வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
எதையும் செய்யாமல் இருக்க வைக்கும் பதவிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிவலோக பதவி. இன்னொன்று வைகுந்த பதவி. அதுவரை வகிக்கும் பதவிகள் அனைத்துமே பொறுப்புகள். பொறுப்புகள் என்பவை கடமைகளைக் கட்டமைப்பவை.
கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும் அங்கீகாரமும் இருப்பதை உணர்த்தவே பொறுப்புகள். அரசியல் தலைவர்களாகட்டும் அதிகாரிகளாகட்டும், பொறுப்புணர்ந்து செயல்படுபவர்களையே காலம் கனிவோடு நினைவு கூர்கிறது.
சுகங்களுக்காகவும், சுயநலங்களுக்காகவும் பதவிகளைப் பயன்படுத்துபவர்கள் இனம்காணப்படுகிறார்கள் மறக்கப்படுகிறார்கள்.
எந்தப் பதவிக்கு வந்தாலும் பதவியில் இருக்கிறோம் என்கிற எண்ணத்தை உதறி, தன் பொறுப்பை உணர்பவர்களே வரலாற்றில் வாழ்கிறார்கள்.