வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
செல்லிடப்பேசியின் அழைப்பொலி சில நேரங்களில் சங்கீதம். பல நேரங்களில் சங்கடம். இன்று தொழிலில், வணிகத்தில் பலரின் எழுச்சிக்கு மட்டுமல்ல, சரிவுகளுக்கும் செல்லிடப்பேசிகளே காரணம்.
கையில் இருக்கும் இந்தக் கைவிலங்கு உங்களை பலநேரம் கட்டிப்போடுகிறது. தொழில்முறைசந்திப்புகளில் இருந்து, பொதுக் கூட்டங்களில் அமர்ந்திருப்பது வரை பலரும் இடையே குறுக்கிடும் செல்லிடப்பேசியின் அழைப்பொலியால் எதிரே இருப்பவர்களின் எரிச்சலுக்கு ஆளாகி பல தொழில் வாய்ப்புகளைத் தொலைத்திருக்கிறார்கள்.
தகவல் பரிமாற்றங்களுக்கான செல்லிடப் பேசிகள், தொடர் அரட்டைகளை குரல் வடிவிலும், வரிவடிவிலும் ஊக்குவிப்பதாலேயே பல நேரங்களில் உங்களை முடக்கி விடுகிறது.
நான்கு பேர் சந்தித்தால், அடிக்கடி அவர்கள் செல்லிடப்பேசிகளுடன் நான்கு மூலைகளில் போய் முடங்குவதும், ஒலியெழுப்பா நிலையில் வைத்திருந்தாலும் அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும், எதிரே இருப்பவரை பொறுமையிழக்கச் செய்யும்.
கையில் இருக்கும் கருவியைப் பயன்படுத்துங்கள். அதையே விலங்காக்கிக் கொண்டு அவதிப்படாதீர்கள்.