வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
எந்த ஒருவரின் வளர்ச்சியோ வெற்றியோ சக மனிதர்களைச் சார்ந்ததில்லை. வாழ்வின் முக்கிய நேரங்களில் துணையிருந்தவர்கள் அல்லது உடனிருந்தவர்கள் உதவியிருந்தாலும் கூட அவர்கள் கருவிதான். ஒரு சம்பவத்தில் விளையும் நன்மை தீமைகளுக்கு நிச்சயமாக நீங்களே பொறுப்பு.
நமக்குத் துணை நின்றவர்களிடம் நன்றி காட்டுவது அவசியம். அதற்காக நம் வெற்றிகளையும் நம் வாழ்க்கையையும் அவர்களுக்கு அடகுவைக்க வேண்டிய அவசியமில்லை.
ஏதோ ஒரு நேரத்தில் நமக்கு உதவியவர்களோ நம் உதவி பெற்றவர்களோ என்னால்தான் எல்லாம் என்று சொல்லித் தொடங்கலாம். அதைப் போலி வார்த்தைகளால் நாம் அங்கீகரிக்காத போது அவர்கள் பகையாக மாறலாம்.
பழகியவர்கள் எதிர்க்கும்போது பதட்டம் வருவது இயற்கை. ஆனால் அந்தப் பதட்டம்தான் நம்மை வீழ்த்துமே தவிர அவர்களின் பகைமை நம்மை வீழ்த்தாது.
நண்பனே பகைவனானால்கூட நம்மை வீழ்த்தும் வல்லமை அவனுக்கில்லை.
எனவே கும்பிட்ட கைகள் குழிவெட்ட வந்தால் புன்னகையோடு பொறுத்திருங்கள். அவர்கள் வெட்டிய குழியில் உங்கள் அடுத்த வெற்றிக்கான விதைகளைப் போடுங்கள்.