வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
திரிசங்குவுக்கென்று ஒரு சொர்க்கத்தைப் படைக்க விசுவாமித்திரர் விரும்பியதாய் புராணம் சொல்கிறது.
யோசித்துப் பார்த்தால், நமக்கென்று சொந்தமாய் சில சொர்க்கங்கள் அமைவது அவசியம். எது சொர்க்கம்? எங்கே நாம் சொந்தமாய், நிம்மதியாய் உணர்கிறோமோ அதுவே சொர்க்கம். அடுத்தவர்கள் பார்த்து வியப்பதற்கல்ல, நம் சொர்க்கம். அனுபவித்து அறியத்தான் சொர்க்கம்.
நாம் எதைச் செய்தாலும் அதை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்கும் மனோபாவம்தான் திரிசங்குவின் அவஸ்தைக்குக் காரணம். தான் இருக்குமிடம் சொர்க்கம் என்று அவனே முதலில் நம்பவில்லை.
நமக்கு நம்மால் ஏற்படும் அவஸ்தைக்கும் அதுதான் காரணம். நாமிருக்கும் இடத்தின் தகுதி நமக்கு முதலில் நிறைவளிக்க வேண்டும். அந்த இடத்தில் செலவிடும் தருணம் நமக்கு சக்தியும் உற்சாகமும் தரவேண்டும். அப்படியரு நிலையும் நிறைவுமே நம்மை முழுமை பெறச் செய்யும்.