வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஒருவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும் வணக்கம் சொல்வதும் அடிப்படைப் பண்பாடு. அவர் நன்கு அறிமுகமானவர் என்றால் கூடுதலாய் சில வினவுதல்கள், பகிர்தல்கள், பரிமாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கும்.
ஆனால், அதிகம் அறிமுகம் ஆகாதவரை நட்பு வளையத்துக்குள் கொண்டு வருகிற முயற்சியில் அர்த்தமில்லாத, அவசியமில்லாத, உரையாடல்களில் ஈடுபடுவது பலநேரம் சங்கடங்களையே விளைவிக்கும்.
அருமையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா, அறுவையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா என்பது உங்கள் உரையாடல்களில் அர்த்தம் இருப்பதைப் பொறுத்தே அமையும்.
பேச்சு நிதானப்படும்போது பக்குவமும் வரும். பக்குவம் கைவரும்போது பலரும் புகழும் விதமாய் மரியாதை மலரும்.
பேசவேண்டுமே என்று பேசாதீர்கள். மற்றவர்கள் நீங்கள் தங்களிடம் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கும் விதமாக, அர்த்தமுள்ள உரையாடல்களால் இதயங்களை வெல்லுங்கள்…