சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள்.
வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின், இறைமையின் நேரடி அனுபவம் என்பதே பதிலாக இருக்கும்.
எந்தவொரு யோகமும் இறை அனுபவத்தில் சென்று நிறைகிறது. அந்த அடிப்படையில் எல்லா மகத்துவங்களும் நிறைந்த யோகினியாக கம்பனில் காட்டப்படும் பாத்திரம் & சபரி.
சபரி பற்றிய செவிவழிச் செய்திகளும், இன்னபிற அனுபவங்களும், அவளை பக்தி மட்டுமே நிறைந்த பாமரக் கிழவியாய் சித்திரிக்கக் காண்கிறோம்.
ஆனால் சபரிக்கு கம்பர் கொடுக்கும் அடைமொழிகளைப் பார்க்கிறோம்.
“தாயினும் உயிர்க்கு நல்கும் சபரி”
“தன்னையே (இராமனையே) நினைத்து நோற்கும் சவரி”
“அருந்தவத்து அரசி”
“வினைஅறு நோன்பினார்”
ஆகியவை அவை.
மாணிக்கவாசகர், சிவபெருமானை “தாயினும் சாலப்பரிந்து” என்கிறார். கம்பர் “தாயினும் உயிர்க்கு நல்கும் சபரி” என்கிறார்.
இன்னொரு சிறப்பு என்னவெனில், சிவன், நான்முகன், திருமால், தேவர்கள் அனைவரும் சபரியின் குடிலைத் தேடிவந்து, “குற்றமில்லாத உன் தவத்தின் நிறைவுக்காலம் நெருங்குகிறது. இராமனுக்கு பூசைகள் நிகழ்த்தி எங்களிடம் வந்துசேர்” என்று சொல்லிச் சென்றார்களாம்.
மூவரும் தேவரும் வருந்தியழைத்தும் அவர்கள் பால் செல்லாமல், இராமனுக்காக தான் காத்திருந்ததை சபரி சொல்ல, இராம இலக்குவரோ, “தாயே! எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்த துயரைத் தீர்த்தாய். நீ வாழ்க” என்றனர்.
“ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும், எந்தை
வாசவன் தானும், ஈண்டு வந்தனர், மகிழ்ந்து நோக்கி
ஆசறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய
பூசனை விரும்பி எம்பால் போதுதி” என்று போனார்.
“இருந்தனன் எந்தை நீ ஈண்டு என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி, “எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய், அம்மனைவாழி” என்றார்.
இராம இலக்குவரின் துயரம் தீரும் விதமாக சபரி சொன்னது, சுக்ரீவன் ஒளிந்திருக்கும் ரிஷபுங்க பர்வதத்தைச் சென்றடையும் நெறி என்று சொல்லப்படுகிறது.
ஆனால், சபரி சொன்னதும், இராமன் கேட்டதும் எப்படி இருந்ததென்றால் “வீடுபேறு அடைவதற்கான வழியைக் காட்டும் ஓர் அறிஞர் போல, சபரி சொல்ல, கேள்விச் செல்வத்தால் செவிகள் தோட்கப்பட்டவர் உணர்கிற சுவையின் வடிவாக இராமன் நின்றான்” என்கிறார் கம்பர்.
“வீட்டினுக்கு அடைவதான மெய்ந்நெறி வெளியிற்று ஆக
காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிந்து எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உன்னும் அமுதத்தின் சுவையாய் நின்றான்”.
ரிஷிபுங்க பர்வதம் எவ்வளவு மகிமை வாய்ந்த குன்றாக இருந்தாலும் இராம இலக்குவரால் அடைய முடியாத தன்மையதாக இருக்க வாய்ப்பில்லை.
சுக்ரீவனுக்கே எட்டக் கூடிய இடத்தை இவர்கள் எட்ட இயலாது என்பதும் ஏற்கு மாறில்லை. எவரும் எளிதில் சென்றடைய முடியாத இடமெனில், தன்னை யாரும் கொல்ல வருவார்களோ என்னும் அச்சத்தில் சுக்ரீவன் காலத்தைக் கழிக்க அவசியமில்லை.
பக்தியிலும் யோகப் பண்பிலும் முதிர்ந்து கனிந்த மூதாட்டியாகிய சபரி, தன் உயிர் அனுபவமாகிய கனியை இராம இலக்குவருக்குப் படைத்திருக்க வேண்டும்.
பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அந்தப் பெருமாட்டி, பேசியது என்னவென்பதற்கு நமக்குக் குறிப்புகளில்லை.
எது எப்படியோ, சபரிக்கும் இராமனுக்கும் நிகழ்ந்த உரையாடல் சூட்சுமமான அம்சங்கள் கொண்டது என்பதும், அந்தக் கால கட்டத்தில் இராம இலக்குவருக்கு மிகவும் தேவைப்பட்ட வழிகாட்டுதல் என்பதும் நன்கு புலனாகிறது.
இராமனின் வருகையானது சபரிக்கு முக்தி தருவது மட்டுமே என்றால், அங்கே தாயென உயிர்க்கு நல்குபவன் இராமனாக இருந்திருப்பான். ஆனால், சபரி உயிர்க்கு நல்கும் தாயாகக் குறிக்கப்படுவது சிந்திக்கத்தக்கது.
தன்னைத் தேடி மூவரும் வந்த போது கூட இராமனுக்குச் செய்ய வேண்டிய பூசனை விரும்பி, அவர்கள் தரவல்ல வீடு பேறுகளையும் விலக்கி நின்றாள் என்பது வியப்புக்குரிய செய்தி.
“கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”
என்று சேக்கிழார் சுட்டிக் காட்டிய நிலையை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
இராம இலக்குவர்கள் சபரியிடம் கேட்டறிந்தவை யாரும் அறிதற்கு அரிய நுண்ணிய சூட்சுமங்கள் என்று கருத வேண்டியுள்ளது.
சபரியின் பெருமையை நாம் நன்கு உணரும் விதமாய் இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. எல்லோருக்கும் இராமன் முக்தி நிலையை அருளுவான். ஆனால் சபரியின் நிலை வேறு.
“அவள் பன்னெடுங்காலம் முயன்ற பெருமை காரணமாய், தன் உடலைத் தானே துறந்து தனித்த ஒரு நிலையை எட்டுகிறாள். அதனைக் கண்ட இராம இலக்குவர், எல்லையில்லாத வியப்பெய்தி, அவள் சொன்ன வழியிலே சென்றனர்” என்கிறார் கம்பர்.
“பின் அவள் உழந்து பெற்ற
யோகத்தின் பெற்றியாலே
தன்உடல் துறந்து தான் அத்
தன்மையின் இனிது சார்ந்தாள்
அன்னது கண்ட வீரர்
அதிசயம் அளவின்று எய்தி
பொன்னடிக் கழல்கள் ஆர்ப்ப
புகன்றமா நெறியில் போனார்”
இதில் மூன்று அம்சங்களை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
1. யோகநிலை கைவரப் பெற்றமையால் தானே உடலைத் துறக்கிறாள் சபரி.
2. உடலைவிட்டு உயிர் நீங்குங் காலை, அந்த உயிர் முக்தி பெற குருவருள் முன்னின்று உதவும். ஆனால் இங்கு இராமன் சாட்சிப் பிரமாணமாகவே நிற்கிறான்.
3. சபரி உடலைத் துறந்த பிறகு, அந்தக் காட்சியைக் கண்டு எல்லையில்லாத அதிசயம் கொண்ட இராம இலக்குவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகல்கின்றனரே தவிர, அந்த உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாகவோ, எரியூட்டல் & புதைத்தல் போன்றவற்றை மேற்கொண்டதாகவோ சுட்டவில்லை.
சடாயுவுக்கு இராம இலக்குவர்கள் நீர்க்கடன் செய்ததை கம்பர் குறிப்பிடுகிறார்.
ஏந்தினன் இருகை தன்னால்; ஏற்றினன் நாமம் தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தன்; தலையின் சாரல்
காந்தெரி கஞல மூட்டி, கடன்முறை கடவா வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நன்னூல் மந்திர நெறியின் வல்லான்
இறுதிக் கணத்தில் எல்லையில்லாத யோக ஆற்றல் காரணமாய், அதிசயித்துப் பார்க்கக் கூடிய இரண்டு அம்சங்கள் சபரிக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். ஒன்று, சபரியின் உயிருக்கு நிகழ்ந்த அதிசயம். இன்னொன்று சபரியின் உடலுக்கு நிகழ்ந்த அதிசயம்.
யோகமரபில், ஓர் உயிருக்கு நிகழக்கூடிய உச்சகட்டக் கரைதல் மஹா சமாதி எனப்படும். இது முழு விழிப்புணர்வுடன் உடலை விட்டு உயிர் நீங்குதலில் தொடங்கும். அந்த உயிரானது முக்தி நிலைக்கோ, வீடு பேற்றுக்கோ செல்வதல்ல. மாறாக முற்றிலும் கரைந்து போவது.
தெரிந்தோ, தெரியாமலோ ஆங்கிலத்தில், மரணத்தைக் குறிக்க ஒன்று சொல்வர். ழிளி விளிஸிணி என்பார்கள். இந்தச் சொல், முழுமையான பொருளில் பொருந்துவது, மஹாசமாதி நிலைக்குத்தான்.
இதுகுறித்து என் குருநாதர் சத்குரு பல இடங்களில் விரிவாகப் பேசியுள்ளார்.
“எல்லாவற்றிலும் ஒருமை காண்பதே மகாசமாதி,”
“இதை ஓர் உவமை கொண்டு விளக்கலாம். நீங்கள் ஒரு காற்றுக் குமிழாக இங்கே இருக்கிறீர்கள். அந்தக் குமிழை உடைத்தால் அது எங்கே போகிறது? முழுமையாகக் கரைந்து விடுகிறது. முக்தி என்பது விடுதலை. ஆனால் மகாசமாதி என்பது ஒருவர் தாமாக முன்வந்து உடலைத் துறக்கிறார். முழுமையாகக் கரைந்து போகிறார்.
“உண்மையில் மரணம் என்ற ஒன்று இல்லை. வாழ்வு பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களுகே மரணம். ஆனால் மஹா சமாதி என்பது முற்றாகக் கரைந்து போதல்” என்பார் சத்குரு.
இரண்டாவது, சபரியின் உடலுக்கு நிகழ்ந்த அதிசயம். அதுவே பூதசித்தி ஆகும். சமீப காலத்தில் வள்ளல் பெருமான் அந்நிலையை எய்தினார் என்றறிகிறோம்.
இதுகுறித்து சத்குரு அவர்களிடம் நான் கேட்டறிந்தவை “மரணமிலாப் பெருவாழ்வு” எனும் காணொளியாக வந்துள்ளது.
பூதசுத்தி எனும் பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்போது அது மேலும் மேலும் நுண்ணிய நிலைகளை எட்டி பூத சித்தி எனும் தன்மையை அடைகிறது.
தியானலிங்கக் கோயிலில் ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் நிகழும் பஞ்சபூத ஆராதனை, பூத சுத்திக்கான சாதனையாகும்.
ஓர் அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்ட வள்ளலார், அங்கேயே மறைந்தார் என்பது பற்றி சத்குரு சொல்கையில் “பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பிரித்து, உடலில் உள்ள ஒவ்வோர் அம்சத்தையும் அந்த பூதத்தில் சேர்த்துக் கரைவதே பூத சித்தியாகும்.
இதில், அந்த நிகழ்வின் ஒரே அடையாளமாக தண்ணீர் மட்டும் தேங்கியிருக்கும். நீராகிய பூதத்தை மட்டும் முழுவதும் கரைத்துவிட முடியாது. “இப்போது யோக நிலையில் மிகவும் தேர்ந்தவர்கள் பூத சித்தி அடைகிறபோது கூட சிறிதளவு நீராவது அங்கே மீதமிருக்கும்” என்பார் சத்குரு.
இதைக் கேட்கும்போது இன்னொன்றையும் நினைவுபடுத்திக் கொண்டேன். ஊழிக் காலத்தில் யுகப் பிரளயத்தில் பிரபஞ்சமே அழிந்து போகும்போது கூட தண்ணீர் மட்டுமே மிஞ்சும் என்று புராணங்கள் சொல்வது கற்பனையல்ல என்று புரிந்தது.
இந்நூலின் கருப்பொருளை அறக்கட்டளை சொற்பொழிவாக நிகழ்த்தியதைக் கேட்ட திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், “வேறொரு இராமாயணத்தில் சபரி நதியாக மாறினாள்” என்றொரு குறிப்பும் இருப்பதை என்னிடம் சொன்னார்.
“மது கைடவர்களை அழிக்க நிலமே தென்படாத போது திருமால் தன் தொடைகளிலேயே சம்ஹரித்து, பின்னர் சிருஷ்டியைத் தொடங்கினார்” என்று புராணங்கள் சொல்கின்றன.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்கிறபோது மற்றைய பூதங்கள் இறைவனுக்குள் ஒடுங்கினாலும் தண்ணீர் ஒடுங்குவதில்லை.
அண்டத்தில் நிகழும் இதே நிலைதான் பிண்டத்திலும் நிகழ்கிறது. பூத சித்தியிலும் தண்ணீர் எஞ்சுகிறது என்று புரிந்தது. சபரியின் உயிர் மஹாசமாதியிலும், சபரியின் உடல் பூத சித்தியிலும் கரைந்த அடுத்த விநாடி, எல்லையில்லாத அதிசயமாய் இந்தக் காட்சிகளைக் கண்ட இராம இலக்குவர் அங்கிருந்து அகன்றனர் என்பதாகக் கம்பர் காட்டுவதில், யோக நெறியின் நுட்பங்கள் மிக சூட்சுமமாக விளக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்கிறோம்.