இதிகாசங்களில் தலைமைப் பாத்திரங்களும் சரி, எதிர்நிலைப் பாத்திரங்களும் சரி, யோகியரிடமும், இறைவனிடமும், தேவர்களிடமும் சில கருவிகளைப் பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
ஆயுதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தாமைக்குக் காரணம், ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல. மந்திர உபதேசங்களும் கருவிகள்தாம்; வரங்களும் கருவிகள்தாம்.
யோகத் திருக்கோயிலாகிய தியானலிங்கத்தில் அனைத்து சமயத்தினரும் வருகை தருவதுண்டு. அங்கே திருநீறு வைக்கப்பட்டிருக்கும். பிற நாட்டிலிருந்து அங்கே வரும் மற்ற சமயத்தினருக்கு அது குறித்துக் கேள்விகள் எழுவதில்லை.
ஆனால் இந்து சமயத்தினர் சிலர், “எல்லோருக்குமான இடம் என்றால் திருநீறு எதற்காக” என்று கேட்பதுண்டு. அதற்கு சத்குரு சொல்லும் பதில், “திருநீறு என்பதை ஒரு மதத்தின் அடையாளமாகப் பார்க்கிறீர்கள். ஆனால் நம் மரபில் எல்லாமே முக்திக்கான கருவிகளாகவே உருவாக்கப்பட்டுள்ளன.
“ஏழு சக்கரங்கள் கூடும் இடங்களில், தொப்புள், மார்பின் நடுப்பகுதி, தொண்டைப்பகுதி, புருவமத்தி போன்ற இடங்களில் திருநீறு அணிந்து கொண்டு சக்திமிக்க தலம் ஒன்றில் நுழைகிறீர்கள் என்றால், அங்கிருக்கும் அதிர்வுகளை ஏற்பதற்கு திருநீறு துணை செய்கிறது.
“இந்த மரபில் எல்லாமே காரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களை நீங்கள் உணர கடவுளும் ஒரு கருவியே” என்பார் சத்குரு.
தாடகை வதம் முடிவடைந்த பின் விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலங்கள் வழங்குகிறார். அந்தப் படைக்கலம் எத்தகையது என்று சொல்ல வருகிற கம்பர்,
“மண்ணவர் வறுமை நோய்க்கு
மருந்தன சடையன், வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன,
படைக்கலம் அருளினானே”
என்கிறார்.
பசித்திருப்பவர்களைக் கண்டு “உணவுண்ண வாருங்கள்” என்று பரிவு ததும்ப சடையப்ப வள்ளல் சொல்லும் சொல்லே போன்ற “படைக்கலங்கள்” என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகும். இது குறித்துப் பின்னர் விரிவாகக் காண்போம்.
விசுவாமித்திரர் இராமனுக்கு அருளிய 50படைக்கலங்களின் பட்டியல் வான்மீகத்தில் உள்ளதாகக் குறிக்கிறார் முனைவர் தெ.ஞான சுந்தரம் அவர்கள்
.
தான் வழங்கிய படைக்கலங்களுக்கு உரிய மந்திரங்களை விசுவாமித்திரர் ஓத, அந்த மந்திரங்கள் வந்து இராமனைப் பணிந்தன. தெளிந்த மனமுள்ளவன் செய்த நல்வினைப் பயன்கள், மறு பிறவியில் அவனைத் தேடி வருவது போல அவை வந்தன என்கிறார் கம்பர்.
“ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல் தன்பால்
ஊறிய உவகையோடு உம்பர்தம் படைகள் எல்லாம்
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல் வந்த அன்றே,”
பாலைவனப் பயணத்தில் சிரமங்கள் தெரியாமல் இருக்க, இராம இலக்குவருக்கு பலா&அதிபலா மந்திரங்களை விசுவாமித்திரர் உபதேசித்ததாக பாலகாண்டம் சொல்கிறது. வெப்பம் தெரியாமல், தாகம் தோன்றாமல் காக்கும் மந்திரங்கள் அவை.
உபதேசம் என்பது பற்றி சுவாமி சச்சிதானந்தர் அழகானதொரு விளக்கத்தை வழங்குகிறார்.
“உப & தேசு – அம்”
“துணை வரும் அழகிய அம்சம் என்பதே உபதேசம். ஒருவருக்கு வாழ்க்கைப் பாதையிலும் ஆன்மிகப் பாதையிலும் துணை வரும் அதிசய அம்சங்கள், மந்திரங்கள்.”
அதே போல, ஆரண்ய காண்டத்தில் அகத்தியர் இராமனுக்குப் படைக்கலங்கள் வழங்குகிற செய்தியும் இடம் பெறுகிறது.
திருமால் வைத்திருந்த வில், அம்புகள், அம்புப் புட்டில் ஆகியவற்றை வழங்கிய அகத்தியர், இந்த உலகம் முழுவதையும் தராசின் ஒரு தட்டில் வைத்து, மறு தட்டில் வைத்தால் உலகம் முழுவதும் ஒப்பென்று சொல்லிவிட முடியாத பெருமையும் கொண்ட வாளையும், திரிபுரங்களை எரிக்கையில் சிவபெருமான் கைவசம் இருந்த அம்பையும் வழங்கினார்.
“இவ்வில் இது இவண்மேல்நாள்
முழு முதல்வன் வைத்துள்ளதும். மூவுலகும் யானும்
வழிபட இருப்பது; இது தன்னை வடிவாளிக்
குழு வழு இல புட்டிலொடு கோடி என் நல்கி
இப்புவனம் முற்றுமொரு தட்டிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்புருவு பெற்ற அரன் மேருவரை வில்லாய்
முப்புரம் எரித்த தன மொய்க்கணையும் நல்கோ”
இங்கே விசுவாமித்திரன் அருளிய படைக்கலங்கள், அகத்தியர் அருளிய படைக்கலங்கள் அகத்தியர் அருளிய படைக்கலங்கள் அனைத்திற்கும் இருக்கும் தனித்தன்மையே அவை மந்திரப் பிரதிட்டை செய்யப்பட்டவை என்பதாகும்.
ஓர் உதாரணத்தைக் கொண்டு, இதனை விளக்கலாம். ஒருவர் தன் அலுவலகத்தில், தனக்கு வந்த கடிதத்தில் இருந்த ஊசியை அகற்றும்போது அந்த ஊசி முனையில் விரல் அழுந்தி விடுகிறது. பதற்றத்தில் இழுக்கும் போது காயமாகிவிடுகிறது.
அந்தக் காயம் ஆறவேயில்லை என்று மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர், ஓர் ஊசியைக் கொண்டு வருகிறார்.
இந்த மனிதருக்கோ கலக்கம். ஏற்கெனவே ஊசி கிழித்த காயம். ஆறாமல்தான் மருத்துவரிடம் வந்திருக்கிறோம். மருத்துவரோ அதை விடப் பெரிய ஊசியுடன் வருகிறார் என்று பதறுகிறார்.
குத்திய ஊசி குறையுடைய ஊசி, மருத்துவர் கொண்டு வருவதோ மருந்து. மனிதர்கள், பிறர் உயிரை எடுக்கப் பயன்படுத்தும் சராசரி ஆயுதங்கள் உயிரை மட்டுமே எடுக்கும்.
மந்திரம் பிரதிட்டை செய்யப்பட்ட ஆயுதங்களோ, பிரயோகிப்பவனுக்கு மட்டுமின்றி, யார்மேல் அந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகிறதோ அவர்களுக்கு நன்மை செய்ய வல்லன.
இந்த ஆயுதங்களை யார் பிரயோகிக்கிறார்களோ அவர்களுடைய வெற்றிக்கும், யார்மேல் இந்த ஆயுதங்கள் எய்யப்படுகின்றனவோ அவர்களின் முக்திக்கும் வழிசெய்யக் கூடிய சக்தி கொண்டவை.
அதனால்தான், படைக்கலங்களின் தன்மையை, பசிபோக்கும் கருணைச் சொல்லுக்கு நிகராக கம்பர் குறிப்பிடுகிறார்.
“மண்ணவர் வறுமை நோய்க்கு
மருந்தன, சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன
படைக்கலம்”
என்பதை இந்தக் கண்ணோட்டத்தில் உணர்வதே பொருத்தம்.
திருமாலின் திருக்கரத்தில் இருக்கும் சக்கரத்திற்கு சுதர்சனம் என்று பெயர். சு&தர்சனம் என்றால் கண்களுக்கு இனியது என்று பொருள். அழிக்கும் கருவியாக மட்டும் இருந்தால், அது அழகியதென்று வர்ணிக்கப்படாது. மாறாக, தீயவருக்கும் முக்தி அருளும் சாதனமாகத் திகழ்வதால் சுதர்சனம் எனப்படுகிறது.
இங்கே ஒரு கேள்வி எழலாம். பரம்பொருளின் அம்சமாகிய இராமனுக்கு பிரதிட்டை செய்யப்பட்ட கருவிகள், மந்திரங்கள், தேவையா என்று தோன்றலாம்.
அதுவும், இராமனைப் பொறுத்தவரை மந்திரப் பிரதிட்டை செய்யப்பட்ட ஆயுதங்களோ, அவனுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களோ, அவனுக்குப் பெரிதாகப் பயன்படுவதை விட எதிராளிக்கே பயன்பட்டன. இராமனுக்கு அவை தேவையில்லை என்பதைக் காட்டச் சான்றாக ஒன்று. பாலைவழியின் சிரமங்கள் தாக்காதிருக்கும் பொருட்டு, பலா&அதிபலா மந்திரங்களை விசுவாமித்திரர் உபதேசிக்க மிகவும் பணிவுடன் இராம இலக்குவர் கேட்டுக் கொண்டனர்.
எரிந்தெழு கொடுஞ்சுரம் இனையது எய்தலும்
அருந்தவன் இவர் பெரிது அளவில் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்
வருந்துனர் சிறிது என மனத்தின் நோக்கினான்.
நோக்கினன் அவன்முகம், நோக்க, நோக்குடைக்
கோக்குமரரும் அடிகுறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ்வழி
ஊக்கினன் அவை, அவர் உள்ளத்து உள்ளினார்.
இதில் நுட்பமானதொரு சித்திரிப்பும் உள்ளது. ஒரு குருவின் நோக்கிலேயே அவர் ஓர் உபதேசத்தை அருள முற்படுகிறார் என்பதைக் கூர்மையாகச் சீடர்கள் உணர்கிறார்கள். பாதம் பணிகிறார்கள். உபதேசமும் அருளப்படுகிறது.
ஆனால், வனம் புகுந்த பின்னர், யமுனை ஆற்றில் நீராடிவிட்டு சித்திர கூடத்தை நோக்கிச் செல்லும் பாதையில், பாலை நிலமொன்று எதிர்படுகிறது. இங்கே பலா&அதிபலா மந்திரங்களை இராமனோ, இலக்குவனோ உச்சரிக்கவில்லை.
சீதைக்கு இந்தப் பாலை வழி சிரமமாய் இருக்குமே என்று இராமனின் திருவுள்ளம் ஒரு விநாடி எண்ணிற்று.
அவ்வளவுதான்.
கதிரவன், நிலவுபோலக் குளிர் கிரணங்களைக் கொட்டத் தொடங்கினான். காய்ந்த மரங்கள் தழைத்தன. கனல் வீசிய காடெங்கும் தாமரைக் காடுகள் பூத்தன. மேகங்கள் பொழிந்தன. பசியும் பகைமையும் அகன்றன. புலிகளின் மடியில் மான்குட்டிகள் பாலருந்தின. நஞ்சு கக்கும் நாகத்தின் பற்கள் அமுதம் சிந்தின.
நீங்கல் ஆற்றலள் சானகி என்று அண்ணலும் நினைத்தான்
ஓங்கு வெய்யவன் உடுபதி எனக் கதிர் உகுத்தான்
தாங்குவெங்கடத்து உறுவைகள் தழைகொண்டு தழைத்த
பாங்கு வெங்கனல் பங்கய வனங்களாய் பரந்த
குழுமி மேகங்கள் குமுறின, குளிர்துளரி கொணர்ந்த
முழுவில் வேடரும் முனிவரின் முனகிலர், உயிரைக்
கழுவி நின்றன பாஇல பகைஇல, தனிந்த
உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்டாம்.
இராமன் திருவுள்ளத்தில் எழுகிற ஓர் எண்ணமே பாலைநிலத்தைச் சோலை நிலமாக்கும் என்றால், விசுவாமித்திரர் உபதேசித்த மந்திரங்களை ஒரு மரியாதை கருதி இராமன் கேட்டுக்கொண்டான் என்றும், நான்முகன் உருவாக்கிய பலா, அதிபலா மந்திரங்களை விசுவா மித்திரர் சொல்ல, வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாக இருந்தான் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
விசுவாமித்திரருக்கு முன்னரே இராமனுக்குப் பல மந்திரங்களை உபதேசித்தவர் வசிட்டர். குலகுரு என்னும் முறைமையில், அவர் உபதேசித்தவற்றை இராமன் கேட்டுக் கொண்டான்.
ஆனால் எப்போதும் நிதானமிழக்காத வசிட்டர் எதிர்பாராத விதமாக ஓரிடத்தில் சற்றே எல்லைமீறப் போய், இராமன் தன் சுயத்தை உணர்த்த வேண்டி வந்தது.
அயோத்தியா காண்டத்தில், திருவடி சூட்டி படலம். இராமனை அயோத்திக்குத் திரும்பச் சொல்லி பரதன் வாதிடுகிறான்.
அதில், ஒரு கட்டத்தில் வசிட்டர் விவாதத்தின் உள்ளே நுழைந்து இராமனை நாடு திரும்புமாறு வற்புறுத்தத் தொடங்குகிறார். இத்தனைக்கும் அயோத்தியிலிருந்து புறப்படுகிற போதே, இதே சர்ச்சையில் வசிட்டருக்குத் தக்க பதில் தந்துவிட்டுத்தான் இராமன் புறப்பட்டான்.
இப்போது, ஆர்வம் மீதூற வசிட்டர் திருமாலின் அவதாரமாகிய இராமனுக்கே வராக அவதாரத்தைப் பற்றியும், திருமால் உலகைப் படைத்ததையும் சொல்லத் தொடங்கினார்.
இராமன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். தாய் ஏவ தந்தை சொல்லை மதித்து, கானகம் ஏகிய இராமனிடம் “தாய் தந்தை இருவரையும் விட பல மந்திரங்களை உபதேசித்த குருவே உயர்ந்தவர். எனவே உனக்கு உபதேசித்த நானே உயர்ந்தவன். நான் சொல்வதைக் கேள்” என்று வசிட்டர் பேசத் தொடங்கிவிட்டார்.
“இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறுஇல் இவ்விஞ்சைகள்
பதலிய இருமையும் பாக்க, பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்”
இங்கே, இராமன் இறைவன் என்று தன் உள்ளுணர்வில் அறிந்திருந்தாலும், வெறும் சிந்தனை அடிப்படையில் வசிட்டர் பேசுவதைச் சுட்டிக் காட்டுவது போல “ஆறிய சிந்தனை அறிஞ” என்று வசிட்டரை அழைத்து இராமன் பேசத் தொடங்குகிறான்.
ஒரு ஞானியை அறிஞரே என்று அழைப்பது அவருக்குப் பெருமை சேர்க்காது. ஒரு தேசத்தின் பிரதமரை, பாராளுமன்ற உறுப்பினரே என அழைப்பது போல்தான் இது. இராமன் இறைவன் என்பதை உணர்ந்தும் கூட வெறும் அறிவு கொண்டு வசிட்டர் பேசுவதை இது குத்திக் காட்டுகிறது.
அடுத்த பாடலில், தன் சுயம் வெளிப்படும் விதமாய் இராமன் அழுத்தமாகப் பேசுகிறான்.
“சான்றோர் சொன்னார்கள், ஆசிரியர் சொன்னார்கள், தாய் சொன்னார்கள், புதல்வர்கள் சொன்னார்கள் என்று காரணம் காட்டி செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியுமா” என்று கேட்கிற இடத்தில் வசிட்டரை “தேன் தரு மலருளோன் சிறுவ” என்று விளிக்கிறான்.
“பிரம்மனின் மகனே” என வசிட்டரை அழைப்பதன் மூலம் பிரம்மா தன் மகன் என்பதை இராமன் வசிட்டருக்கு நினைவூட்டுகிறான்.
என் பெற்றோர் சொல்லை ஏற்பதாக நான் ஒப்புக் கொண்டபின் நீ வந்து கட்டளை போடுகிறாய். இனி நான் என்ன செய்யட்டும் என்று நீயே சொல்” என்று வசிட்டரைக் கேட்க வசிட்டர் வாயடைத்துப் போகிறார்.
“முன்உறப் பணிந்தவர் மொழியை யான்என்
சென்னியில் கொண்டு, அதுசொல்லென் என்றதன்
பின்னுறப் பணித்தனை பெருமையோய் எனக்கு
என்இனிச் செய்வது? உரைசெய் ஈங்கு”
என்றான்.
மந்திரங்கள் அனைத்தும் தீண்டிட ஏங்கும் திருவடிகள் கொண்ட இராமனுக்கு, தான் மந்திரங்கள் உபதேசித்தாய் சற்று மேவிப் பேசிய வசிட்டருக்கு உண்மை நினைவுக்கு வரும் விதமாய் இராமன் கடிதோச்சி மெல்ல எறிந்த இடம் இது.
மந்திரங்கள் படைக்கலங்கள் என்பதையும், இராமனிடம் முனிவர்கள் தந்தவை எல்லாம் எய்கிறவன் வெற்றிக்கு மட்டுமின்றி எய்யப்படுபவன் முக்திக்கு உதவுபவை என்பதை மேற்கண்ட சான்றுகள் வழியே நாம் உணரலாம்.
அரக்கரின் செயல்கள் அழியவேண்டும் என்பதில் அந்த யோகியருக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் அமரர்கள் மீது விருப்போ, அரசர்கள் மீது வெறுப்போ கொள்ளாமல் நடுநிலையில் நிலைத்த திருவுள்ளம் கொண்டவர்கள் இவர்கள்.
இந்தியாவின் ஹாக்கி விளையாட்டு அணியின் தேசிய வீரர்கள், பல்லாண்டுகளுக்கு முன்னர் சத்குரு அவர்களிடம் யோகப் பயிற்சிகள் பெற வந்தனர்.
பின்னர் பாகிஸ்தானுடன் அவர்கள் மோதிய முக்கியமான போட்டி ஒன்றில் சத்குரு பார்வையாளராகப் பங்கேற்க வேண்டுமென்று விரும்பினர். சத்குருவும் சென்றிருந்தார்.
இந்திய விளையாட்டு வீரர்களில் மிகவும் பதற்றமாக உணர்ந்த ஒருவர், “சத்குரு! நீங்கள் ஏதாவது செய்து நாங்கள் வெல்லும்படி செய்து விடக்கூடாதா?” என்று கேட்டார்.
சத்குரு சொன்னார், “நீங்கள் என்னிடம் யோகப் பயிற்சிகள் பெறவந்தீர்கள். பாகிஸ்தானிய வீரர்கள் என்னிடம் வரவில்லை. அதற்காக உங்களை நேசிப்பதைவிட அவர்களைக் குறைவாக நேசிக்கிறேன் என்று பொருளல்ல” என்றார்.
வேண்டுதல்-வேண்டாமை இல்லாத யோகியரும் ஞானியரும் நடமாடி இராம காதைக்குப் பொலிவு சேர்க்கிறார்கள்.
ஆயுதங்களுக்கும் யோகியருக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றிப் பேசும்போது பரசுராமரை மறந்துவிட முடியாது.
‘உனக்கு வலிமை இருந்தால், என் வில்லைக் கையில் வாங்கு’ என்று இராமனிடம் சொன்னவர், தன் தவம் முழுவதையும் இராமனின் கணைக்கு இலக்காக்கி நின்றார்.
தவத்தின் பயனை ஒரு யோகி தான் அனுபவிக்க முடியும். அவ்வாறே இறைவனுக்கு அர்ப்பணிக்க முடியும். சிறுவன் என்று கருதி வந்த இராமனே இறைவன் என்பதை உணர்ந்து அவன் புகழைப் பரசுகிற இராமன் ஆனார் பரசுராமர். அந்த சம்பவம் விளைவித்த தாக்கத்தை இந்த நூலின் நிறைவில் காண்போம்.
இதன்பிறகு மீண்டும் தவம் செய்யப் போகிறார். பரசுராமரின் இழந்த தவவலிமையை மீட்க தவம் செய்வதே வழி.
விசுவாமித்ரர் கூட தன் சினத்தால் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கிவிட்டு, அதில் இழந்த வலிமையை மீட்க தவவாழ்வைத் தொடர்ந்தார்.
இவ்வளவு ஏன்? இராமனுக்கே ஒரு கட்டத்தில் இப்படி ஒருநிலை ஏற்படுகிறது.
யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் சில வினைக்கட்டுகளிலிருந்தும், நாம் செய்த சில செயல்களின் பாதிப்புகளில் இருந்தும் நம்மை விடுவிக்க வல்லவை.
இதற்கு கம்பனில் ஓர் இடம். வாலி வதம் வழி, இராமன் வாலிக்கு முக்திதான் கொடுத்தான். ஆனால், தான் வந்ததோ, மானுட வடிவில் என்பதை அவன் மறக்கவில்லை.
எனவே, ஒரு மனிதனாக, வில்லுக்குரிய அறத்தைக் கடந்துதான் கடவுளாக, தன் கடமையை இராமன் நிறைவேற்ற முடிந்தது.
அதன்மூலம் சில பாதிப்புகள் தனக்கு ஏற்படுவதாக இராமன் எண்ணுகிறான் போலும்!
இராமனை சுக்ரீவன், தான் அரசுப் பொறுப்பு ஏற்கும் வேளையில் கிட்கிந்தை வர இறைஞ்சுகிறான். ஆனால் இராமனோ, “இல்லறத்துக்குரிய நெறியை இழந்தும், வில்லறத்துக்குரிய நெறியைத் துறந்தும் இருக்கும் இந்த நிலையில், குற்றங்கள் நீங்குமாறு நான் தவம் செய்யப் போகிறேன்” என்கிறான்.
“இல்லறம் துறந்தி லாதோர்
இயற்கையை இழந்தும், போரின்
வில்லறம் துறந்தும் வாழ்வேற்கு
இன்னன மேன்மை இல்லாச்
சில்லறம்; புரிந்து நின்ற
தீமைகள் தீருமாறு
நல்லறம் தொடர்ந்த நோன்பின்
நவையற நோற்பல் நாளும்”
என்று சொல்கிறான் இராமன்,
எளிய யோகப் பயிற்சிகளை செய்து முடிக்கும் போது கூட, உள்ளே ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் இன்றும் உணர முடியும். அவை நம் செயல்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் நீக்கமே.
இது யோக ரகசியங்களில் ஒன்று.