ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர் தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக் கொள்ள. அறுபது அறுபத்தைந்து வயது வரை ஆஃபீசர்ஸ் கிளப்பில் மாலைநேரங்களில் டென்னிசும் பிரிட்ஜும் விளையாடி வந்தார்.
பின்னர் காஸ்மாபாலிடன் கிளப்பிற்கு மாறிக்கொண்டார். 73 வயதான பின்னர் டென்னிஸ் நின்றது. பிரிட்ஜ் மட்டும் விடவில்லை.முன்னிருக்கையில் அவரிருக்க சுகாவும் நானும் பின்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்தோம்.
குப்புசாமி மருத்துவமனை எதிரில் மணிமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பிரிட்ஜ் கிளப் வந்ததும் இறங்கிக் கொண்டவர், பின்னிருக்கையில் இருந்த என்னைப் பார்த்து சொன்ன சொல் கேட்டு சுகா அதிர்ந்து போனார்.
“தாங்க்யூ” என்று சொல்லிவிட்டு நிதானமாய் சாலை கடந்து போனவரை மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சுகா அதிர்ச்சி மாறாமல் என்னிடம் கேட்டார்,” என்னண்ணேன் இது”?
” அவர் அப்படித்தான் சுகா” என்றேன்.
பொதுவிலோ என் பணி வெளிகளிலோ அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. எப்போதாவது என்னை அலைபேசியில் அழைக்க நேர்ந்தால், ” நான் மருதவாணன் பேசறேம்ப்பா! கேன் ஐ டாக் டு யூ நவ்” என்றுதான் தொடங்குவார்.
இதைவிட சுவாரசியமாய் ஒரு சம்பவம். ராகவேந்திரா விளம்பர நிறுவனத்தில் நான் படைப்பாக்க ஆலோசகராக இருந்த வேளையில் நாளின் பெரும்பகுதியை அந்த அலுவலகத்தில்தான் கழிப்பேன். ஒருநாள் நான் இல்லாத போது தொலைபேசி அழைப்பொன்று வந்திருந்தது.அங்கு பணியிலிருந்த கௌசல்யா என்ற பெண் எடுத்திருக்கிறார்.
“முத்தையா இருக்காரா?” என்றது எதிர்க்குரல்.
“இல்லை சார்.நீங்க ?”
” நான் மருதவாணன்னு பேசறேன்.அவர் வந்தாகூப்பிட சொல்றீங்களா?
“சொல்றேன் சார்,, உங்க நம்பர்?”
நிறுத்தி நிதானமாய் அவர் சொன்ன தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்ட கௌசல்யாவிற்கு சற்றே பொறிதட்டியிருக்கிறது.” இது சாருடைய வீட்டு நம்பர்தானே” என்று யோசிப்பதற்குள் “தாங்க்யூ” என்று சொல்லித் தொலைபேசியை வைத்துவிட்டார்.
அவர் பிறந்த ஊர் பூம்புகார் அருகிலிருந்த கீழப்பெரும்பள்ளம். ஆக்கூர் பண்ணை அதிபர் ஏ.ஆர்.முத்தையா பிள்ளைக்கும் அவருடைய மூன்றாவது மனைவியாகிய தனுஷ்கோடி அம்மாளுக்கும் 1933 ஜனவரி 9ல் மகனாகப் பிறந்தார். ஒரு மூத்த சகோதரர், ஓர் இளைய சகோதரர். ஒரு மூத்த சகோதரி,இரு இளைய சகோதரிகள்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து ஒரு சில கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆறடி உயரம்,சிவந்த நிறம்,சுருள்கேசம்.விரல்களுக்கி
அந்தப் பகுதியில் பெரும் தனவந்தராகவும் செல்வாக்கு மிக்க பிரமுகராகவும் விளங்கிய திருக்கடவூர்பிச்சைக்கட்டளை எஸ்டேட் அதிபர் கை.கனகசபைப்பிள்ளையின் கடைசி மகள் அலமேலுவை மணந்தார்.
சின்ன மாப்பிள்ளை வருகிறார் என்றாலே திருக்கடவூர் பண்ணை வீடு எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தும். “சுர்” என்று கோபப்படும் துர்வாசர் என்பதால் எச்சரிக்கையாயிருக்கும்.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம்கேசவபெருமாள் புரத்தில் வாங்கியிருந்த இரண்டு கிரவுண்டு நிலத்தை விற்றுவிட்டு கோவையில் குடியேறினார். என் மூத்த சகோதரரும் நானும் கோவையில்தான் பிறந்தோம்.எதற்கும் கவலைப்படாத இயல்பு. வேலையில் வேறு வித வருமானங்களுக்கு வாய்ப்பிருந்தும் கைநீட்டாதநேர்மை. தலை தாழாத தோரணைக்கு நடுவிலும் சிரித்த முகம். மெல்லிய நகைச்சுவை உணர்வு. சொந்த வேலையை கிடப்பில் போட்டு விட்டு பிறருக்கு உதவும் குணம். இவையெல்லாம் அவர் தனக்கென வகுத்த வாழ்வியல் நெறிகள்.
யாராவது வீதியில் போகிற வழிப்போக்கர் அவரிடம் முகம் கொடுத்துப் பேசிவிட்டால் ஐந்தாவது நிமிடம் எங்கள் வீட்டு சாப்பாட்டு மேசையில் அமர்த்தப்பட்டிருப்பார்.கர்நாடக சங்கீதத்தில் அப்பாவுக்கு நல்ல ஞானம் உண்டு.திருமுறைகளில் ஆழமான ஈடுபாடு.தேவாரங்களை அவற்றுக்குரிய பண்ணோடு தான் பாடவேண்டும் என்பதில் அதீத கண்டிப்பாக இருந்தவர் அவர்.
நுனிநாக்கு ஆங்கிலமும் நாகரீக நடைஉடைகளுமாய் வலம் வந்தாலும் சில விஷயங்களில் பழமைவாதி.தஞ்சாவூர் பக்கத்துப் பிளைமார்களின் இயல்புப்படி காலையிலேயே முழுச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்புவார்.
திங்கட்கிழமை காலையில் மட்டும் அவர் குளித்துவிட்டு வரும்போது சாப்பாட்டு மேசையின் மேல் ஒரு வட்ட மேசை போடப்பட்டிருக்கும். ராகுகாலம் நடக்கும் போது இடையிலேயே கிளம்ப வேண்டும் என்பதால் நின்று கொண்டே சாப்பிடுவார். நின்று கொண்டிருந்தால் “பிரஸ்தானப்”பட்டு விட்டதாக அர்த்தமாம்.அதாவது ராகுகாலத்திற்கு முன்பே புறப்பட்டு விட்டாராம்.
அதன்பிறகு தாத்தாவின் நண்பர்களில் ஒருவரான நஞ்சுண்டராவ் பெங்களூருவில் இருந்த தன் கோதுமை ஆலையில் பொது மேலாளராக நியமித்து வீடும் கொடுத்து வேலைக்கமர்த்த முன்வந்தார். நாங்களும் பெங்களூர் வாசத்திற்கு மானசீகமாகத் தயாராகிக் கொண்டிருந்தோம்.
ஆபீசர்ஸ் கிளப்பில் உடன் விளையாடும் தோழர்களான ஆலை அதிபர்கள்சிலர், ” இதுக்கு ஏன் மருதவாணன் பெங்களூர் போய்கிட்டு? பேசாம பஞ்சு பிசினஸ் பண்ணுங்க.நாங்க ஆர்டர் தரோம்” என்று சொன்னதுமே நஞ்சுண்டராவை தொலைபேசியில் அழைத்து வரவில்லையென்று தெரிவித்ததோடு மறக்காமல் ‘தாங்க்யூ” சொல்லிவிட்டு வந்துவிட்டார்.