வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
பகல் என்ற ஒன்றையே பார்த்திராமல் இரவை மட்டுமே எதிர்கொண்ட மனிதன், வானம் இருளால் ஆனதென்று நினைப்பான். அவனைப் பொறுத்த வரை வெளிச்சம் என்ற ஒன்றே இல்லை. ஆனால் புலர் காலப்பொழுதில் சூரியக் கீற்றொளி மெல்லத் தலைகாட்டும் போதே பழைய இருட்டு படீரென விலகுவது பெரும் வியப்பாய் இருக்கும்.
மனமும் ஆகாயம் போலத்தான். சோர்வின் இருட்டு சூழ்ந்து கொள்ளும் போது விடிவுமில்லை முடிவுமில்லை என்று விசனப்படுகிறமனது சின்னஞ்சிறிய நம்பிக்கை வெளிச்சம் வந்தாலும் அந்த சுடரைப் பெருக்கி சூரியனாக்கி விடுகிறது.
சோர்வின் இருட்டு சுற்றிக் கொள்கிறபோதெல்லாம், தீர்வின் சின்னவெளிச்சம் தென்படுகிறதா என்று பாருங்கள். உங்களை வருத்தும் கேள்விக்கு விடையும் விடிவும் வந்து கொண்டிருப்பதை உணர்வீர்கள்.
சிரமமான சூழல்களில் ஏற்படும் முதல் நம்பிக்கை, முதல் திருப்பம், முதல் வெளிச்சம் ஆகியவற்றை இனம்காணும் விதமாய் தெளிவிருந்தால் போதும், வெளிச்சம் வந்தே தீரும்.