வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
சில நேரங்களில், மின்னல் சொடுக்கியதுபோல் ஏற்படும் எண்ணம், உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் போது, வெளியே எதையாவது செய்வோம். அந்த வெளிச்செயலை யாராவது தடுத்தால், உள்ளே நிகழும் அபார வளர்ச்சியும் அறியப்படாமல் போய்விட சாத்தியம் இருக்கிறது.
ஒரு மேதை, தேநீர்ச் சாலை ஒன்றில் அமர்ந்திருந்தார். சிந்திய தேநீரை சும்மா விரலால் தொட்டு கோலம் வரைந்து கொண்டிருந்தார். உள்ளே வேறேதோ சிந்தனைக் கோலம் உருவாகிக் கொண்டிருந்தது. அவருக்குள் உருவாகிக் கொண்டிருந்த ஓர் அற்புதத்தை மேசை துடைக்க வந்த பையன் ஒரு விநாடியில் துடைத்து விட்டான். அந்த சிந்தனை அந்த மேசையிலேயே அறுபட்டு விழுவதைப் பார்த்துவிட்டு, அவர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
ரிஷிகர்ப்பம் ராத்தங்காது என்பது போல், பல பிரம்மாண்டமான திட்டங்களை நம்மில் பலர் கைவிட நேர்வதுகூட, பொறுமை இன்றிப் போவதால்தானே!