வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
என்னுடைய பந்தயம் எவரோடும் இல்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோதுகளங்களில் மலர்ச்செடி நடுகிறேன்….”
என்னுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.
பகையை சம்பாதிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ள இடத்தில் நட்பை உருவாக்கிக் கொள்வதுதான் தனித்தன்மை.
ஒரே துறையில் இயங்குகிற இரண்டு பேர்கள் பகையாளர்களோ போட்டியாளர்களோ அல்ல, சக பயணிகள் என்பதைத் தெரிந்து கொண்டாலே இந்த மனமாற்றம் சாத்தியமாகிவிடும்.
போர்க்களங்கள் மோதுவதற்கான இடங்கள் மட்டுமல்ல. அவை புதிய உறவுகளை பதியனிட வேண்டிய இடங்கள். “இன்று போய் நாளை வா” என்று இராவணனிடம் சொல்லும்போது இராமன் அப்படியரு மலர்ச் செடியைத் தான் நட முயல்கிறான்.
எதிர்ப்பை ஜெயிப்பது என்பது ஒருநிலை. எதிரியை ஜெயிப்பது என்பது வேறொரு நிலை. எதிர்ப்பை ஜெயிக்க வேண்டுமென்றால், கச்சை கட்டிக் களமிறங்குங்கள். எதிர்ப்பை ஜெயிக்க வேண்டுமென்றால் அவனுக்காக உளம் இரங்குங்கள்.