மனிதர்கள், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குப் பழகி விடுகிறார்கள். இன்பத்தில் நாட்டம், வாழ்வில் பெற்ற வெற்றிகள் குறித்த பெருமிதம் போன்றவை ஒருவிதமான மிதப்பில் கொண்டு செலுத்தும் போது எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தசரதன், இராமனுக்கு முடிசூட்ட விழைந்தமைக்குக் காதோரம் நரைத்த சிகை காரணமென்று சொல்லப்படுவதுண்டு. கம்பனில் அப்படியரு காட்சி இல்லை.
மாறாக, மந்திரக் கிழவரிடத்திலும் அமைச்சர்களிடத்திலும் தசரதன் பேசுகிற பேச்சு, ஞானத்தின் சாரல் தெறிக்கிற பேச்சாக இருக்கிறது. பேசுபவன் சக்கரவர்த்தி தசரதனா, சம்பந்தி ஜனகனா என்ற ஐயம் தோன்றும். அந்த அளவு தசரதன் ஞானமொழிகளைப் பேசுகிறான்.
இதுகாறும், காமவயப்பட்ட வாழ்வினை வாழ்ந்த நிலை மாறி, ஞானத்தைத் தேடும் தவவாழ்வை மேற்கொள்ள தசரதன் விரும்புகிறான்.
புறப்பகைவரை வென்ற தனக்கு, அகப்பகையாகிய காமகுரோதங்களை வெல்லாமல் வாழும் நிலை ஏன் வேண்டுமென்று ஆழச் சிந்தித்து, தன்னைத் தெளிகிறான் தசரதன்.
கைகேயி தேரை இயக்க, பகைவர்களை வென்ற தனக்கு, ஆசைவயப்பட்ட புலன்களாகிய கழுதை இழுக்கும் தேரை இயக்கி வெல்வது கடினமா என்று பேசுகிறான்.
புதல்வர்கள் திருமணம் முடிந்து வந்த கையோடு இப்படித் துறவு வாழ்வை நினைத்து தசரதன் பேசும்படி என்ன நடந்தது என்று பார்க்க வேண்டும். தசரதனின் எண்ண ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவன் கூற்றாகவே கம்பர் எழுதிக் காட்டுகிறார்.
“வெள்ளநீர் உலகினில், விண்ணில், நாகரில்
தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்
கள்ளரின் கரந்துறை காமம் ஆகி ஆம்
உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வேனோ?
பஞ்சுமென் தளிரடிப் பாவை கோல்கொள
நெஞ்சிதைத்து அவுணர் தோற்பதும் வென்றுளோற்கு
எஞ்சலில் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ?”
இத்தகைய உள்நிலை ஆய்வு தரசதனுக்கு ஏற்படுகிறது. அத்துடன் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் தெப்பம் துறவுதான் என்னும் முடிவுக்கு வருகிறான்.
“துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ”
என்கிறான்.
இந்த அளவு தன்னுடைய எண்ண ஓட்டங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடும்படி தசரதன் சிந்திக்கிறான் என்றால், அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏதோ ஓர் அம்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இராமன் திருமணம் முடிந்து வருகையில் பரசுராமன் எதிர்கொள்வதும், அவனைக் கண்டதுமே தசரதன் பதறுவதும், கால்களில் விருந்து கெஞ்சுவதும் நடக்கிறது. ஆனால் இராமன் பரசுராமனை வெற்றி கொண்டதோடு, பரசுராமனின் தவத்தினை இலக்காக்கி அம்பெய்ததில் அதிர்ந்து போகிறான் தசரதன்.
இதுகாறும், தான் சிறுவனென்று நினைத்து, தன்னால் காக்கப்பட வேண்டும் என்று தான் கருதிய இராமன் இறைவனின் அம்சம் என்பதை உணர்கிறான்.
“மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு
இம்மையும் மறுமையும் ஈயும்”
என்று உணர்ந்து கொள்கிறான்.
இந்தப் புரிதல் அவனுக்குள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நினைவுடனேயே அவனுடைய இறுதிக் கணங்கள் கழிந்ததாலோ என்னவோ சீதை தீக்குளித்த பிறகு, சிவபெருமான் அழைக்கையில், தசரதன் எழுந்து வருகிறான்.
அதுவும் உடலோடு வந்து தனயனைத் தழுவிக் கொள்கிறான். தன் மகனின் தெய்வாம்சத்தைக் கண்டதால், இறுதிக் காலத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு தசரதனுக்கு ஆன்மத் தெளிவை அளித்திருக்க வேண்டும். இது, தசரதன் வாழ்வில் ஏற்பட்ட நிலைமாற்றத்தை உணர்த்துகிற பகுதியாகும்.
காவிய நிகழ்வுகளை ஒரு யோகியின் கண்கொண்டு காணும் போது எவ்விதமான புதிய வெளிச்சம் துலங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.
தசரதனுக்கு 60,000 மனைவியர் என்றும், அதே போல பற்பல அரசர்களின் அந்தப்புரங்கள் பெண்களால் நிரம்பி இருந்தன என்றும் படிக்கிறோம். இது குறித்து கேள்வி & பதில் ஒன்றில் சத்குரு விளக்கினார்.
“பகைநாடுகளை வென்ற அரசர்கள், போரில் உயிரிழந்த அரசர்களின் மனைவியரை அங்கேயே விட்டு வரவில்லை. அவர்கள் வாழ்வு எந்த நிலையில் இருக்குமோ என்னும் ஐயத்தால். தங்களுடனேயே அந்தப்புரத்தில் தனியாகவும் சுதந்திரமாகவும் வாழ வகை செய்தார்கள்.
“பெண்களை மதிக்கும் பண்பாட்டின் வெளிப்பாடான இந்தச் செய்கை பிற்காலத்தில் மேலோட்டமாகக் காணப்பட்டது” என்பார் சத்குரு.
துறக்க நிலையிலிருந்த தசரதன் சிவபெருமான் பணித்ததும், பூமிக்கு வந்து இராமனை ஆறத் தழுவி, சீதையைத் தேற்றி, இலக்குவனை பாராட்டி, இராமனுக்கு வரங்கள் தந்து மீள்கிறான்.
துறக்கமாம் சுவர்க்கத்திலிருந்து வந்த தசரதன் சூட்சும உடலில் வந்ததாகத் தெரியவில்லை. தன் விரிந்த தேகத்தில் இராமனின் திருமேனி அழுந்தும் விதமாய் அரவணைத்தான் என்கிறார் கம்பர்.
“வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன் கண்ணின் நீராட்டி
வாழ்ந்த சிந்தையின மனங்களும் களிப்புற மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்றிவை புகன்றான்”
தசரதன் தன் உடலோடு சுவர்க்கம் புகுந்தான் என்பதை கம்பர் நேரடியாக விளக்கவில்லை. ஆனால், இராமன், தனக்குத் துணை செய்தவர்களை பட்டாபிஷேகத்திற்கு அயோத்திக்கு அழைக்கையில், ஓர் அற்புதமான உரையாடல் நிகழ்கிறது.
“புறப்படுவதென்றால் புறப்படுங்கள்” என்று விடை கொடுத்தவன். அவர்கள் எல்லோரும் பட்டாபிஷேகம் காண வருவதாய்ச் சொல்லக் கேட்டு, தானே அழைக்க விரும்புயதாகவும் அவர்கள் வசதி அறிந்து கொள்ளவே புறப்படச் சொன்னதாகவும் சொல்ல, துணைவர்கள் அதிசயித்தனர்.
அவர்கள் எவ்வாறு அதிசயித்தனர் என்று சொல்ல வந்த கம்பன், “உடலோடு சுவர்க்கம் புகுந்தவர்கள்போல் அதிசயித்தனர்” என்கிறார்.
“மெய்யினோடு அருந்துறக்கம் உற்றார் என வியந்தார்”
இது, சற்றுமுன் வந்து சென்ற தசரதனைக் குறிப்பது போலவும் தோன்றுகிறதல்லவா!
யோகம் என்னும் சொல்லை அதன் உண்மையான & முழுமையான & பொருளில் புரிந்து கொள்பவர்களுக்கு கம்பனில் யோகாம்சங்கள், யோக ரகசியங்கள், யோகவியலின் தன்மைகள் எங்கெல்லாம் தொழிற்படுகின்றன என்பதை இனம்காண இதுவரை சொன்ன பகுதிகள் உதவியிருக்கும்.
ஆனால் யோகக்கலையின் வித்தாக விளங்கும் ஒன்றினைப் பற்றி, முடிசூட்டுப் படலத்திற்குச் சற்று முன்னர் கம்பர் ஒரு பாடலில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் குறிப்பிடுகிறார்.
சீதை தீப்புகுந்து மீண்டதன் பின்னால், நான்முகன், இராமனிடம் அவனைப் பற்றி நினைவூட்டுகிறான். இராமனின் பரம்பொருள் தன்மையைப் பன்னிரண்டு பாடல்களில் விளக்கிவிட்டு, இராமனை யாரால் உணர முடியும் என்று சொல்லும்போது பிரணவத்தின் பெருமையை நான்முகன் பேசுகிறான்.
“ஓங்காரத்தின் பொருளைத் தேறுவோர் மட்டுமே இராமனை உணர்ந்து தியானிப்படுவர்கள் இருவினை உகுப்பார்கள். இதில் முரண்படுவோர் ஊழிக்காலம் வரை தடுமாறி, வீடுபேறு பெறாமல் நிற்பார்கள்” என்கிறான்.
“பலரும், பிரணவம் என்பதை ஒரு மந்திரம் என்று மட்டுமே கருதுகிறார்கள். சிலரோ, அகரம், உகரம், மகரம் ஆகியவற்றின் கூட்டு என்று ஒரு தகவலாகத் தெரிந்து கொண்டு, அதன் தத்துவ விளக்கத்தை மட்டுமே கேட்டறிந்து” பிரணவத்தை அறிந்து கொண்டதாகக் கருதிவிடுகிறார்கள்.
உண்மையில், பிரணவம், சம்பிரதாயத்துக்காக ஓதப்படுகிற மந்திரம் மட்டுமல்ல, அது தத்துவ விளக்கம் மட்டுமல்ல. பிரபஞ்ச உருவாக்கத்தின் விதையாய் இருப்பது பிரணவம்.
பொதுவாக, நாம் “ஓம்” என்றே உச்சரிக்கிறோம். யோக மரபில் ஓங்கார தீட்சை பெற்றவர்கள் அ- உ – ம் என்று தனித்தனியாக, அவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட தொனியில் உச்சரிப்பார்கள்.
முறைப்படி இந்தத் தொனியில் உபதேசம் பெற்று, தனித்தனியாக மூன்று ஒலிகளையும் உச்சரிப்பவர்கள் இதுவரை ஓம் என்று உச்சரித்ததற்கும் அதற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டை உணரமுடியும்.
ஈஷாவில் ஓங்கார தீட்சை ஒவ்வொரு நாளும் தரப்படுகிறது.
ஈஷாவில், ஓங்காரம் மூவெழுத்தொரு மொழியாய் பயிற்றுவிக்கப்படுவதன் பலன்களை ஆய்வு செய்ய புதுடில்லியில் உள்ள லேடி இர்வின் கல்லூரி ஆய்வாளர்கள் முன்வந்தனர்.
விளையாட்டு வீரர்கள் உடல்கூற்று அம்சங்களிலும், மனைவியல் அம்சங்களிலும் இந்தப் பயிற்சியில் மகத்தான மாற்றங்களைக் கண்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இருபத்தோரு நாட்களுக்கு, தினம் இருபத்தோரு நிமிடங்கள் ஓங்காரப் பயிற்சியை அவர்கள் தொடர்ந்து செய்ததன் பிறகு மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனை பயிற்சிக்கு முன்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் இருந்து மகத்தான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
பதஞ்சலி, “தன்ய வாசக ப்ரணவ” என்கிறார்.
பிரணவத்தை, “நடாவு சிவசங்கின் நாதம்” என்கிறார் திருமூலர். மனம், உடலின் இயல்பை விடாமல் இருக்கிறது. அதனை பிராணாயாமம் வழி, பிராணவத்தில் இணைத்து, தன் ஐம்புலன்களையும் அதன்வழி கொண்டு செலுத்தாதவர்கள், இறையனுபவமாகிய அமுதத்தை நுகரமாட்டார்கள் என்கிறார் திருமூலர்.
“விடாத மனம் பவனத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே”
பிரணவமாகிய ஓரெழுத்துள் இறைவன் உருவமாய், அருவமாய், பல பேதங்களாய், முக்தியாய், சித்தியாய் உள்ளான் என்றும், ஓங்காரத்திலேயே ஐம்பூதங்கள், சராசரங்கள் எல்லாம் தோன்றின என்றும் திருமூலர் சொல்கிறார். பிரபஞ்ச உருவாக்கமே அண்டப் பேரொலி ஒன்றில் தோன்றியது என்று அறிவியல் உலகம் இன்று சொல்வதை இதனுடன் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது.
“ஓமெனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓமெனும் ஓங்காரத்து உள்ளே உரு அரு
ஓமெனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உள்ளன
ஓங்காரா சிவ பரசிவ ரூபமே”
என்கிறார்.
யோக சாதனையில் மூழ்கித் திளைப்பவர்களுக்கு தாமே ஓங்காரம் கேட்கும் என்பதால், அவர், “பிரணவம் ஆகும் பெருநெறி” என்றே பேசுகிறார். யாரும் எழுப்பாமல் தானே எழுவதால் இதற்கு அநாஹத த்வனி என்று பெயர்.
யோக சாதனையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஓங்காரமும் இன்னபிற இன்னொலிகளும் கேட்கும் என்று சிவன் உமையம்மையிடம் சொன்னதாகவும், அதனைப் பல அருளாளர்கள் ஆராய்ந்து கண்டதாகவும் “நிஷ்டானுபூதி” என்னும் யோக நெறி நூல் சொல்கிறது.
“இத்திறம் ஆன யோக சாதனையில்
இருந்து சாதிப்பவர் தமக்கு, இச்
சுத்தமா நாதத் தொனிகளும் பலவாத்
தோன்றிடு மனிகடல், மேகம்,
மத்தவும், பேரீ, யாழ்ஒலி, சிலம்பு
வளையளித் தாளம் என்று உமையாட்கு
அத்தனும் மொழிந்தான் & அன்றியும் உரவோர்
ஆய்ந்தெடுத்து உரைத்தனர் அன்றே”
இந்த ஓங்காரமே முதலில் எழுந்தது, அதிலிருந்தே அனைத்தும் பிறந்தது என்கிறது மாண்டூக்ய உபநிஷதம்.
(ஓமித்யேததக்ஷரதமிதம் ஸர்வம் தஸ்யோபவ் யாக்யானம் பூதம் பவத்பவிஷ்யதிதி ஸர்வமோ கங்கார ஏவ யச்சான்யத் த்திகாலாதீதம் ததப்போயங்கார ஏவ)
இதம் – இந்த; ஸர்வம் – அனைத்தும்; ஏதத் – இந்த ஓம் -ஓங்காரம்; அக்ஷரம் – மந்திரம்; தஸ்ய – அதன்; உபவ்யாக்யானம் – விளக்கம்; பூதம் – சென்றவை; பவத் – இருப்பவை; பவிஷ்யத் – வருபவை; ஸர்வம் – எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரமே; அன்யத் ச – மற்றவை; யத் – எவை; த்ரிகால அதீதம் – மூன்று காலங்களையும் கடந்தது; தத் அபி- அதுவும் ஓங்கார ஏவ – ஓங்காரமே.
“இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே.
சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் படைப்பு என்பதைக் குறிக்கின்றன. படைப்பாக இருப்பது ஓங்காரம். இது பிரணவ மந்திரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனியே. அதிலிருந்தே உலகமும் அண்ட சராசரங்களும் தோன்றியதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான் “உலகம் அனைத்தும் ஓங்காரம்” என்று இங்கே கூறப்பட்டது.
பிரணவம் பற்றி சுவாமி சச்சிதானந்தா, “கடவுள் தம் முழுத்தன்மையயும் காட்டி, நம் உள் எழுந்து நாம் அனுபவிக்கும்படிச் செய்யக் கூடிய கடவுளின பெயர்தான் பிரணவம்” என்கிறார்.
இது குறித்து அவர் இன்னும் விளக்கும்போது, “ஓம் என்பது பிரணவம் என்று ஏன் சொல்கிறோம்? அது பிராணத் தொடர்புடையதால் அப்படிச் சொல்கிறோம். பிராணன் எப்போதும் உடலை உயிருடன் வைத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் உடையதாகும்.”
“இதற்கு பூகோள வரம்பும் கிடையாது. அரசியல் வரம்பும் கிடையாது. சமய, மத, ஆன்மிக வரம்பும் கிடையாது.
இந்த ஓங்கார பிரணவத்தின் வடிவத்தையே அதன் ஓசையில் சிறுசிறு மாற்றங்களைச் செய்து பல சமயங்கள் உபயோகிக்கின்றன.
“ஓம்” என்ற பிரணவம் கிறித்துவத்தில் “ஆமென்” என்று வழங்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தியே “அமீன்” என்று உபயோகிக்கிறார்கள்.
இதிலிருந்து “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் ஓசையை யாரோ வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள் என்று எண்ணிவிடவும் கூடாது.
சத்தியம் என்பது ஒன்றுதான்.
இதை ஒரு நிகழ்ச்சியின் மூலமாக விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு தாய் தன் மூன்று குழந்தைகளுடன் நின்று கொண்டு இருக்கிறாள்.
அந்தச் சமயத்தில் தூரத்தில் ஒரு வெடிச் சத்தம் கேட்கிறது.
ஒரு குழந்தை, “அம்மா! “டொபீர்” என்ற சத்தம் கேட்டதே அது என்ன?” என்கிறது.
இன்னொரு குழந்தை, “அம்மா! “படீர்” என்ற சத்தம் கேட்டதே அது என்ன?” என்கிறது.
மூன்றாவது குழந்தை, “அம்மா! “டூமீர்” என்ற சத்தம் கேட்டதே அது என்ன?” என்கிறது.
வெடிச் சத்தம் என்னவோ ஒன்றுதான். ஆனால் குழந்தைகள் அந்த ஒரே சத்தத்தை தங்களுக்குத் தெரிந்த வார்த்தையில் சொல்லுகின்றன.
தியானத்தில் அமரும் சாதகர்கள் அதன் வெற்றியை அடையும்போது பிரபஞ்சத்தின் வித்து ஒலியாகிய “ஓம்” என்ற பிரணவத்தின் ஒலியைத்தான் தமக்குள் கேட்கிறார்கள் என்கிறார் சுவாமி சச்சிதானந்தா.
இதனால்தான் உபநிஷதம், “ஏகம் சத்விப்ராஹ பகுதா வதந்தி” என்று சொல்கிறது.
அதாவது, “சத்தியம் ஒன்றுதான். சான்றோர்கள் அதைப் பல வடிவங்களில் வெளியிடுகிறார்கள்” என்கிறது.
இதனால் பிரபஞ்சத்தின் அடிப்படையான பிரணவத்தின் ஒலியை & வித்தாகிய ஒலியான “ஒம்” என்ற சொல்லைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம் என்கிறர் சுவாமி சச்சிதானந்தா.
இனி, ஓங்காரம் பற்றி இராமனுக்கு நான்முகன் சொல்வதாக வரும் கம்பராமாயணப் பாடலைப் பார்க்கலாம்.
“ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உன்னை உணர்வோர்
ஓங்காரப் பொருள் என்றுணர்ந்து இருவினை உகுப்போர்
ஓங்காரப் பொருள் “ஆம்” “அன்று” என்று ஊழி சென்றாலும்
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர்”
பிரணவத்தைத் தேர்தல், உணர்தல் என்றால் பிரணவத்தை வெறும் எழுத்தாகவோ, தந்திரமாகவோ பாராமல், பிரணவத்தின் பிரயோக முறையை அறிந்து, அதனை அன்றாடப் பயிற்சிக்குள் கொண்டு வருகிற சாதகர்களே இராமனை உணர்வார்கள் என்று நான்முகன் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.
இராம காதையைக் கற்பவர்கள், உலக வாழ்வில் இருந்த வண்ணமே இறைநெறியில் பொருந்தி நின்று, வினைகள் கழியப்பெற்று குருவின் அருளும் இறையருளும் வாய்க்கப் பெறும் நல்வாழ்வை வாழ ஊக்கங் கொள்ளுதல் வேண்டும்.
இராமகாதையின் வழி, உலகியல் அறம், இல்லற நெறி ஆகியவற்றை உணர்வதோடு நில்லாமல், பரம்பொருளுடன் பொருந்துகிற நன்னிலைமையிலும் நாட்டம் கொண்டு, அந்த ஒருமை நிலையை எய்த, வாராதே வந்த வள்ளலாம் காகுத்தனின் கருணை முன்னிற்பதாக!