வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஒரு முயலின் ஓட்டத்தில் எப்போதோ நேர்கிற தோல்வியை தொடர்ந்து பேச வேண்டுமா என்ன? ஆமையிடம்தான் தோற்றிருக்கட்டுமே… அதனால் என்ன?
“ஓடிக்கொண்டேயிரு” என்று உலகம் சொல்கிறது. ஓய்வு கொஞ்சம் தேவையென்று உள்ளம் சொல்கிறது. உலகம் சொல்வது, அதன் எதிர்பார்ப்பு. உள்ளம் சொல்வதோ உண்மையின் தீர்ப்பு.
சின்னச்சின்ன தோல்விகளால் உங்கள் வாழ்க்கை வீழ்ச்சியடையப் போவதில்லை. ஆமை ஜெயித்த செய்தி கேட்டு முயல் தன் வியப்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு வழக்கம்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுபோல், சிறிய தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொண்டு, அடுத்த வெற்றியை நோக்கி நீங்கள் விரைய வேண்டும்.
ஆமையிடம் ஒருமுறைதோற்றஅதே முயல்தான் கொல்லவரும் சிங்கத்திடம் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறது. விளையாட்டாய் தோற்பதில் தவறேஇல்லை. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.
எது விளையாட்டு? எது வாழ்க்கை? என்கிறதெளிவு வேண்டும். தான் ஆமையிடம் தோற்றுவிட்டோம் என்றகுற்றவுணர்ச்சியை சுமந்துகொண்டு முயல் ஓடினால்தான் கனமாயிருக்கும். தன் பலம் தெரிந்து, தூக்கம் வந்தால் தூங்கி, ஓடும் நேரத்தில் ஓடிக் கொண்டேயிருங்கள்… எல்லாம் நலமாயிருக்கும்.