ணில் கலைக்கோட்டு -முனிவரை எழுந்தருளச் செய்வது எப்படியென்று சிந்திக்கிறான்.
அவனுடைய தேசத்தில் உள்ள பெண்கள் சிலர், தங்களால் இயலுமென்று சொல்லி அந்த -முனிவரைத் தேடிச் செல்கின்றனர். மனிதர்களை விலங்குகள் என்று கருதக்கூடிய கலைக்கோட்டு முனிவர், அந்தப் பெண்களைத் தன்போல் முனிவர்கள் என்று கருதி மரியாதையுடன் நடத்துகிறார். அவர்கள் அழைப்புக்குக் கட்டுப்பட்டு உரோமபதனின் நாட்டுக்கு வருகிறார். உடனே மழை பொழிகிறது.

ஒரு ஞானி இருக்கும் தேசத்தில் பகை இருக்காது. மழை பொழியும். அந்த தேசத்தில் இருப்பவர்களுக்கு மனக்குறையும் நேராது என்கிறார் திருமூலர்.

“திகைக்குரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்குரியானொரு வழி இருக்கில்
பகைக்குரியார் இல்லை. பார்மழை பொழியும்
அகக்குறை கேடில்லை அவ்வுலகுக்கே”
என்பது திருமந்திரம்.

கலைக்கோட்டு முனிவரின் இயல்பு நுணுகி ஆராயத்தக்கது.

“சேய் போல் இருப்பார் கண்டீர்
உண்மை ஞானம் தெளிந்தவரே”

என்பார் பட்டினத்தார்.

மனிதர்களை விலங்கு போல் கருதுபவர் என்னும் போது, நமக்கு வள்ளலார் காலத்தில் வாழ்ந்த ஞானி ஒருவரின் தன்மை நினைவுக்கு வருகிறது. அவர், தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு போகிற மனிதர்களையெல்லாம் கண்டு, “நாய் போகிறது” “நரி போகிறது” “புலி போகிறது” என அவரவர் இயல்புகளுக்கேற்பச் சொல்வாராம். வள்ளலார் சென்ற போது “இதோ மனிதன் போகிறான்” என்றாராம்.

இந்த இரண்டு சம்பவங்களையும் எண்ணிப் பார்க்கையில், தவத்தன்மை இல்லாதவர்களை மனிதர்கள் என்றே கணக்கிலெடுக்காத ஞானியரின் இயல்பு புலப்படுகிறது. கலைக்கோட்டு முனிவரைக் காணச் சென்ற பெண்கள் தவத்தன்மை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.

யோகம் தியானம் போன்றவற்றை நவீனயுக மனிதர்களில் பெரும்பாலோர் மேலோட்டமாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். யோகா செய்வது உடல் நலனுக்காக; தியானம் செய்வது மனநலனுக்காக என்பதுதான் அந்த மேலோட்டமான புரிதல்.

என் குருநாதர், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களிடம் யோகா மூலமாக உடல் நலம் பெறுவது, மன அமைதி பெறுவது எல்லாம் நடக்குமா என்றொருவர் கேட்டார். அதற்கு சத்குரு சொன்ன பதில், “உடல் நலம் சிறப்பது, மனநலம் சிறப்பது என்பவையெல்லாம் யோகாவின் பலன்கள் அல்ல. அவையெல்லாம் யோகாவின் பக்க விளைவுகள்” என்பதாகும். அப்படியானால், யோகம், தியானம் ஆகியவற்றின் நேரடி பலன் என்ன? இதை கம்பர் ஒன்றரை வரிகளில் விளக்குகிறார்.

ஒரு குரு செய்யும் பெருங்கருணையானது, ஓர் உயிரின் வினை நீக்கத்திற்கு வழிகாட்டுவது. நாம் முன்னரே கண்டது போல ஐம்புலன்கள், நம் வாழ்வில் நல்வினையும், தீவினையும் நுழைவதற்கான வாயில்களாய் நிற்கின்றன.

குருவின் அருளும், ஆன்மீக நெறியில் அவர் காட்டும் வழிகளான யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் முயற்சிகளும், ஆத்ம சாதகனின் தீவிரத்திற்கேற்ப வினைச்சுமை குறையவோ வினைகள் அற்றுப் போகவோ செய்கின்றன.

திருவருளும் குருவருளும் நிகழ்த்துவது வினை நீக்கமே. ஆன்மிக நெறியில் ஒருவர் நடையிடத் தொடங்கும் போது திடீரென்று குடும்பத்தில் எல்லாமே எளிதாய் நடக்கிறதென்றால், அதுவரை அவற்றுக்குத் தடையாய் இருந்த வினைகள் நீங்கத் தொடங்குகின்றன, என்று பொருள்.

கலைக்கோட்டு முனிவரும் வசிட்டரும் இணைந்து தசரதன் அவையில் தேன்றுகிற காட்சியைப் பாடுகிறற கம்பர், “குற்றங்களை விளைவிக்கும் வினைகளை வளர்ப்பதே தன் கள்ள குணமாய் கொண்டு உழலும் ஐம்புலன்களாகிய அசடர்களின் செயலை அற்றுப் போகச் செய்யும் வசிட்டரும், மறைகளின் வடிவமாகவே விளங்கும் கலைக்கோட்டு முனிவரும் அரசவை பொலியும்படி தோன்றினர்” என்கிறார்.

“கசட்டுறு வினைத்தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும் அருமறை வடிவு போன்ற
விசிட்டனும் வேந்தவை பொலிய மேவினார்”
என்கிறார்.

ஞானியர் வருகை வான் மழையைத் தருகிறது. அவர்தம் அருளும், வழிகாட்டுதலும், வினைகளை அற்றுப் போகச் செய்வதோடு, குறிப்பிட்ட சங்கல்பத்துடன் அவர்கள் நிகழ்த்தும் வேள்விகளோ, நிறுவும் எந்திரங்களோ, உபதேசிக்கும் மந்திரங்களோ, அந்த சங்கல்பங்கள் நிறைவேறத்துணை செய்கின்றன என்பதை, தசரதனுக்குப் புதல்வர்கள் தோன்ற கலைக்கோட்டு -முனிவர் நிகழ்த்திய வேள்வியும், வேள்வியின் பயனும் உணர்த்துகின்றன.

ஐம்புலன்களை “ஐவர்” என்று சொல்லும் முறை வழியே, அவர்கள் ஐந்து மனிதர்களுக்கு சில சமயம், ஐந்து அரக்கர்களுக்கு சமம் என்பதை அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

ஆன்மத் தேடல் உள்ள உயிரை அலைக்கழிப்பதில் இந்த ஐவரும் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்கள், அவர்களே கூடுதல் வலிமை யோடும் திகழ்கிறார்கள், என்கிறார் திருநாவுக்கரசர்.

“மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டளவு உயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி உகக்கிறேன், உகவா வண்ணம்
ஐவரே அகத்தே வைத்தீர், அவர்களே வலியர், சால
செய்வது ஒன்றறிய மாட்டேன், திருப்புகல் ஊரனீரே”

என்கிறார்.

இந்த முனிவர்கள் இருவரும், ஐவரை அறுவர் ஆக்குவர் என்னும் கம்பரின் சொல்நயம் நினைந்து மகிழத்தக்கது. பல்லாண்டுகளுக்கு முன்னர் கோவையில் கம்பன் கழகக் கவியரங்கம். தலைமைக் கவிஞர், அருட்கவி அரங்க சீனிவாசன். நாங்கள் ஐந்து கவிஞர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பாட வந்திருந்தோம். தலைமைக் கவிதையில் அருட்கவி, “அரங்கிலே கவிஞர் ஐவர் என்னுடன் சேர்த்து அறுவர். உங்களை எழுவர் ஆக்காமல் இருப்பர் ஆக்குவர்” என்றார். கம்ப நாடனால் ஆட்கொள்ளப்பட்டவர் ஆயிற்றே அவர்!

திருவருளும் குருவருளும் நிகழ்த்தும் அரும்பணி, வினைநீக்கம் என்பதை கம்பர் மிகத் தெளிவாக உணர்த்தும் இன்னோர் இடம். ஆரண்ய காண்டத்தில் விராதன் வதைப் படலம்.

குபேரனின் சாபத்தால் அரக்கவுரு கொண்ட கந்தர்வனாகிய தும்புருவே, விராதனாய் உலகில் உழல்கிறான். இராமனின் திருவடித் தொடர்பால் அவனுக்கு விமோசனம் என்று குபேரன் உணர்த்தியிருந்தான். அதே போல் நிகழ்கிறது. அந்த அனுபவத்தை விராதன் சொல்வதாய் கம்பர் எழுதிக் காட்டும் மூன்று வரிகள் மிகவும் முக்கியமானவை,

“கள்ள மாய வாழ்வெலாம்
விள்ள ஞானம் வீசுதாள்
வள்ளல்”

மனம்போன போக்கில் அரக்க வாழ்வு வாழ்ந்த விராதனுக்கு இராமனின் அருள் தாமே வந்து வெளிப்பட்டது எங்ஙனம்? இதற்கு கம்பர், கவிக்கூற்றாகவே அரியதொரு விளக்கத்தை வழங்குகிறார்.

பொறிபுலன்களில் ஈடுபட்டு, திசைமாறிப் போன புத்தி உடையவன் தான் விராதன். ஆனால் அந்தப் புத்தியால் கூட உணரமுடியாத விதமாக, உள்ளுணர்வில் இறையுணர்வு தூண்டப்பெற்றது. கந்தருவனாய் இருந்த காலத்தில் திருமால் மீது கொண்டிருந்த பக்தியும் துணை செய்ய, இவையெல்லாம், தான் வினைநீக்கம் பெறுவதற்குரிய தருணம் இது என்னும் அறிவு வரும்படி உதவினவாம்.

“பொறியின் ஒன்றி, அயல்சென்று திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலைநின்ற நினைவு உண்டதனினும்
பிறவில் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்
அறிவு வந்துதவ நம்பனை அறிந்து பகர்வான்.

பெரும்பாலான மனிதர்களுக்கு முன்னரே இறையணுக்கமோ, குருஅணுக்கமோ வாய்க்கப் பெற்றிருப்பின், இந்தப் பிறவியிலும் அந்த அருட் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் அதிலிருந்து சட்டென்று மீளும் விதமாய் அருள் அவர்கள் வாழ்வில் இறங்குகிறது.

விராதன் சொல்லும் இரண்டு வாக்கு மூலங்கள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன. “சாபம் வந்துற்ற காலத்திலிருந்து இதுவரை அடியவனாகிய நான், நல்வழியை நாடவேயில்லை. தீமையையே தேடினேன். ஆயினும் என் பழைய நல்வினை என்னைத் தூண்டியதால் வேதங்களைச் சூடியவன் பாதங்கள் தீண்டி இன்று தேறினேன்” என்கிறான்.

“தூண்ட நின்ற தொன்மைதாய்
வேண்ட நின்ற வேதநூல்
பூண்ட நின்ற பொலம்கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன்”

இதற்குச் சில பாடல்கள் முன்னதாக, விராதன் தன் துதியில் இன்னொரு செய்தியைச் சொல்கிறான்.

“யாரையயும் ஒப்புரைக்க முடியாத ஒருவனே! என்னுடைய முந்தைய தவப்பேற்றால் நீ பாற்கடலை விட்டு, என்னை அணுகியதால் இந்தப் பிறவியைக் கடந்தேன். இனி பிறவாத நிலையையும் பெற்றேன். என் நல்வினை – வினை இரண்டையுமே உன் தருவடிகளால் துடைத்தாய்” என்கிறான்.

ஒப்பு இறையும் பெறவரிய ஒருவா! முன் உவந்துறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந்தவத்தால் அணுகுதலால்
இப்பிறவிக் கடல் கடந்தேன். இனிப் பிறவேன், இருவினையும்
துப்புறழும் தீர்ந்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ”

எனவே விராதன் வதைப் படலத்தில் இராமனுக்கு இரண்டு வேலைகள். ஒன்று, தன் திருவடித் தொடர்பால் சாபம் நீக்கி அவனை மீண்டும் கந்தர்வனாக்குவது; இன்னொன்று அரக்க வடிவில் விராதன் சேர்த்த தீவினைகளையும், கந்தர்வனாய் இருந்த போது சேர்த்த நல்வினைகளையும் தீர்த்து முக்தி கொடுப்பது. அதிலும், தன் வினைகளை அறுக்க வந்த இராமனுடன் போரிடுவதால் ஒரு தீவினை ஏற்படுமே அதையும் சேர்த்தே அறுத்தது!
முக்தி வாயிலில் நிற்கிற போதும் அந்த கந்தர்வனுக்குள் நன்றியுணர்வின் தீவிரம் மெல்லிய நகைச்சுவையாய் வெளிப்படுகிறது.
விராதன் என்னும் அரக்க வடிவில், தேடிக் கொண்ட தீமைகள் தனது சொந்தத் திறமையால் தேடிக்கொண்டவையாம். “அந்தத் தீமையை எல்லாம் அறுக்க வந்த இராமனே! உன்னிடம் முட்டாள்தனமாக மோதியதை பொறுத்தருள் வாய்” என்பதை இறுதிச் சொல்லாய்ச் சொல்லி முக்தியில் கரைகிறான்.

“திறத்தின் வந்த தீதெலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை, ஊழியாய்
பொறுத்தி என்று போயினான்”

உடல் பிணியும் மனப்பிணியும் அகல்வதற்காக யோக வகுப்புகளில் சேர்பவர்கள், அறிந்து அறியாமலும் தங்கள் பிறவிப் பிணி அகலும் நெறியில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *