வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
எல்லாவற்றையும் சரியென்று ஏய்ப்பவர்கள் சராசரிகள். வெளியில்கூட அப்புறம் பார்க்கலாம். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் ஏற்படுகின்றகுறைகளை, “எல்லாம் அப்படித்தான் இருக்கும்” என்று தாண்டிப்போனால் நீங்கள் மந்தையில் ஒருவர்.
சிறுமைகளைக் கண்டு சீறமுடியா விட்டாலும் இது சிறுமை என்று சுட்டுவிரல் நீட்டினால் நீங்கள் மேய்ப்பனாகக் கூடிய தலைவர்.
தயக்கங்களை தகர்த்தவர்களும், தலைகுனிந்து குட்டுகளை ஏற்பதைத் தவிர்த்தவர்களுமே தலையெடுத்திருக்கிறார்கள், தலைவர்களாய் மலர்ந்திருக்கிறார்கள்.
உலகிலுள்ள ரசங்களிலேயே உப்பு சப்பு இல்லாத ரசம் சமரசம்தான். ஆனால் ஒரு குறையை சுட்டிக்காட்டினால் மட்டுமே தலைவராகி விடமுடியுமா? இதுவும் நல்ல கேள்விதான்.
எது நமக்குக் குறையென்று படுகிறதோ, அதற்கு மாற்றாகவும் தீர்வாகவும் நல்ல சிந்தனையை, செயல் திட்டத்தைச் சொன்னால்தான் உங்களுக்குள் இருக்கும் தலைவர் முழுமை பெறுவார்.