வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
பகையை உறவாக்குவது பற்றிப் பேசுகிறபோதே உறவைப் பகையாக்கிக் கொள்ள எளிதான வாய்ப்புகள் இருப்பதையும் பார்க்க வேண்டும். வாழ்வின் மிகச் கசப்பான தருணங்கள், நமக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் மூலமாகத்தான் உருவாயின என்பது, நாம் உணர்ந்து பார்த்த உண்மை.
அறிமுகமாகும் எந்தத் தொடர்பையும் உறவாக வளர்ப்பதும் பகையாக நினைப்பதும் நம் விருப்பத்தில் மட்டுமல்ல. விழிப்புணர்விலும் இருக்கிறது.
விழிப்புணர்வோடு பேசப்படுகிற வார்த்தைகளும் செய்யப்படுகிற செயல்களும் உறவுகளை சேதாரமில்லாமல் காப்பாற்றி விடுகின்றன.
அதே நேரம், உறவாயிருந்த ஒன்று பகையாக மாறும்போது, நம் கண்முன்பே நம் உதடுகளிலிருந்து வார்த்தைகள் கை நழுவி விழுந்து களேபரம் செய்யும்.
கசப்புகளைத்தாண்டி உறவுகளை நிலை நிறுத்துவதும். கசப்புகளை காரணம் காட்டி உறவுகளை பகையாக்கிக் கொள்வதும்… உங்கள் விருப்பம்!!