வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
விற்பனை என்பது, அசாத்தியத்திறமையின் அடையாளம்தான். ஆனால் விற்பனையாளர்கள் எதையும் விற்கக்கூடியவர்கள் என்பது அவர்களின் பலமா? பலவீனமா?
விரைந்து பணிகளை மாற்றிக் கொள்வதில் விற்பனை அலுவலர்கள் தனியிடம் வகிக்கிறார்கள். தங்கள் வளர்ச்சியின் படி நிலைகளைக் கணக்கில் கொண்டு, பூப்பூவாய் தேன் சேர்க்கும் வண்டுகள் போல் சுழல்வது அவர்களுக்கு நல்லதையே செய்தாலும் அவர்களுக்கு நம்பகத்தன்மையை நல்குவதில்லை.
வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் நுகர்பொருட்களில் இருந்து, வலைப்பின்னல் வணிகம் வரை மாறிக்கொண்டே இருப்பவர்களை நாம் அறிவோம்.
ஒரு நிறுவனத்தில் நிலைபெற்று அதன் நுட்பங்களை அறிந்து செயல் சிறக்கத் தொடங்கும் முன்னரே, அடுத்த நிறுவனம் நோக்கிப் பாய்பவர்கள் தாங்களும் குழம்புகிறார்கள்.
எண்ணித் துணிக கருமம் & துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு
என்று சொன்ன வள்ளுவரை எவ்வளவு வணங்கினாலும் தகும்.
விற்பனைத் திறனைக் கொண்டு தாங்கள் நேசிக்கிற பொருளை நேசித்து விற்பது நல்லது. இல்லையேல் விற்பனையாளர்கள் தங்களைத் தாங்களே விற்பது போல்தானே உள்ளது.