கம்பனின் இராம காதையில் பற்பல பாத்திரங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் இராமனைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்பு மிக்கவை. பக்தியின் பெருக்காக மட்டுமின்றிப் பற்பல யோக ரகசியங்களை உணர்த்தக் கூடியவை.

அத்தகைய சொற்றொடர்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

இராமனின் திருவடித் தொடர்பு பெற்று, அதன் விளைவாக அரக்கவுரு நீங்கி முக்தி பெறும் விராதன், மற்றும் கவந்தன், சரபங்கன் போன்றோர் இராமனைத் துதிக்கின்றனர். கருடன் துதியும் முக்கியமான பகுதி.

இந்தத் துதிகளில் இருந்து சில சொற்றொடர்களை நாம் எடுத்துக் கொள்வோம். விராதன் துதியில் நாம் காணும் அழகியதொரு சொற்றொடர், “வாராதே வரவல்லாய்” என்பதாகும்.

மனித உருவெடுத்து மண்ணுக்கு வந்த இராமன் அப்படி வராமலேயே தன் பணிகளை நிகழ்த்தக்கூடிய பேராற்றல் கொண்டவன். எனினும் பெருங்கருணை காரணமாய் அப்படி வடிவெடுத்து வந்தான். பரநிலையிலும் வியூக நிலையிலும் இருந்தவன் அவதாரமாக வந்தான்.

“மறைகளும் முனிவர்யாரும்
மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும் சொல்லும்
துணிபொருள் திணிவில் தாங்கி
அறைகழல் இராமனாகி அறநெறி நிறுத்த வந்தது”

அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள், தாம் பெரிதும் பத்திமை பூண்டிருந்த அருளாளராகிய யோகர் சுவாமிகள் குறித்து எழுதியுள்ளார்.

இலங்கையின் ஒரு பகுதியில், தன்னோடும் பிறரோடும் உரையாடிக் கொண்டிருந்த சுவாமிகள், அதே வேளையில் கதிர்காமத்தில் முருகப் பெருமான் ஆலயத்தில் அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்ததை, ஆதாரத்துடன் அறிய நேர்ந்த சம்பவத்தை அதில் விளக்குகிறார். அது வாராமல் வந்த அற்புதம்.

ஒரு செயலைச் செய்வதற்கு சில கணக்குகள் உள்ளன. இந்த இடத்தில் செயல்படுதல், இந்த நேரம் வரை செயல்படுதல் என்பன போன்ற கணக்குகள் அவை. ஜிவீனீமீ – ஷிஜீணீநீமீ என இவற்றைச் சொல்வார்கள்.

ஒருவர், பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒன்றாக உணர்கிற போது அவர் ஸ்தூல அளவில் ஓரிடத்தில் இருக்கிறார். ஆனால் பிரக்ஞை பூர்வமாக எங்கும் வியாபித்திருக்கிறார் ளினீஸீவீஜீக்ஷீமீsமீஸீt என்பார்கள்.

“மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்”
என்கிறார் கம்பர்.

இது யோகபரமாக அவதாரத் தன்மையை அணுகும்போது நமக்குக் கிடைக்கிற விடையாகும்.

அதே நேரம், ஒரு செயலுக்கு ஒருவர் தன்னைப் பொறுப்பாக்கி இதைச் செய்கிறோம் என எண்ணும்போது, அந்த மனிதரின் எல்லைகள் அந்தச் செயலிலும் பிரதிபலிக்கின்றன. மாறாக, எல்லையில்லாத தன்மையில் தன்னை உணர்வதுடன் அந்தச் செயலுக்கும் உரிமை கொண்டாடாத போது எல்லை கடந்த நிலையில் இயங்க முடிகிறது.

இதனை ஸ்ரீ தயானந்த சரசுவதி மிகவும் தெளிவாக விளக்குகிறார்.

“எவனுக்கு, நான் செயலாற்றுபவன் என்கிற கர்த்ருத்வ
புத்தி இல்லையோ, அவனே சர்வ சர்ம சந்யாசி.
கர்த்ருத்வ புத்தியை விடாமல் செயல்களை மட்டும்
விட்டவன் இன்னும் சம்சாரியே”
என்கிறார்.

“எல்லையின்மை எனும் பொருள் அதனை
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும்”
என்கிறார் மகாகவி பாரதி.

நாம் கடவுளை பகவான் என்கிறோம்.

சுவாமித்துவம் அடைந்த யோகியரையும் ஞானியரையும் “பகவான்” என்கிறோம். பகவான் ராமகிருஷ்ணர், பகவான் ரமணர் என்கிறோம்.

“பக” என்பவை முழுமையான தன்மைகளைக் குறிக்கும். ஸம்பத்துகள் என்று இவற்றைச் சொல்கிறார்கள்.

பூரணமான ஆளும் தன்மை, பூரணமான சக்தி, பூரணமான புகழ், எல்லையற்ற செல்வம், பற்றில்லாத நிலை, நிலையறிவு இவையே “பக” எனும் ஸம்பத்துகள் என்கிறது விஷ்ணு – புராணம்.

ஒரு செயலைச் செய்பவரும், அந்தச் செயலின் சுவடு தன்னில் பதியாமல் தள்ளி இருப்பதும் அத்தகைய முழுமையின் வெளிப்பாடே ஆகும்.

“வாராதே வரல்லாய்” என்னும் சொற்றொடருக்கான விரிவுரையாய் விளக்கமாய், கருடனின் துதியில் ஒருவரி அமைந்திருக்கிறது.

“பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி
பிறவாமல் நல்கு பெரியோய்”

என்ற பெரிய திருவடியின் துதி, “அவதாரம் எடுக்காமலேயே அவதாரத்தால் நிகழ்த்த வேண்டியவற்றை நிகழ்த்த வல்லோய்” என்று குறிக்கிறது.

மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி
மயல்யாரும் யானும் அறிவோம்;
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி;
ஒருதன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி; பிறவாயும் ஒத்தி;
பிறவாமல் நல்கு பெரியோய்;
அறந்தான் நிறுத்தல் அரிதாக, ஆர் – இவ்
அதிரேக மாயை அறிவார்”

என்பது அந்தப் பாடல் அறத்தை நிலை நிறுத்த, பரம்பொருளின் மூல அம்சம் நிர்க்குண நிராமயமாய் இருக்க, அவதார அம்சம் அல்லல்களுக்கும் ஆனந்தத்திற்கும் ஆட்படுவதை உணர்த்துகிற பாடல் இது.

கர்த்ருத்துவம் இல்லாதவர் அந்தக் காரியத்தை நிகழ்த்த இயலும் என்பதை சைவமும் சொல்கிறது.

கல்லால மரத்தின் கீழ் நால்வருக்கு சிவன் உபதேசித்ததை,

“சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து
பலத் தொடக்கை வெல்வாம்” என்பர்.

திருஞானசம்பந்தர், சிவபெருமான் செய்தருளிய செயல்கள் சிலவற்றைப் பட்டியலிட்டு “இவற்றை இவர் செய்யவில்லை போலும்” என்று பாடுகிறார்.

கன்றயணி வேலிலர் போலும் கபாலம் தரித்தலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பிறையும் கூர்ந்திலர் போலும் பாசம் பிடித்தலர் போலும்
பிறையும் சடைக்கிலர் போலும் பிரமபுரத்து அமர்ந்தாரே
என்கிறார்.

செயல் புரிந்தமைக்கான சாயலே இல்லாமல், செயல் செய்து அச்செயலோடு தன்னை அடையாளப்படுத்தாமல் இருக்கும் தன்மையை இத்தகைய பாடல்கள் நன்கு விளக்குகின்றன.

இராமாவதாரம் நிகழ்வதற்குப் பன்னெடுங்காலம் முன்னமே மறைகள் தோன்றின. அந்த மறைகளுக்கும் முன்னோகிய மூலப் பரம்பொருளின் அம்சமே, இராமன் என்னும் அவதார மூர்த்தமாக வந்துளது.

இதில், வேதங்கள் இராமனுடைய செய்கைகளை முன்னமே நினைத்துப் பதிவு செய்தவையா? அன்றி, இராமனுடைய செயல்களே வேதங்கள் கூறும் ஒழுக்க நெறிகளானதா?” என்று கவந்தன் துதியில் ஓரிடம் வருகிறது.

“நின்செய்கை கண்டு நினைத்தனவோ நீள்மறைகள்?
உன்செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?”

சுவாமி தயானந்த சரசுவதி, பகவத் கீதைக்கு தன் விளக்கவுரையில் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

“குரு சாஸ்திரத்தைப் போதிக்கிறார் என்பதைவிட, ஒருபடி
மேலேபோய், குரு போதிப்பதே சாஸ்திரம் என்று கூறலாம்”
என்கிறார்.

ஏனெனில், ஒரு சீடன் அடையும் முயற்சியில் இருக்கிறார். ழுரு அதனை அடைந்தவராக இருக்கிறார். இதே நூலில் சுவாமி தயானந்த சரசுவதி குறிப்பிடும் ஒரு செய்தியை இங்கே நினைவுறுத்திக் கொள்ளலாம்.

“முமூட்சு (சாதகன்) எதனை எட்டுவதற்காக ஆத்ம
சாதனைகளில் இறங்குகிறானோ அதையே ஒரு ஞானி,
குண இயல்பாகக் கொண்டிருக்கிறார்”
என்கிறார்.

எனவே முக்தியருளிய நாதன் இராமன் வேதநெறிப்படி ஒழுகினானா, அல்லது அவன் செயல்களே வேதமாயினவா என்று கவந்தன் கேட்பது அற்புதமான கேள்வி.

கம்பன் காட்டும் துதிகளில், ஒருமை என்னும், யோகநிலை பற்றி, இருவேறு துருவங்களில் ஒரு சிந்தனை காணக் கிடைக்கிறது. இரண்டும் எதிரெதிர் நிலைகள் போலத் தோன்றினாலும், ஒரு நாளை முழுமையாக்கும் இரவையும் பகலையும் போன்றவை. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டாலும் ஒன்றினை ஒன்று முழுமையாக்குபவை.

விராதன் துதியில் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

“வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ?
ஓதங்கொள் கடலன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ?”.

இராமாயணத்தில் விசுவரூப தரிசனம் இல்லை என்பார்கள். விராதனுக்கு மட்டுமே காட்டப்பட்ட விசுவரூப தரிசனம் பற்றிய வர்ணனை இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள்.
பொருந்தியிருப்பதே யோகநிலை என்ற கண்ணோட்டத்தில் அணுகும்போது, பிரபஞ்ச ஒருமை குறித்த ஒரு புதிர் இந்தப் பாடலின் அடுத்த இரண்டு வரிகளில் உள்ளன.

“ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள்”

எல்லாம் ஒன்றாகப் பொருந்தியிருக்கும் நிலைதான் நாம் ஒன்றை செய்வதற்கு ஏதுவாகியிருக்கிறது. ஒரு யோகி, பிரபஞ்சம் முழுமையுடனும் ஒருமையை உணர்கிறான். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் பூதங்களே ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதில்லை. ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத பூதங்களுடன் ஒருமை காண்பதே யோகநிலை.

அதே நேரம், கவந்தன் துதியில் ஓர் இடம்.

அண்டங்கள், அண்டங்களின் உருவத்தைத் தருகிற பஞ்ச பூதங்கள் ஒன்றுடன் ஒன்று முரண் கொண்டவைதான். ஆனால், நீர் நிலையில் மொக்குகள் எல்லாம் ஒன்று போலவே தோன்றுவது போல, இறைவன் முன் இவை ஒன்று போல் நின்று, ஒன்றாகத் தோன்றி இறைவனுக்குள்ளே ஒளிகின்றன” என்கிறான் கவந்தன்.

“நிற்கும் நெடுநீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல முரணிற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம், அறிதற்கு எளிதோ? பரம்பரனே”
என்கிறான்.

உருவாகும் காலத்தும் ஊழிக் காலத்தும் அண்டங்கள் இறைவன் திருமுன்னர் முரண்கள் இற்ற நிலையில் உள்ளன.

பிரபஞ்ச உருவாக்கத்தில் இறைவன் கண்காணிப்பவன். ஒருவருடன் ஒருவர் சண்டையிடும் கைதிகள், கண்காணிப்பாளர் வந்தால் அடங்கி விடுவது போல, பூதங்கள் – அண்டங்கள் – இறைவன் முன் முரண்களை இழக்கின்றன்.

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருநாள் நிகழ்சிழ
மூவகை உலகம் முகிழ்த்தன முறையே”

என்னும் ஐங்குறு நூறு, இறைவன் கண்காணி என்பதைப் புலப்படுத்துகிறது.

ஆனால், ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பூதங்களும், அந்தப் பூதங்களால் உருவான அண்டங்களும் இறைவன் திருமுன்னர் எவ்வாறு முரணற்று நிற்கின்றன என்பதையும் நம் வாழ்வியல் சார்ந்த எடுத்துக்காட்டில் உணர முற்படலாம்.

நீர் மண்ணைக் கரைக்கிறது. நெருப்பை அணைக்கிறது -காற்றும் நெருப்பை அலைக் கழிக்கிறது. நெருப்போ, நீரை, ஆவியாக்கி விடுகிறது. ஆகாசம் நீங்கலாய் மற்றைய பூதங்கள் ஒன்றினால் இன்னொன்று வடிவிழக்கின்றன.

ஆனால், மண்ணைப் பிடித்து இறைவன் திருவுருவம் ஆக்கி ஒருவர் பூஜை செய்ய முற்படுகிறார். மண்ணைக் கரைக்கும் நீரே மண்ணை இறைவன் திருவுருவாக்குகிறது. நெருப்பு அதனைச் சுட்டு பதப்படுத்துகிறது. அந்தத் திருவுருவம் முன் ஏற்றப்படுகிற தூபங்களைக் காற்று திசையெங்கும் சுமந்து சென்று இறைவனின் சாந்நித்தியத்தைப் பரப்புகிறது.

இறைவன் திருவுருவை அமைக்க சாதாரணமாய் ஒரு மனிதன் மேற்கொள்ளும் முயற்சியிலேயே ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத பூதங்கள் தங்கள் மத்தியில் உள்ள முரண்கள் இற்றுபோய் ஒருமை நிலை காண்கின்றன என்றால், தன்னை உணர்ந்த யோகியோ, முழுதுணர் இறைவனோ, மேற்கொள்ளும் சங்கல்பத்தில் பூதங்கள் ஒன்றுடன் ஒன்று யோக நிலையில் பொருந்துவதில் என்ன தடை இருக்கக் கூடும்?

“ஒன்றுடன் ஒன்று ஒவ்வா பூதங்கள்”

என்னும் சொற்றொடரையும், “முரண் இற்ற அண்டங்கள்” என்னும் சொற்றொடரையும் இணைத்துக் காண்கிற போதுதான் யோக நிலையின் நுண்கூறுகள் கம்பனின் இராமகாதை வழியே வெளிப்படும் மாட்சி புலப்படுகின்றது.

திருமாலின் அவதாரங்களில் பரசுராமன் அம்சாவதாரமாக அறியப்படுவர் இல்லை. திருமாலின் கூறுகளில், ஒரு பகுதி அவர்பால் தொழிற்பட்டதாகவே கொள்வர்.

ஏனெனில், எல்லா உயிர்களிலும், ஜடப் பொருள்களிலும் திருமாலின் அம்சம் இருப்பதாகவே உணரப்படுகிறது. “இராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா” என்று ஓஷோவிடம் கேட்ட போது,

“ஒரு பூ மலர்கிற போது விஷ்ணு மலர்வதாகப் பொருள்.
ஒரு நதி பாய்கிற போது விஷ்ணு பாய்வதாகப் பொருள்.
இராமன் மட்டுமல்ல, இராவணனுக்குள்ளும்
விஷ்ணுவின் அம்சம் வெளிப்படுகிறது. ஒரேயரு
வேறுபாடு, அவன் நிலைதிரிந்த விஷ்ணு”
என்கிறார் ஓஷோ.

பரசுராமரை நீக்கி விட்டுப் பார்த்தால், இராமாவதாரம், வாமனாவதாரம், நரசிம்மாவதாரம் ஆகிய மூன்று அம்சாவதாரங்கள் பற்றி கம்பர் விரிவாகவே பாடியுள்ளார். இதில் வாமனாவதாரம் பற்றி வழிநடைப் பயணத்தில் விசுவாமித்திரர் கூறுகிற இடம் இயல்பாகவே பொருந்துகிறது.

இராவணனின் அரசவையில் சூடான விவாதங்கள் நடுவே நரசிம்மாவதாரத்தின் நிகழ்வுகளை வீடணன் ஆற அமர விரித்துரைப்பதாக காவியம் காட்டுகிறது.

இந்த இடத்தில் நரசிம்மாவதாரத்தை இணைக்க வேண்டுமென்று கம்பனுக்குத் தோன்றியது ஏன் என்று விளக்கப் பலரும் தங்கள் எண்ணங்களை வெளியிட்டுள்ளார்கள். தங்கள் எண்ணங்களை வெளியிட்டுள்ளார்கள்.

எனக்குத் தோன்றுவது இதுதான். ஆழ்வார்களின் ஈரப் பசுந்தமிழில் தோய்ந்தவர் கம்பர். ஒன்றைப் பாடல் என ஏற்க என்ன தகுதி வேண்டும் என்று திருமங்கை யாழ்வார் ஓர் இலக்கணம் சொல்கிறார்.

“எந்தப் பாடல், நரசிம்மரின் பெருமைகளைப் பாடவில்லையோ அது பாடலே அல்ல” என்கிறார்.

“கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்விடந்த
ஓடா அலரியை, உம்பரார் கோமானை
தோடார் நறுத்துழாய் மார்வனை ஆர்வத்தால்
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே”
என்கிறார்.

திருமங்கையாழ்வாரின் இந்தப் பாடலையே மேல்வரிச் சட்டமாகக் கொண்டு நரசிம்மாவதாரத்தை இராம காதையில் கம்பர் சேர்த்திருக்க வேண்டும்.

இதனை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நரசிம்மரின திருமூர்த்தச் சிறப்பு.

பிரகலாதன் அழைத்த மாத்திரத்தில் தூணைப் பிளந்து கொண்டு. வேக வேகமாய் வந்த ரௌத்திரத் திருக்கோலம். வேக வடிவம் எனப்படுகிறது.

அவரே பிராட்டியுடன் இலக்குமி நரசிம்மராகக் காட்சியளிக்கும் திருக்கோலம் போக வடிவம் எனப்படுகிறது.

நரசிம்மர் அமைதி கொண்டு தியானத் திருக்கோலத்தில் வீற்றிருத்தலை யோக வடிவம் என்கிறார்கள்.

வேகியாகவும், போகியாகவும், யோகியாகவும் பல்வேறு கோணங்களில் வழிபடப்படும் நரசிம்மர் கம்பன் தமிழிலும் வெளிப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *