வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
விரைந்து போகிற வாகனத்தின் ஓட்டத்துக்குத் தடையாய் ஒரு சின்னக் குறையோ அடைப்போ இருக்கலாம். பழுது பார்ப்பவர் அந்தக் குறையை நீக்குவதில் முக்கியத்துவம் காட்டுவார்.
வாழ்க்கை முயற்சிகளில் ஏதேனும் ஒரு தடை ஏற்படுமேயானால் அந்தத் தடையைத் தாண்டி வருவதற்கான வழியைக் கண்டறிவதே முதல் தீர்வு; முழு தீர்வும் கூட.
ஆனால் பெரும்பாலானவர்கள், அப்படியரு தடை ஏற்பட்டுவிட்டதே என்கிறகவலையிலேயே கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிடுவார்கள். கன்னத்தில் வைத்த கையை எடுத்தால்தான் தடை நீங்கும் வழி தெரியும்.
கவலை என்றசொல்லிலேயே வலை இருக்கிறது. உண்மைதான். ஆனால் ‘வ’ போனால், கலையென்பதே மிஞ்சும். வருத்தம் நீங்கினால் வாழ்க்கைக் கலை, வெல்லும் கலை, தடைகளைத் தாண்டும் கலை எல்லாமே கைகூடும்.
கவலை என்னும் வலைதான் தடை. அதிலிருந்து வெளியே வருபவர்களுக்கே வீறு நடை.