வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
கள்ளம் தவிர்த்த உள்ளமே குழந்தை உள்ளம். அந்த இயல்பு வாழ்வை சுகமாக்கும். சுலபமாக்கும். வாழ்வை
குழந்தை மனம் கொண்டு எதிர்கொள்ளும் போது குதூகலம் வருகிறது. குழந்தைத்தனம் கொண்டு எதிர்க்கொள்ளும் போது குழப்பம் வருகிறது.
குழந்தைகள் கூர்மையானவர்கள். ஒரு சிறிய மாற்றம் கூட அவர்களின் சின்னக் கண்களில் விடுபடாது. பொய்யான மனிதர்களின் போலிக்கொஞ்சல் அவர்களிடம் எடுபடாது.
அதுபோல, கூர்மையான பார்வையும், தவறான மனிதர்களிடம் முகம் திருப்பிக் கொள்கிறஇயல்பும் குழந்தை மனம் தருகிறபரிசுகள்.
அதேநேரம், பக்குவமில்லாத அதிரடி முடிவுகள், முதிர்ச்சியில்லாத மன உணர்வுகள் தொட்டாச்சிணுங்கி இயல்புகள் ஆகியவை எல்லாம் குழந்தைத்தனமானவை.
அவை, வளர்ச்சிக்குத் தடையாகுமே தவிர துணையாகப் போவதில்லை.
குழந்தையின் நுட்பமான இயல்புகளும், அச்சமில்லாத நம்பிக்கையும் நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர முடியும்.
இந்த இயல்புகளை நிலையாக்குங்கள் உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்.