வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
இருக்க இருக்க இறுக்கம் கூடுவதுதான் வாழ்க்கை என்பது சிலருடைய விசித்திரமான கணக்கு. தங்கள் குழந்தைப் பருவத்தில் விடலை வயதில் நடந்த விஷயங்களைக் கூட விகல்ப்பமில்லாமல் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள்.
பள்ளிக்கு புத்தனாகவே போய் கல்லூரியில் காந்தியாகவே வாழ்ந்தது போல் காட்ட நினைப்பதுண்டு. ஆனால், சின்ன வயதுக்கு குறும்புகளையும் சேட்டைகளையும் இதயத்தில் வைத்திருப்பவர்களே இளமையாய் இருப்பார்கள்.
அறியாத வயதின் அசகாயக் குறும்புகளுக்கு பெற்ற தண்டனைகள் கூட முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.
உங்கள் பள்ளிப் பருவத் தோழர்களைத் தேடிப் பிடியுங்கள். பழைய கதைகளைப் பேசிச் சிரியுங்கள். இன்னும் இன்னும் இளமையாய் உணர்வீர்கள்.
பள்ளி வயதில் பேச மறுத்து சண்டை போட்ட நண்பனுடன், அவன் அடித்த காயத்தின் தழும்பைக் காட்டி வாய்விட்டுச் சிரிப்பது வாழ்வின் அர்த்தத்தையே புத்தம் புதிதாகக் காட்டும்.
எத்தனை மரங்களில் ஏறினீர்கள், எத்தனை கனிகளை திருடினீர்கள், என்பதையெல்லாம் உங்கள் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆகப் பெரிய சாதனையே. சந்தோஷமாக இருப்பதுதான்.