“சக்தி சக்தி சக்தியென்று சொல்லு & கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு”

என்று சக்தி நாமத்தை உபதேசிக்கின்றார் மகாகவி பாரதி.

நமக்கு உபதேசிக்கப்பட்ட நாமத்தை உபாசிக்க உபாசிக்க, காலப்போக்கில், அது வெறும் நாமமன்று, அது ஒரு மந்திரம் என்பதைக் கண்டுணர்கிறோம்.

அந்த மந்திரம் நமக்கு சித்தியாகிறபோது, நம் புலன்களையும் உயிரையும் அது பதப்படுத்துகிறது. முக்தி நிலைக்குக் கூட்டுவிக்கும் காரணத்தால், அதுவே “பதம்” என அழைக்கப்படுகிறது.

“அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்”.

என்று பாரதி பாடும்போது, பெயராக நமக்கு உபதேசிக்கப்பட்டதை மனம் எந்நேரமும் உபாசித்து, அதன் மந்திரத் தன்மையை உணர வேண்டும் என்கிறார்.

“கும்பிட்டெந் நேரமும் சக்தியென்றால், உன்னை
கும்பிடுவேன் மனமே”

என்ற வரியோடு சேர்த்து சிந்திப்போம்.

முதல் கட்டத்தில் வாலியைப் பொறுத்தவரை அது நாமம். உண்மையில் அது மந்திரம். அந்த மந்திரம் உடலில் ஊடுருவி, முக்தி தரும் பதமாக செயல்படப் போகிறது.

நம்மைப் பக்குவப்படுத்தக் கூடிய பதத்தை, நமக்கான மந்திரத்தை, முதலில் பெயர் என்று கருதுகிறோம்.

“மரா” “மரா” என்ற உபதேசம் ராம ராம எனும் மந்திரம் ஆகி வான்மீகியை பதப்படுத்திய செய்தி நாம் அறிந்ததுதான்.

வாலியின் மார்பில் ராமபாணம் பாய்ந்த போது அதனை எய்தவன் யாரென்று பார்க்க அம்பைக் கண்ணுறும் வாலி. “ராம” எனும் நாமத்தையே காண்கிறான்-. அது வெறும் நாமம் மட்டுமில்லை என்பதை அந்தப் பாடலிலேயே கம்பர் தெளிவுப்படுத்துகிறார்.

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலமந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை. “இராம” என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களில் தெரியக் கண்டான்.

வெறுமனே கண்கொண்டு வாலி பார்த்தானே தவிர, அம்பின் வழி “ராம” என்னும் அருள் மந்திரம் தன்னுள் ஊடுருவியதையோ, இன்னும் சிறிது நேரத்தில் அது வேலை செய்யப் போவதையோ உணரவில்லை.

இராமனுடன் வாலி வாதம் புரியும் காட்சிகள் அரங்கேறுகின்றன. இவற்றில் பெரும் பாலான வாதங்கள் புறவயமாக நிகழ்பவை.

தான் எனும் அகங்காரமும், தனது என்னும் மமகாரமும் மேலெழுந்த நிலையில் வாலி பேசப்பேச, இராமன் பொறுமை காக்கிறான்.

பேராற்றல் பொருந்திய ஒன்றின் இருப்பு நம்மில் சில மாற்றங்களை இயல்பாகவே தோற்றுவிக்கும். அங்கே பிரசன்னமாகியிருக்கும் இராமன் என்னும் இறையாற்றலை வாலி மெல்ல மெல்ல இனம் காண்கிறான்.

வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றான் என்பார்கள். உண்மையில் எல்லா உயிர்களையுமே இறைவன் மறைந்திருந்துதான் கொல்கிறான். ஆனால், மரணப் பொழுதில், தன்னைப்பற்றிய எண்ணங்கள் வரும்போது தன் மீதான ஆசை, அறிவை மயக்கி, மீண்டும் பிறவிகள் எடுக்கும் நிலைக்குத் தள்ளுகிறது&

“அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்
தலாஅப் பிறப்பீனும் வித்து”

இந்தக் குறளை விரித்துரைக்கும் மகாவித்து வான் அருணை வடிவேல் முதலியார்,

“உடம்பு நீங்கிப் போங்காலத்து, அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக்கதிக்கான அவாவும், உயிரின் கண் அவா அக்கதிக்கண் கொண்டு செல்லும்” என்கிறார்.

தான் வாழவேண்டும் என்னும் ஆசை, தன்மீது அம்பினை எய்த இராமனைப் பலவாறு பழித்துப்பேச வாலியைத் தூண்டுகிறது. ஆனால் “ராம” எனும் நாமமே மந்திரமாகவும். பக்குவப்படுத்தும் பதமாகவும் பிரதிட்டை செய்யப்பட்ட ராமபாணம், அந்த உயிரை மோகமும் ஆசையும் மறைக்காத வண்ணம் அறிவைத் தூண்டுகிறது.

இந்த அனுபவத்தை வாலி.

“ஏவுகவர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேளைவாய் அறிவு தந்து அருளினாய்
மூவர்நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!”

என்கிறான்.

இதில் “அறிவு தந்து அருளினாய்” என்பது மிகவும் முக்கியமான வாக்குமூலம் ஆகும்.

இறைவன் அருளும் அறிவு யாது என்பதை நாம் நுணுகிப் பார்ப்போமேயானால், அதற்கு விடைகள் பலவும் கிடைக்கின்றன.

ஆணவமானது தன் அறியாமையை அறிவென்று கருதி இறுமாந்திருக்கிறது. இறையருள் அந்த அறியாமையை அகற்றும் போது பேரறிவினனாகிய இறைவன் நம் உயிரில் நிறைந்திருப்பதை உணர முடிகிறது.

“அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே
அறிவுதனை அருளினாய்”

என்பது சிவஞானசித்தியார்.

தன்னுடைய சுய சொரூபத்தில் தான் என்னும் மாயையைக் கடந்து, சுத்த அறிவாய் பரம்பொருள் திக-ழ்வதை உணரும் அறிவே உண்மையான அறிவாகும்.

“அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந்தேனே”

என்பது திருமந்திரம்.

இந்த அறிவு நிலை, பக்தர்களுக்கு மிக எளிதில் வசப்படுகிறது. காரணம், அவர்கள் தம்மைப் பின்னுக்குத் தள்ளி, தாங்கள் பூரண பக்தி செல்லுத்தும் குருவையோ இறைவனையோ முன்னிலைப்படுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, பேரறிவு வடிவாகிய இறைவன் தனக்குள் நிலை கொண்டிருப்பதை அவர்கள் காண்கிறார்கள். தான் என்ற ஒன்றையே இறைவன் திருவடியில் சமர்ப்பித்து, தானும் இறைவனும் ஒன்றே என்னும் சுய சொரூபத்தை அடைகிறார்கள்.

முழு அன்பின் வடிவாகவே, அன்பின் பிழம்பாய்த் திரிந்தாலேயே பேரறிவாளன் சிவபெருமானின் சொரூபத்தில் கலந்து வலப்பக்கம் நின்றவர் கண்ணப்பர்.

“அவனுடைய அறிவெல்லாம் எமையறியும் அறிவு”

என்று சிவபெருமானே சொல்வதாக சேக்கிழார் பாடுகிறார்.

இதுபற்றியே “நல்லறிவாளன்” என்று கண்ணப்பரை நம்பியாண்டர் நம்பிகள் போற்றுகிறார். (இது குறித்து விரிவாக “இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்” என்னும் நூலில் எழுதியிருக்கிறேன்).

எனவே, “அறிவு தந்தருளினாய்” என்று வாலி சொல்வது அனுபூதி வாசகம் ஆகும்.

தன்னுடைய கருவி கரணங்களைக் கடந்து அறியும் அறிவில் அந்த இறையனுபவம் நிகழ்கிறது என்பதை வள்ளலார் அருட்பெருஞ்சோதி அகவலில் குறிக்கிறார்.

“தனுகரண ஆதிகள் தாம் கடந்து அறியுமோர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி”

என்கிறார்.

இராமனால் எய்யப்பட்ட கணை பாய்ந்ததாலேயே தினம் தினம் பல தீமைகள் புரிந்தவர்களுக்கு உயர்நிலை கிடைக்கும் என்றால், இராமன் திருவடிக்கு ஏவல் செய்பவர்கள். இன்னும் எவ்வளவு உயர்ந்த நிலையை எட்டுவார்கள்” என்கிறான் வாலி.

“கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்பரும் கணக்கில் தீமை
வைகலும் புரிந்துளாரும் வானுயர் நிலையை, வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால். இணையடி இறைஞ்சி, ஏவல்
செய்தவர் பெறுவது ஐயா! செப்பலாம் கீர்த்தி ஆகுமோ”

இறைவனுக்கு எவரும் தீமை செய்ய இயலாது. செய்வதாக எண்ணினால் அது, அவரவர் எண்ணமேயன்றி இறைவனின் எண்ணமன்று. முருகனை எதிர்த்த சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் ஆக்கிட, இன்று முருகனின் அடியவர்களால் வணங்கப்படும் நிலைக்குச் சென்றுவிட்டான்.

இதனை கச்சியப்ப சிவாச்சாரியார் “வரம்பிலா அருள்” என்கிறார்.

“தீயவை செய்வார் ஆயின், குமரவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்றால்
ஆயவும் வேண்டுங் கொல்லோ, அடுசமர் அந் நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்லா அருள் பெற்று உய்ந்தான்”

என்பது கச்சியப்பர் வாக்கு.

தன்மேல் இராமன் அம்பினை எய்தது. பாவம் என்று முதலில் நினைத்த வாலி, அது முக்தியை உதவும் முறை என்று உணர்ந்ததும், அதனை தருமம் என்று பேசுகிறான்.

“பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!” என்பது இந்தத் தெளிவின் விளைவேயாகும்.

‘கொல்பவன் நானே, சொல்லப்படுபவன் நானே’ என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்வதை, இராமனைப் பார்த்து கருடன் சொல்லக் காண்கிறோம்.

“கொல்” என்று உணர்த்தி, கொலையுண்டு நிற்றி.
அல்என்று நிற்றி, பகல் ஆதி, ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்”
என்கிறான்.

எவ்வளவோ தீமைகளும் தவறுகளும் செய்திருப்பினும் கூட இறைவன் எதிரில் நிற்கும் போதும் விகசித்த ஆணவத்தை ஒரு விநாடி விட்டு விடுகிறான் வாலி.

அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அந்த உயிரை இறைவனாகிய இராமன் ஆட்கொண்டுவிடுகிறான்.

இதனை வாலியும்

“யான் தவம் உடைமையால் இவ்இறுதி வந்து இசைந்தது” என்கிறான்.

வாலியும் இராவணனும் இராமனை எதிர்த்தவர்கள்.

இராவணன் நேரடியாய்ப் பகைத்தவன்.

வாலி, இராவணனை விடவும் பெரிய வீரனாய் அறியப்படுபவன்.

“கால்செலாது அவன்முன்னர், கந்தவேள் விடும்
வேல்செலாது அவன்மார்பில் வாலியின்
வால்சென்ற வாய்அலாது இராவணன்
கோல் செலாது! அவன் குடையும் செலாது!”

என்று வாலி குறித்து இராமனுக்கு அனுமன் சொல்கிறான்.

வாலி & இராவணன் இருவருமே தவத்திலும் சளைத்தவர்களல்லர். பெற்ற வரங்களின் உரத்திலும் சளைத்தவர்கள் அல்லர்.

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடியாராலும் வெல்லப்படாத வரமும் உடைய இராவணன், எதிரே வந்து நிற்பவன் இறைவன் என்று உணர்வது எப்போது?

தன் ஆயுதங்களை இராமன் வீழ்த்திய போது இராவணன் இதனை உணரவில்லை. மாறாக, தன் வரங்களை இராமன் செல்லுபடி ஆகாமல் செய்கிற போதுதான் உணர்கிறான். “மெய்வரம் எல்லாம் அடுகின்றான், இவனோ வேதமுதல் காரணன்” என்று சிந்திக்கிறான்.

இராமன் திருமுன்னர். தன் வரங்கள் செல்லுபடி ஆகாமல், ரத்தான அனுபவம் வாலிக்கும் நிகழ்ந்தது.

“புரமெலாம் எரிசெய்தோன் முதலினோர் பொருவிலா
வரமெலாம் உருவி, என் வசையிலா வலிமை சால்
உரமெலாம் உருவி என் உயிரெலாம் நுகரும் நின்
சரமலால் பிறிது வேறு உளது அரோ தருமமே”

என்கிறான்.

ஆயுதங்களைச் செயலற்றுப் போக வைக்க போர் செய்யும் அறிவு போதும். ஆனால், முயன்று பெற்ற வரங்களைச் செயலிழக்கச் செய்வது பரம் பொருளால் மட்டுமே ஆகும்.

தவவலிமை வாய்ந்த வாலிக்கும் இராவணனுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் எதிரே நிற்பது பரம்பொருள் என்பதை உணர்ந்த மாத்திரத்தில் வாலி சரணடைந்தான். இராவணனோ “யாரே ஆயினும் ஆகுக” என்று தன் ஆணவத்தை முன்னிறுத்தி யுத்தத்தைத் தொடர்ந்தான்.

சாதகர் ஒருவரை யோகநெறியில் ஈடுபடுத்தும் போது அவருடைய ஆணவம் முதலாய குற்றங்களைக் களையாமல் கற்பித்தால் அது அந்த சாதகரையே சாய்க்கும். பகையாகும் என்கிறார் திருமூலர்.

“கற்பார் கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் மூன்றும் தமக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பால் நந்தி மொழிந்து வைத்தானே”

என்கிறார் திருமூலர்.

ஆணவம் அகலாத நிலையில் ஒருவர் வரமெல்லாம் பெற்றாலும் இறை அனுபவத்தை உணரமாட்டார்கள் என்று அவரே சொல்கிறார்.

“ஆங்காரம் அற்று அனுபவம் கையுறார்”
என்கிறார்.

“ஒரு விநாடியில் தீட்சை தரமுடியும் என்றாலும், ஒருவார காலம் யோக வகுப்புகள் நடத்துவதன் நோக்கமே, மனிதனின் ஆணவத்தைக் கரைப்பதற்குத்தான்” என்பார் சத்குரு.

மேற்கொண்ட தவங்களின் விளைவாகப் பெற்ற வரங்கள், ஆணவத்தை ஊதிப் பெருக்குகிற போது அதன் விளைவாய் ஏற்படும் அழிவுக்கு இராவணனே சான்றாக நிற்கிறான்.

இராமன் கணை பாய்ந்து இராவணன் உயிர் துறந்த போது என்ன நிலையில் இருந்தான் என்பதை கம்பர் விளக்குகிறார்.

“தம்மடங்கு முனிவரையும் தலையடங்க நிலையங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா”

எத்தனையோ அரசர்களை வென்ற போது பொலிந்த முகம் என்று கம்பர் சொல்லவில்லை. முனிவர்களை வெற்றி கொண்ட போது முகம் பொலிந்ததை விட, உயிர் பிரியும் போது மும்மடங்கு பொலிந்தன என்கிறார்.

முதலில் இராவணன் முனிவர்களை எப்படி வெற்றி கொண்டிருக்க முடியும்? தவத்தில் இன்னொருவரை வெற்றி கொள்வது மிக மிக சிரமம். ஆனால், ஆவணத்தில் வெல்லுதல் மிக மிக எளிது.

ஊரில் எல்லோரும் சண்டையிடுவதைப் பார்த்த இரண்டு ஜென் முனிவர்கள், நாமும் சண்டையிட்டால் என்ன என்று கலந்து பேசினார்கள். சரி, சண்டை போடலாம் என்று முடிவெடுத்தார்கள். சண்டை போடுவதென்றால் எதைவைத்துச் சண்டை போடுவது? அங்கே ஒரு கல் இருந்தது. அதை வைத்துப் போடலாம் என்று தீர்மானித்தார்கள்.

முதல் துறவி, “இந்தக் கல் என்னுடையது” என்றார்.

இரண்டாம் துறவி, “அப்படியா! சரி! உன்னுடையதென்றால் எடுத்துக்கொள்” என்றார்.
ஒரே விநாடியில் சண்டை முடிந்து விட்டது!

தம்மில் அடங்கிய முனிவருடன் இராவணன் சண்டையிட்டிருந்தால் இப்படித்தான் முடிந்திருக்கும். ஏனெனில் தன்முனைப்பு அற்றவர்கள் முனிவர்கள். தன் முனைப்பின் வடிவம் இராவணன். இவர்கள் இராவணனுடன் சண்டைக்கே வந்திருக்க மாட்டார்கள்.

இதனை, ஆரணிய காண்டத்தில், அகத்தியப் படலத்தில், கம்பர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “யாருக்கு என்ன வரம் வேண்டுமானாலும் அளிக்கக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தாலும், தங்கள் பொறுமை காரணமாக, மனதிலிருந்த சினத்தை முழுவதும் போக்கிவிட்டார்கள்.

“எனவே, அவர்கள் அரக்கர்களால் துன்பப்பட்டார்கள்” என்கிறார்.

“வேண்டின வேண்டினர்க்கு
அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும்
பொறையின் ஆற்றலால்
மூண்டெழு வெகுளியை
முதலின் நீக்கினார்
ஆண்டு உறை அரக்கரால்
அலைப்புண்டார் அரோ”

என்பதன் மூலம், முனிவர்கள் இராவணன் முதலிய அரக்கர்களால் துன்பப்பட்டது, ஆற்றலின்மையால் அல்ல, மாறாக, சினமின்மையால் தான் என்பதைக் கம்பர் தெளிவுப்படுத்துகிறார்.

முனிவர்களின் தவத்திற்கு தன்னகங்காரமில்லை. எனவே அவர்களைத் தன்னுடைய ஆணவத்தால் மட்டுமே இராவணன் வென்றிருக்க முடியும். அவர்களும் தோற்கத் தயங்காத போது அது பெரிய வெற்றியில்லை. அந்த ஏமாற்றத்தால் இராவணனின் முகங்கள் அதிகம் பொலிந்திருக்காது.

ஆனால், இராமனின் கணையானது ஆணவத்தின் வேரினை அறுத்தமையால் அந்த முகங்கள் மும்மடங்கு பொலிந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *