வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
ஒரு சிறுவன் நிலத்தின் மடிமீது நடைபோடும் போது, கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்தாலும் தீராத பிரமிப்பாய் திகழ்பவை குன்றுகள். இவற்றை ஏறிக் கடப்பது எப்படி என்கிற மலைப்பைத் தருவதாலோ என்னமோ மலைகள் என்றவற்றை சொல்கிறோம்.
அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகிறான் வாழ்வில் உயர்பவன் ஒரு நாள் விமானத்தில் செல்கிறான். ஜன்னல் வழியே குனிந்து பார்த்தால் குன்றுகள் தெரிகின்றன. ஒரு காலத்தில் அவன் கண்டு மிரண்ட குன்றுகள், இன்று கடுகுகள் போல் காட்சியளிக்கின்றன.
குன்றுகளை வென்று விட வேண்டும் என்று கருதியதில் அவன் மலைகளை உடைக்கக் கிளம்பவில்லை. மலைகளின் மேல் பறக்கும் விதமாய் உயர்ந்தான். விசுவரூபத் தத்துவத்தின் விளக்கம் இதுதான்.
நீங்கள் எதைக்கண்டு மிரள்கிறீர்களோ அதை எப்படி வெல்ல முடியும் தெரியுமா? அதையும் தாண்டி நீங்கள் வளர்வது ஒன்றே வழி.