வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
செய்வதை விரும்பிச் செய்தால் வேலை செய்ய வேண்டியதில்லை என்பார்கள். உற்சாகமாய் இயங்குவதை “உயிரியற்கை” என்கிறான் மகாகவி பாரதி.
நாம் மேற்கொண்ட தொழிலைச் செய்ய வேண்டும் என்கிறவிழிப்புணர்வு, உள்ளே இருக்கிறஉந்துசக்தி, அதற்கென்று தனியான நேரமில்லை. நம் மற்றவிஷயங்களைச் செய்யும் நேரத்தில்கூட, நம் கனவுகளிலும் இலட்சியங்களிலும் மனம் லயித்துக் கிடக்கலாம்.
சிறந்த ஒரு மருத்துவரின் மனதுக்குள் நோய்களுக்கான தீர்வுகள் தேடும் வேட்கை, இதயத்துடிப்புடன் இணைந்து துடித்துக் கொண்டிருக்கும்.
சிறந்த நீதிமானின் நெஞ்சம், சத்தியத்தை நிலைநிறுத்த சட்டத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று நினைத்துக் கொண்டே இருக்கும்.
உள்ளுக்குள் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த தீராத வேட்கையை வகைப்படுத்தும் இடமே அலுவலகம்.
உங்கள் அலுவலகம், கோப்புகளை அடுக்கி வைக்கும் இடம் அல்ல. உங்கள் கனவுகளை இயக்கிக்கொண்டே இருக்கிற களம்.