வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
காடு மேடுகளில் கிடந்த கனவில் லயித்துக் கிடந்த அந்தக் கல்லில் இறங்கியது மந்திர நாதம். கொஞ்ச நேரத்தில் குளிர்ந்த நீர். கண் திறந்த சிலை, கடவுளாகியிருந்தது. அர்ச்சனையும், ஆரத்தியும் அமர்க்களப் பட்டது.
கல்லின் இதயம் கனிந்தது. தன்னைத் தொட்ட உளியை நன்றியுடன் நினைத்தது.
வலிக்க வலிக்க செதுக்குகிற உளியின் தீண்டலல்லவா, உள்ளே இருந்த தெய்வத்தை உசுப்பியது.
உயிரற்றகல்லுக்கே வலியால் ஒளி பிறக்குமென்றால், உங்களுக்கு மட்டும் சாத்தியமில்லையா என்ன?
எதிர்கொள்ள நேர்கிற எல்லா சவால்களும் நம் பலங்களைப் பறைசாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பு.
பின்னடைவுகளை எதிர் கொள்ளாத மனிதனில்லை. பின்னடைவுகளைத் தாண்டி முன்னேறாதவன் மனிதனே இல்லை. வீழ்ச்சி வருகையில் உலகம் பரிகசித்தாலும், எழுந்த பிறகு உலகம் காட்டும் மரியாதை பல மடங்கு பெருகும். வெட்டிவிடப்பட்ட செடிதான் வளரும்.