வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
உடம்புக்குள் ஓடுகிற கடிகாரத்தின் ஓட்டத்தை சரிபார்க்க, சரியான வழி, தூக்கம். மாத்திரை போட்டு, தபால் போட்டு, தூக்கத்தை வரவழைத்தால் உடம்பு நம் வசம் இல்லை என்று பொருள்.
சரியான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றுடன் பதட்டமில்லாத, பக்குவமான வாழ்க்கை வேண்டிய அளவு தூக்கத்தை பெற்றுத்தரும்.
சில நிமிட மதியம் உறக்கம். மகத்தான சுறுசுறுப்பை பெற்றுத் தரும் என்கிறார்கள். உண்மைதான். இரவு குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கமேனும் இருப்பது ஆரோக்கியத்தின் அடையாளம்.
கண்ணுறக்கம் கொள்ளாமல் உழைக்கும் செயல் வீரர் என்பதெல்லாம் அலங்காரச் சொற்களுக்குப் பொருந்துமே தவிர ஆரோக்கியத்திற்கு சரிவராது.
காலையும் மாலையும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது, நடுத்தர வயதக்குள் நுழையும் பொழுதே பழக வேண்டிய பழக்கம்.
இரவில் மிதமாக உணவை உண்ணுவதும், உண்டபின்னர் சிறிது நேரம் குறுநடை பயில்வதும் மனதையும் வயிற்றையும் கனமின்றி வைத்துக் கொள்வதும், பழகிவிட்டால் தூக்கம் வரும். ஆரோக்கியமும் வரும்.