இனி, கம்பனில் மிகவும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கே ஆராய்வது பொருத்தமாக இருக்கும். திருமண மேடையில் இராமனும் சீதையும் தோன்றிய காட்சியை
“ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்”
என்கிறார் கம்பர்.
வாழ்வியல் இன்பங்களுக்கும் போகம் என்று பெயர். பேரின்பத்தில் பொருந்துதலாகிய இறையின்பத்திற்கும் போகம் என்று பெயர் “சிவபோகம்” என்பது ஓர் உதாரணம். சிவ போகத்துக்கான பாதை சிவயோகம் ஆகும்.
உலகியல் ஆனாலும், அருளியல் ஆனாலும், எய்த விரும்பிய இன்பத்தை அடைவதற்கான வழியில் செயல்பட்டு, அந்த இன்பத்தை அடைதல் என்பது ஒரு பயணம்.
எனவே யோக நெறியின் உச்சநிலை, இறைவனுடன் இணைவது, அதற்கான பாதையில் முயலுமொரு சாதகன், தன்னுடைய பருவுடல், சூட்சும உடல், சக்தியுடல் போன்றவற்றில் ஓர் ஒருமையைக் காண்கிறான்.அந்த ஒருமையை எய்திய ஞானியை குருவாகக் கொள்கிறான்.
தீவிர சாதனைகள் வழி அந்த இலட்சியத்தை எட்டுகிறான் என்பதை இராமன் – சீதை திருமணக் கோலத்திலும் கம்பர் நமக்கு நினைவுபடுத்துகிறார்.
இங்கே அடைய வேண்டிய போகமாக இராமனும், அடைவதற்கான வழியாக – யோகமாக -சீதையும் விளங்குவதைக் கம்பர் சுட்டுகிறார்.
தத்துவ மரபில் பெருமானை எட்டுவதற்கான பெருநெறியை அருள்பவளாக பிராட்டியே இருக்கிறாள். சைவம், வைணவம் இரண்டிலும் இந்நிலை உண்டு.
இறைவனுடன் உயிரைக் கலக்கச் செய்து அந்தப் பேரின்ப யோகத்தை அருள்பவளாக சக்தி திகழ்வதை திருமூலர் சுட்டுகிறார்.
“போகஞ்செய் சத்தி, புரிகுழலாளடும்
பாகஞ்செய்து அங்கே பராசக்தியாய் நிற்கும்
ஆகஞ் செய்து ஆங்கே அடியவர் நாடொனும்
பாகஞ்செய் நடனம் படர்கிற கொம்பே
நின்ற பராசக்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்
ஆகிய திருமந்திரச் செய்யுட்களை இங்கே ஒப்பு நோக்கலாம்.
குறிப்பாக 1057ஆம் பாடலில், போகசக்தி பராசக்தியின் அம்சம் என்பதை திருமூலர் சுட்டுகிறார், சீதையும் வியூக நிலையில் திருமால் உடனுறை திருமகளின் அம்சம் என்பதை ஒப்பு நோக்கி மகிழலாம்.
திருநாவுக்கரசர் உலக வாழ்வின் இன்பங்களைக் குறிக்கையில்,
“துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ” என்பார். துய்ப்பன என்பவை, அனுபவிக்க வேண்டிய செல்வங்கள் மற்றும் உலக இன்பங்கள். உய்ப்பன என்பது, அதற்கான பாதை.
சிலருக்கு எல்லா வசதிகளும் கூடி குடும்பமும் நன்றாக அமைந்தால் “யோகக்காரர்” என்பார்கள். ஆனால் உலக வாழ்வின் இன்பங்களை உருவாக்கி, அவற்றை அடைவதற்கான பாதைகளை உருவாக்குவதோடு சிவபெருமான் நிற்பதில்லை.
உரிய பக்குவத்தில் அந்த இன்பங்களைத் துறக்கவும் துணை செய்கிறார்.
“துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ”
என்கிறார் திருநாவுக்கரசர்.
உலக இன்பங்களில் திளைத்தலும். இறை நாட்டம் முதிர்கிறபோது உலக இன்பங்களை விடுதலுமே வீடுபேறு என்கிறார் அவ்வையார்.
“ஈதலறம் தீங்கின்றி ஈட்டல் பொருள்
காதலிருவர் கருத்தொருமித் & தாதரவு
பட்டமே இன்பம்! பரனைநினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்பவீடு”
என்கிறார்.
இராம நாமத்திற்கும் இதுவே இலக்கணம் ஆகும். உலக வாழ்வுக்கு வேண்டிய நன்மைகளையும் செல்வங்களையும் தருவது, பாவங்களைச் சிதைப்பது, பிறவியும் மரணமும் இன்றி வினைத்தொகுதி தீர்ப்பது ஆகியன இராம நாமத்தால் நிகழ்பவை.
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவ-மும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே “ராம” என்றிரண்டு எழுத்தினால்”
ராமநாமத்தின் மேன்மையினைச் சொல்வதுடன் அந்த நாமத்தை செபிக்கிறவர்கள் பெறும் சிறப்பும் இங்கு சுட்டப்படுகிறது.
போகமும் யோகமும் ஒத்தார் என்கிற உவமையோக நெறி சார்ந்தும், வாழ்வுநெறி சார்ந்தும் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
இது யோகத்தின் மையப் படிநிலை. யோகத்தின் உச்சப்படிநிலை என்றொன்று உண்டு. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஓர் அங்கமாக உணர்வது. உணர்வதென்றால், அனுமானமாக உணர்வதல்ல. அனுபவபூர்வமாக உணர்வது.
ஒவ்வோர் உயிருமே அப்படி உணர்வதற்கான சாத்தியக் கூறுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்!” என்று சொல்லப்படுவது பிரபஞ்ச ஒத்திசைவுக்கான கருவி கரணங்களுடன் படைக்கப்பட்டிருப்பதை உணர்த்துவதற்குத்தான்.
யோக மரபில், இது குறித்து தரப்படும் விளக்கங்களைப் பார்த்துவிட்டு, கம்பனில் அதற்கான சான்றையும் காண்போம்.
மைசூர் சாமுண்டி மலையின் குறிப்பிட்ட ஒரு பாறையில் என் குருநாதர் சத்குரு ஞானோதயமடைந்தார். அதே பாறையில் அவருடன் ஒரு நேர்காணல் நிகழ்த்துகிற பெரும்பேறு வாய்த்தது. அங்கே நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
“சத்குரு! இலட்சக்கணக்காகவர்கள் தங்கள் யோக வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்கள். ஒரே வகுப்பில் பத்தாயிரம் பதினைந்தாயிரம் பேர் கூட பங்கேற்பதுண்டு. அவர்கௌல்லாம் நீங்கள் தான் தங்கள் குருநாதர் என்பதை நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் ஒரே நேரத்தில் அத்தனை பேருடன் உங்கள் தொடர்பு எவ்விதம் அவர்களுடன் நீங்கள் எப்படித் தொடர்பில் இருக்கிறீர்கள்?” என்றேன்.
சிறுபுன்னைகைக்குப்பின் சத்குரு சொன்னார்; “உங்களுக்கு தான் இவ்வளவு பேர் இருக்காங்க, அவர் தனி, இவர் தனின்னு தெரியுது. அதனால அவர்வேற இவர் வேறனு தோணுது. நான் எல்லோரையும் என்னில் ஒரு பாகமா உணர்கிறேன். அதனாலே என்னை எப்படி நான் உணர்றேனோ அப்படியே எல்லோரையும் உணர்றேன்” என்றார்.
இதனை சத்குரு பிறிதோர் இடத்திலும் விரிவாக விளக்குகிறார்கள்:
“யோகா என்பது உடற்பயிற்சி அல்ல. யோகப் பயிற்சிகள் யோகாவின் ஒரு அம்சம் மட்டும் தான். இந்தப் பயிற்சிகள் நீங்கள் யோகநிலையை எட்டுவதற்கு உங்களுக்கு உதவும் ஒரு கருவி. அவ்வளவுதான். யோகா என்றால் “சங்கமம்” எது எதோடு சங்கமிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். நவீன விஞ்ஞானம், முழுப்பிரபஞ்சமும் ஒரேசக்தியின் அதிர்வு என்கிறது. அப்படியெனில் இங்கு எல்லாம் ஏற்கெனவே ஒன்றுபட்டுத்தான் இருக்கிறது. எதுவும் தனியாக இல்லை. மனிதனின் புரிதலில் மட்டும்தான் நீ, நான், அது, இது என பலவாறாகப் பிரிவினை இருக்கிறது. இப்படிப் பிரித்தறியும் நிலையில் இருந்து உங்கள் புரிதலை சற்றே உயர்த்தினால், இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்க்கும் நிலைக்கு வருவீர்கள். அந்நிலையில் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்பதை நீங்கள் உணரத் துவங்குவீர்கள் இதுதான் யோகநிலை.
“ஒரு யோகி என்பவர். இந்த பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர். நவீன விஞ்ஞானம் எல்லாம் ஒரே சக்தி என்று சொல்கிறது. ஒரு விஞ்ஞானி அறிவின் அளவில், தான் செய்த ஆராய்ச்சி வாயிலாக இதைப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு அதைப் பற்றிய அனுபவம் கிடையாது. மதம் சார்ந்த மனிதருக்கும் அதைப்பற்றிய எந்த அனுபவமும் இல்லை. அவர் அதை நம்புகிறார். அவ்வளவு தான். ஒரு யோகி என்பவர் ஆராய்ச்சி முடிவுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ ஏற்பதில்லை. அவர் அறிந்துகொள்ள விரும்புபவர், எல்லாவற்றையும் அவரது அனுபவத்தின் மூலமாக அறிந்து கொள்ள விரும்புபவர் அப்படி அவர் அறிந்துகொண்டு விட்டால், அவரை “யோகி” என்கிறோம்.
“இப்போது உங்கள் அனுபவத்தில் உங்களை சுற்றியுள்ள மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஜடப்பொருள்கள் எல்லாவற்றையும் உங்களுக்குள் ஒரு பாகமாக, உங்கள் கைகளில் உள்ள ஐந்து விரல்களை எப்படி உணர்கிறீர்களோ அதேபோல் எல்லாவற்றையும் உங்களுக்குள் ஒரு பாகமாக, நீங்கள் உணர்ந்தால், நீங்களும் யோகி. அந்நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு நீதிபோதனைகள் தேவைப்படாது. நீங்கள் இந்த மனிதரிடம் அன்பாக இருங்கள். அவரைத் துன்புறுத்தாதீர்கள். அவரைக் கொல்லாதீர்கள். அவரிடம் திருடாதீர்கள் என்றெல்லாம் உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்காது. இதுதான் யோகா. ஆக, யோகா என்பது தத்துவமோ, கருத்தோ, நம்பிக்கையோ அல்ல.”
இந்தத் தன்மைக்கு அயோத்தியா காண்டத்தில் வனம்புகு படலத்தில் ஒருவரை உதாரணமாகக் காட்டுகிறார் கம்பர்.
இலக்குவனோடும் சீதையோடும் இராமன் வனம்புகும் போது அவர்களை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருகிறார். அவரை கம்பர் இப்படி அறிமுகம் செய்கிறார்.
வேள்வி வல்லார், பிரம்மனால் படைக்கப்பட்ட உயிர்களை எல்லாம் தன் உயிராகவே பாதுகாக்கிறவர். எழுலகங்களையும் திருமாலின் துணையின்றி, தன் சங்கல்பத்தாலேயே படைக்க வல்லவர்.
“செந்தழல் புரிசெல்வன் திசைமுக முனிசெவ்வே
தந்தன உயிரெல்லாம் தன்னுயிர் எனநல்கும்
அந்தணன், உலகேழும் அமைஎனின். அமரேசன்
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் செல்வான்”
இதில், “திசைமுக முனி செல்வே தந்தன உயிரெல்லாம் தன்னுயிர் என நல்கும் அந்தணன்” என்பது. பரத்துவாசர் யோகநிலை என்னும் ஒருமைநிலை உற்றதை உணர்த்துகிறது.
“எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை தாராய் பராபரமே” என்கிறார் தாயுமானவர்.
தன்னில் இயங்கும் அதே உயிர்ச்சக்தி, ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான அத்தனை உயிர்களிலும் இயங்குவதை உணர்வதே ஒருமை நிலை ஆகும்.
அதனால்தான், பரதனின் பெரும்படைக்கு உணவு படைக்க பரத்துவாசர் எண்ணியதுமே சுவர்க்கத்திலிருந்து பல்வகை உணவுகளையும் அமுதத்தையும் கொண்டு வந்து அரம்பையரே பரிமாறினார் என்று பாடுகிறார் கம்பர்.
“பிற உயிர்களின் பசியை பரத்துவாசர் தன் பசியாய்
உணர்ந்ததாலேயே சுவர்க்கத்தின் வாயில் திறந்தது.”
பிறரைப் பார்த்து கைகுவித்து வணக்கம் சொல்வதன் அடிப்படையும் இதுவே. எதிரில் உள்ள மனிதர் பற்றிய நம் முன்முடிவுகளைக் கடந்து, அவருக்குள் தெய்விகம் உயிர்ச்சக்தியாய் தொழிற்படுகிறது என்கிற உணர்வுடன் வணக்கம் சொல்லும்போது, மனதில் இதுவரை உணராத அமைதியையும் பணிவையும் உணர இயலும்.
ஒருமை நிலை நோக்கிய உயிரின் பயணத்தில் இதுவே முதல்படி ஆகும்.