வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
தூரத்தில் பார்த்தால் ஒன்றாய் பின்னிப் பிணையும் தண்டவாளங்கள் அருகே வந்தால் விலகிப் போகின்றன என்றார் கவிஞர் கலாப்ரியா.
வெற்றிகரமான தம்பதிகள் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சின்ன இடைவெளிதான் அவர்களின் வாழ்க்கையை ஆக்கபூர்வமாய் வைத்திருக்கிறது.
தண்டவாளத்தின் இரண்டு கோடுகள் நடுவே இடைவெளி இல்லையென்றால் அது தண்டவாளமே இல்லை. தேவையான சிறிய இடைவெளி இல்லாத போது இல்லறவாழ்வில் புரிதல் இல்லை.
எவ்வளவுதான் இணக்கமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் மிக நிச்சயமாய் தனி மனிதர்கள் தான். அவர்களின் தனித்தன்மைகள், தனித்த ரசனைகள், ஆகியவற்றுக்குத் தரப்படுகிற முக்கியத்துவமே அவர்களை தலைநிமிரச் செய்கிறது.
தூரத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்குப் புலப்படாத இடைவெளி, தண்டவாளங்களை தன் கடமையைச் செய்ய உதவுவது போல், வெளியே இருந்து பார்த்தால் மிக நெருக்கமாகத் தோன்றும் இருவர் தங்களுக்குள் பேணும் இடைவெளியே இல்லற மகிழ்ச்சிக்கு வழி.