வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
“இப்போது இவருடைய அலை வீசுகிறது” என்று யாரைப் பற்றியாவது சொல்லக் கேட்கிறோம். கொஞ்ச நாட்களில் அதே துறையில் வேறொருவர் எழுதுகிறார். முன்னவர் விழுகிறார். இப்போது இரண்டாவதாக எழுந்தவரின் “அலை” என்று சொல்கிறார்கள்.
உள்ளபடியே மனிதர்கள் எழுவதும் விழுவதும் அலைபோல்தான் இருக்கிறது.
மிகச்சிலரின் பங்களிப்பு மட்டும் அவர்கள் துறையில் மற்றவர்களால் வெல்லமுடியாத வண்ணம் நிலையானதாக நிற்கிறது. திருவள்ளுவர், புத்தர் போன்றவர்கள் தங்களைப் பற்றிய பிறரின் அபிப்பிராயம் பற்றி அச்சமின்றி எண்ணியதைச் சொல்கிறார்கள்.
விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் விஞ்ஞானிகள் பலர், தாங்கள் கண்டுபிடித்ததைச் சொன்னார்கள்.
அவர்களின் அலைவீச்சு காலம் என்னும் சமுத்திரத்தில் கல்லில் செதுக்கிய அலையாக நிலைத்து நிற்கிறது. காலங்களுக்கும் நிற்கும்படியாய் பல நிகரற்றசெயல்களை விட்டுச் செல்லவே நாமனைவரும் வந்தோம். இந்த எண்ணம் என்றும் முக்கியம்.