ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம்.
இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார்.
“ஆசையற்றவனும், தூயவனும், திறமைசாலியும், பற்றற்றவனும், பயனற்றவனும், தன்முனைப்புடன் செயல்படுவதை எல்லா விதங்களிலும் விட்டவனுமான எனது பக்தன் எனக்குப் பிரியமானவன்.”
“அனபேக்ஷ : சுசி -தக்ஷ & உதாசீனோ- கதவ்யத:
ஸர்வாரம்ப பரித்யாகீ யோமத் பக்த: ஸமே ப்ரிய:”
இந்த இலக்கணத்திற்கு அனுமனே இலக்கியம்.
பக்தியுள்ள ஆன்மா எந்த வடிவில் இருந்தாலும் இறைவனை அடைய அந்தத் தேகம் ஒரு தடையில்லை என்று பாகவதம் கூறும்.
யோகநெறியில், பற்பல சமாதி நிலைகள் பேசப்பட்டுள்ளன. அவற்றில் ரிதம்பர சமாதி என்பது குறித்து பதஞ்சலி விரிவாகப் பேசுகிறார். ஆத்ம சாதகன் ஒருவனுக்கு தியானத்தில் தன்னைப்பற்றிய சொந்த உணர்வும் எழும். இறை உணர்வும் எழும். தொடக்கத்தில் இந்த இரண்டையும் தன் பிரக்ஞையில் அவன் உணர்வான்.
சாதனை தீவிரப்பட, தன்னைக் குறித்த உணர்வு முற்றிலும் அடங்கி, முழுமையாக இறையுணர்வே மேலெழும். இந்நிலை ரிதம்பர சமாதி. இப்போது இந்த சாதகனின் எண்ணங்கள் என்று தனியாய் இராது. இறைவனின் எண்ணங்களே அவன் வழி வெளிப்படும்.
“தனதுரை எனதுரையாகக் கொண்டு” என்று திருஞானசம்பந்தர் சொல்வதும், “நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்தன் வார்த்தை” என்று வள்ளலார் சொல்வதும், இந்த அனுபவங்களையே ஆகும்.
இராம காதையில், இந்நிலையை அடைந்தவர்கள் அனுமன், சீதை ஆகியவர்கள்.
இறைவனை வேறாய் இருந்து அனுபவித்தல், உடனிருந்து அனுபவித்தல், ஒன்றியிருந்து அனுபவித்தல் என்று மூன்று நிலைகளையும் இவர்கள் அடைந்தனர்.
சீதை மாடத்திலிருந்து கண்ணுற்ற வேளையில் இராமனை வேறாக இருந்து அனுபவித்தாள். வனவாசத்தில் உடனிருந்து அனுபவித்தாள். மணமேடையில் “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” என ஒன்றியிருந்து அனுபவித்தாள்.
அனுமன், ரிஷிபுங்க பர்வதத்தில் இராமனைக் கண்ணுற்ற போது தனித்திருந்து அனுபவித்தான். வாலி வதம், படையெடுப்பு உள்ளிட்ட சம்பவங்களில் உடனிருந்து அனுபவித்தான். பட்டாபிஷேகம் நிறைவு பெற்ற பிறகு, இராமன் முன்வந்து தன்னை “பொருந்துறப் புல்லுக” என்று பணித்த போது ஒருமை எய்தும் அந்தத் தழுவலில் ஒன்றியிருந்து அனுபவித்தான்.
தன் தலைவன் சுக்ரீவனுக்கு இராமன் உதவுவான் என்று நட்புகோட் படலத்தில் எண்ணிய போது, சாதகனின் சொந்த உணர்வுகள் தலைதூக்கி இருந்தன.
போகப்போக இராமனின் திருவுளக் குறிப்பை நிகழ்த்தும் ஒரே முனைப்பு மட்டும் மீதமானது. அது இராமனைப் பொருந்துறப் புல்லும் ஒருமையை விளைவித்தது.
ரிதம்பர சமாதி என்ற இந்த உன்னத நிலை, “தான்” எனும் முனைப்பு அறுபடும் நிலையைக் குறிக்கும்.
“தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்”
என்னும் குறள் இதனையே சுட்டுகிறது. இந்தக் குறளில் “மன்னுயிர்” என்பதற்கு மற்ற உயிர்கள் என்று மட்டும் பொருள் கொள்ளலாகாது,
மன் உயிர் என்றால், நிலைபெற்ற உயிர்கள் என்று பொருள். உயிர்களுக்கு அழிவில்லை என்னும் கோட்பாட்டின்படி உயிர்களின் பிரக்ஞை பூர்வமான உணர்தலில், இந்தத் தன்மையை அடைந்த உயிரானது தொழத்தக்கதாகி விடும்.
ஏனெனில், எந்த உயிரின் நோக்கமும், இறைவனுடன் ஒன்றுவது என்பதால், அந்நிலையை எட்டிய உயிரை, பிறவுயிர்கள் தொழுகின்றன.
இரண்டாவதாக, இந்தக் குறளை அனுமனுடன் பொருத்திப் பார்த்தால், “மன்னுயிர்” என்பதற்கு சிரஞ்சீவத்துவம் பெற்ற உயிர் என்றும் பொருள்கொள்ள முடியும்.
“இன்றென இருத்தி” என சீதையால் சிரஞ்சீவத்தும் நல்கப் பெற்ற அனுமனை, அதே தன்மையை அடைந்த பிறவுயிர்களும் தொழும் என்று பொருள் கொள்ள இயலும்.
தானற்றுப் போதல் என்னும் நிலையை உணர்த்த ரிதம்பர சமாதிக்கு உன்னத உதாரணமாய் அனுமன் விளங்குகிறான்.
இந்நிலையை, திரைப்படப் பாடல் ஒன்றில் கவியரசு கண்ணதாசன் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.
“பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா,
மீதிமனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா,
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா,
ஆலயமணியின் ஓசை நெஞ்சில் நிறைந்து விட்டதா”
என்பார்.
ஓர் உயிர், இறைவனை நோக்கி எவ்வளவு நெருங்குகிறதோ, அதே அளவுக்கு இறைவனும் அந்த உயிரை நெருங்குகிறார் என்பர்.
அந்த உயிர் இறைவன்பால் ஈர்க்கப்படுவது போலவே இறைவனும் அந்த உயிரை நோக்கி ஈர்க்கப்படுகிறான்.
“ஒருவரை ஒருவர் உள்ளம் ஈர்த்தலால்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”
என்று கம்பர் சுட்டுவது இந்த ஒருமை நிலையை உணர்த்துகிறது.
சிவபெருமானை கயிலாயத்தில் பூத உடலுடன் சென்று தரிசித்த சேரமான் பெருமாள் நாயனார், “சிவனைக் கண்டதில் எனுக்கு என்ன மகிழ்வோ, என்னைக் கண்டத்தில் சிவனுக்கும் அதே மகிழ்வு” என்கிறார்.
“தன்னைக் கண்ட என் வண்ணம், எவ்வண்ணம், அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே”
என்று பொன்வண்ணத்தந்தாதியில் பாடுகிறார். அனுமனை, தன்னை இறுக அணைக்குமாறு இராமன் “பொருந்துறப் புல்லுக” எனப் பணித்தது வெறும் புறவயமான நிகழ்வல்ல.
உயிர்கள் இறைவனிடம் பெறத்தக்க மிக உயரிய ஒருமை நிலை.
“நீ வேறெனாது, நான்வேறெனாது
இறுகும் வகை, பரமசுகம், அதனையருள்
– ஏக நாயகா! லோக நாயகா”
என்று அருணகிரிநாதர் திருப்புகழிலும்
“யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே”
என்று கந்தரனுபூதியிலும் பாடுகிறார்.
யோக நிலையானது மூன்று அம்சங்களின் ஒருமையை அடிப்படையாகக் கொண்டது. தியானிப்பவர் – தியானிக்கப்படும் பொருள் – தியானம். இவை மூன்றும் தனித்தனி அம்சங்களாகத் தொடக்க நிலையில் இருக்கும்.
ஒருமை நிலை என்பது, இம்மூன்றுமே ஒன்றான நிலை. தியானிக்கும் ஆத்ம சாதகரானவர், தியானத் தன்மையின் வடிவமாகி, தியானிக்கப்படும் பரம்பொருளின் இயல்பிலும் ஒன்றுவதாகும்.
“அறிவாற் சிவமேயாகிய மாணிக்கவாசகர்” என்று மணிவாசகரை இதனாலேயே சொல்வார்கள்.
திருமூலர் இந்நிலையை அழகியதோர் உவமை கொண்டு விளக்குகிறார். கடலில் கலந்திருக்கும் உப்பு, கதிரொளியால் காய்ச்சப்பட்டு, தனி வடிவம் கொண்டு வருகிறது. பின்னர் அதே உப்பு அந்தக் கடலில் இரண்டறக் கலக்கிறது இதுபோல், சிவத்தன்மை கொண்ட சீவன், சிவத்திலேயே அடங்குகிறது.
“அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையில்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினில் கூடியது ஒன்றாகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே”
யோக மரபில் பதஞ்சலி சூத்திரம், திருமந்திரம் ஆகிய இரண்டுமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
ரிதம்பர சமாதியின் படிநிலைகளை திருமூலரும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
“தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
நானென்று அவனென்று இரண்டும் தனில் கண்டு
தானென்ற பூவை அவனடி சார்த்தினால்
நானென்று அவனென்று நல்லதொன்று அன்றே”
என்பது திருமந்திரம்.
அருளாளர்களின் மேற்கண்ட அனுபவ மொழிகள், சீதை அனுமன் ஆகியோரது வாழ்வியல் சம்பவங்களில் உள்ள ஆன்மிக சூட்சுமங்களை நன்குணரத் துணை செய்கின்றன.