வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
பாடகர்களுக்கு பின்னணிப் பாடகர் என்றும் இசைக்கு பின்னணி இசை என்றும் சொல்கிறார்கள். அந்தப் பாடகர் புகழ் நிலையில் முன்னணியில் இருந்தால்கூட அவர் பின்னணிப் பாடகர்தான்!!
ஒரு காரியம் நடக்கும்போது நாம் முன்னணியில் இருந்து செயல்படுகிறோமோ பின்னணியில் இருந்து செயல்படுகிறோமா என்பது முக்கியமல்ல.
செய்கிற வேலையை சரியாய் செய்தால் நீங்கள் திரை மறைவில் செய்யப்பட்டாலும் உங்கள் வேலையே உங்களை முன்னணிக்குக் கொண்டு வரும்; முன்னேற்றம் தரும்.
எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று சொல்பவர்கள், டி.எம்.எஸ். பாட்டு, எஸ்.பி.பி. பாட்டு என்றும் சொல்கிறார்களல்லவா?
உங்கள் அலுவலகத்தில் அன்றாட அலுவல்களை ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் டெலிபோன் ஆபரேட்டரா? நீங்கள்தான் குரலிசைக் கலைஞர்!
நீங்கள் கம்ப்யூட்டர் ஆபரேட்டரா? கணக்குகளை கணினியில் பதிப்பவரா? நீங்கள்தான் விரலிசைக் கலைஞர். சுருதி பிசகாத உங்கள் செயல்திறன் உங்கள் அலுவலகத்துக்கு வெற்றியையும் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
உங்களுக்குத் தெரிந்ததை உற்சாகமாய் செய்வதே சாதனையின் சங்கீதம்!!