யோகம் என்னும் சொல்லின் இயல்பை மீண்டும் ஒருமுறை ஆராய்வோம். யோகம் என்றால், ஒருமை, பொருந்துதல் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பதஞ்சலி முனிவரைக் கேட்போம்.
யோகப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகிறார்கள் என்கிறார் பதஞ்சலி.
“ததா த்ராஷ்டு ஸ்வரூபேஸ வஸ்தானம்” என்பது பதஞ்சலி சூத்திரம். உடல், மனம் என்னும் அடையாளங்களைக் கடந்து தன் சுயசொரூபத்தில் பொருந்தியிருத்தலே யோகம் எனப்படும். அதனால்தான், இராம இலக்குவரை தாடகை வதத்துக்காக அங்க நாட்டிற்கு அழைத்துச் செல்லும் விசுவாமித்திரர், அந்த நாட்டில் சிவபெருமான் யோகம் புரிந்தார் என்கிறார்.
“பற்று அவா வேரொடும் பசையற, பிறிபோய்
முற்ற. வாலுணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே”
சிவபெருமான் தியானம் புரிந்ததை “யோகு செய்தனன்” என்றே குறிக்கிறார்.
கருவூர்த் தேவரும் திருவிசைப்பாவில் உமையம்மையுடன் சிவபெருமான் தவம் செய்வதை “யோகு செய்வான்” என்றே குறிக்கிறார்.
“மங்கையோடு இருந்தே யோகு செய்வானை
வளரிளம் திங்கள் முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளை கங்கை
கொண்ட சோளேச்சரத்தானை
அங்கை ஓடேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்த சொல் மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே”
என்பது அந்தப் பாடல்.
அரசர்களைப் பொறுத்தவரை ஆன்மிக நெறியில் முற்றாக, முழுதாக நடையிடாவிட்டாலும், ஆன்மிகத்தின் அடிப்படை தெரிந்தவர்கள். ஆதலால் ஞானியருக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். தன்னை உணர்ந்த ஒருவரை அரசர்கள் அக்காலத்தில் குலகுருவாக வரித்துப் போற்றியமைக்கு இந்தப் புரிதலே காரணம். ஜனகர், அரசராகவும், தன்னையுணர்ந்த ஞானியாகவும் திகழ்ந்தார்.
தன் வேள்விக்கு இடையூறு செய்யும் அரக்கரை அழிக்க இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு விசுவாமித்திரர் கேட்கும் போது அதற்கு மனம் ஆற்றாமல் மாற்று வழிகளைப் பரிந்துரைக்கிறான் தசரதன்.
ஆனால், விசுவாமித்திரருடன் இராமனை அனுப்புமாறு வசிட்டர் சொன்ன அடுத்த விநாடியே இராமனை அழைத்து வர ஆணை பிறப்பிக்கிறான். அதற்கென்றே காத்திருந்தது போல் வந்து நிற்கிறான் இராமன்.
“குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்
திருவின் கேள்வனைக் கொணர்மின்சென்றென
வருக என்றனர் என்னலோடும் வந்து
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான்.”
குருவின் சொல்லுக்கு மறுசொல் இல்லை என்பதை தசரதன் நன்கு அறிந்து வைத்திருந்தான்.
ஒரு மனிதனின் வாழ்வில் தொடர்ந்து வெற்றிகள் வருகின்றன, துன்பங்கள் அகல்கின்றன என்றால், அதை மேலோட்டமாக பார்ப்பவர்கள் “அதிர்ஷ்டம்” என்கிறார்கள்.
இந்தச் சொல்லின் உண்மையான பொருள், கண்ணுக்குத் தெரியாத காரணம் (அ&திருஷ்டம்) என்பதாகும். இந்தப் பிறவியிலோ, முந்தையப் பிறவியிலோ மேற்கொண்ட தவத்தின் பயன், திருவருளும், குருவருளும் கொண்டு செலுத்தும் திறன் ஆகியனவே கண்ணுக்குத் தெரியாத அக்காரணங்கள்.
தவவாணர்களின் நல்லருளே எல்லா நலன்களையும் கூட்டுவிக்கும் என்பதை ஞானியர்
நன்கறிந்திருந்தனர். இதற்கு கம்பனில் சில சான்றுகளைக் காண்போம்.
தாடகை வதம் முடிந்து, அகலிகைக்கு சாப விமோசனம் தந்த பிறகு இராம இலக்குவருடன் மிதிலை வருகிறார் விசுவாமித்திரர். வழியில் மிதிலை வருகிறார் விசுவாமித்திரர். வழியில் சதானந்த முனிவரைச் சந்திக்கின்றன சதானந்தர், அகலிகையின் புதல்வர்.
அங்கே கம்பர் மிக நுட்பமாக ஒரு குறிப்பினை உணர்த்துகிறார்.
“மொய்கொள் வீரன் முளரிஅம் தாளினால்
மெய்கொள் மங்கை அருள்முனி மேவினான்”
அதாவது, கல்லாய்க் கிடந்து இராமனின் கழல்துகள் பட்டு, உருவம் பெற்றாளே அகலிகை, அவள் பெற்ற மகன் என்பதன் மூலம், இராமன் சதானந்த முனிவருக்குப் பாட்டன்முறை ஆகிவிட்டான்! இருவர் உரையாடலும் எப்படி இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு காவியம் கற்போர் மனதில் ஏற்படுகிறது.
சதானந்தரை இராமன் மனம் மகிழ்ந்து வணங்க, அவர் மிகுந்த பல ஆசி மொழிகளைச் சொல்லிவிட்டு, விசுவாமித்திரரை நோக்கி, “தாங்கள் எழுந்தருளும்படி இந்தத் தலம் என்ன தவம் செய்ததோ” என்று தொடங்குகிறார்.
“தவத்தில் தெளிந்த சதானந்தரே! தெரியுமா? இந்த வள்ளல்தான் தாடகை வாழ்வை முடித்து, என் வேள்வியை முடித்து, உன் அன்னையின் சாபத்தை முடித்து, என் மனத்தின் துயரங்களையெல்லாம் முடித்தான்” என்கிறார், விசுவாமித்திரர்
“வடித்த மாதவ! கேட்டி, இவ் வள்ளல்தான்
இடித்த வெங்குரல் தாடகை யாக்கையும்
அடுத்த என் வேள்வியும், நின் அன்னை சாபமும்,
முடித்து என் நெஞ்சத்து இடர் முடித்தான்”
என்றான்.”
விசுவாமித்திரர் இவ்வளவு சொல்லியும், சதானந்தர் எவ்வித வியப்பும் கொள்ளவில்லை. மகிழ்ச்சிக் குறிப்பும் காட்டவில்லை. அவ்வளவு ஏன்? இராமன் இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.
சதானந்தர், விசுவாமித்திரைப் பார்த்து, “மாதவம் கொண்டவரே! தங்கள் அருள் துணையாக இருந்தால் இந்த வீரர்களுக்கு எந்தச் செயல்தான் சாத்தியமில்லை?” என்கிறார்.
“மாதவ நின்னருள்
இன்றுதான் உளதேல், அரிது யாதிந்த
லென்றி வீரர்க்கு?”
என்கிறார்.
அத்துடன் விட்டாரா என்றால், இல்லை. இராமனை நோக்கி
“விசுவாமித்திரரின் பெருமையெல்லாம் உன் புத்தியில் பதியும் விதமாக நான் விரித்துரைக்கிறேன், கேள்” என்று விசுவாமித்திரர் வரலாற்றை விரித்துரைக்கத் தொடங்குகிறார்.
“நறுமலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென் கேள்”
என்னும் சதானந்த முனிவரின் இயல்பை நாம் வியந்து பார்க்கிறோம்.
கைவல்ய நவநீதத்தில், “புதுமை என்று எதையும் பாரார்” என்றோர் இலக்கணம் சொல்லப்படும்.
“சென்றது கருதார், நாளை
சேர்வது நினையார், கண்முன்
நின்றது புசிப்பார் வெய்யில்
நிலவாய்விண் விழுது வீழ்ந்தும்
பொன்றின சவம் வாழ்ந்தாலும்
புதுமையாய் ஒன்றும் பாரார்
நன்றிது என்றார், சாட்சி
நடுவான சீவன் முத்தர்
என்பது கைவல்ய நவநீதம், சீவன் முத்தர்களுக்கு சொல்லும் இலக்கணம்.
சதானந்தருக்கு, இராமனால் விமோசனம் பெற்றவள் தன்னுடைய அன்னை என்னும் முனைப்பும் இல்லை. பெற்ற தாயாகவே இருந்தாலும் அவளுடைய இன்ப துன்பங்களுக்கு அவளுடைய வினைகளே காரணம் என்கிற தெளிவு இதற்குக் காரணமாக இருக்கலாம்.
“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்”
என்பார் குருஞானசம்பந்தர்.
இரண்டாவதாக, இளமை தொட்டு ஞானியரின் அணுக்கமும் அவர்தம் அருளாசியையும் இராமன் பெற்றிருத்தலே அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் என்னும் உறுதிப்பாடும் அவரிடம் இருந்தது.
இதேபோல் ஒரு காட்சி அயோத்தியிலும் அரங்கேறியது. மகப்பேற்றுக்கான வேள்வியை நடத்த, கலைக்கோட்-டு முனிவரை தசரதன் அயோத்திக்கு எழுந்தருளச் செய்கிறான்.
தன்னை அழைத்திருப்பதற்கான காரணம், முனிவருக்குத் தெரியாது. தசரதன் அவரை வரவேற்று முகமன் கூறுகிறான். கலைக்கோட்டு முனிவர், “வசிட்டர் என்னும் தவவன்மையுள்ளவர் துணை இருக்கும்போது உன் செயல்களில் குறையுமில்லை. அரசர்களில் உனக்கு நிகருமில்லை” என்கிறார்.
“மன்னர்மன்னா! கேள்! வசிட்டன் என்னுமோர்
நன்னெடுந்தவன் துணை நவைஇல் செய்கையால்
நின்னை இவ்உலகினில் நிருபர் நேர்வரோ”
என்கிறார்.
அத்தனை பராக்கிராமங்களும் கொண்ட சக்கரவர்த்தியின் ஆயுதமாகவும் கவசமாகவும் ஒரு தவசியின் அருள் அமைகிறது என்பது உபசாரச் சொல்லன்று. உண்மையே! இதற்கு சான்றாக வசிட்டனின் அருள் திறத்தை ஒரு காட்சி வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட இன்று நாம் பெரும்பாலும் கணினியையே நாடுகிறோம். அல்லது பிறந்த நேரக் கணிப்புக்கேற்ப முதலெழுத்தைத் தேடுகிறோம். குழந்தைக்கொரு பெயரை வைத்துவிட்டு அந்தப் பெயருக்கேற்ப குழந்தை வளராவிட்டால் வாடுகிறோம்.
“ஆரோக்கியசாமியென்று பெயர், ஆயிரத் தெட்டு நோயிருக்கும்” என்ற கதைதான்.
ஆனால், தசரதன் புதல்வர்களுக்கு வசிட்டர் பெயர் சூட்டும் பாங்கு, அவரின் ஞான திருஷ்டியை உணர்த்துகிறது. இராமனைக் கையில் எடுத்ததுமே, இது பரம்பொருள் என்று தெரிகிறது. பெயரற்ற பரம்பொருளுக்கு இராமன் என்னும் பெயர் ஈகிறார்.
மற்ற மூன்று குழந்தைகளுக்கும் பெயர் சூட்டக் கையில் ஏந்தும் போது வசிட்டர், அவர்களைக் குழந்தைகளாகப் பார்க்கவில்லை. அவர்களை ஒளிவடிவமாகவே உணர்கிறார்.
“உதித்திடு மற்றைய ஒளியை
பரதன் எனப்பெயர் பன்னினன் அன்றே”
“விலக்கரு மொய்ம்பின் விளங்கொளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் நன்றே”
“இவ்வொளியால்
எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணா
சத்துருக்கன் எனச் சாற்றின நாமம்”
ஒளிபொருந்திய குழந்தைகள் என்று மட்டும் இதனைக் கொள்ளலாகாது. ஞானியர் கண்களுக்கு, பருவுடலைச் சுற்றியுள்ள ஒளியுடல் நன்கு புலப்படும். ஆங்கிலத்தில் இதனை ணீuக்ஷீணீ என்கிறார்கள். யோக மரபில், இந்த ஒளியுடலை அவ்வப்போது தூய்மை செய்துகொள்ள சில முறைமைகள் உண்டு.
பருவுடலைச் சுற்றியுள்ள ஒளியுடலில் கவனம் செலுத்தி, அந்த உயிர்களின் இயல்பை அறிந்து அவற்றின் இயல்புகளுக்கேற்ற நாமங்களை வசிட்டர் சூட்டினார் என்பது இதன்மூலம் நமக்குப் புரிய வருகிறது.
தன் சீடர்களுக்கு சந்நியாச தீட்சை தந்து தீட்சா நாமம் சூட்டும்போது ஒரு குரு இதைத்தான் செய்கிறார். வசிட்டருக்கோ தன் சீடர்கள் பிறந்ததுமே இதைச் செய்யும் சூழல் வாய்க்கிறது.