வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
“தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல்” உலகம் முழுவதும் உள்ள ஒரே பயம் இதுதான்.
பள்ளிக்கூடங்களிலிருந்து பாராளுமன்றம் வரை, வீடுகளிலிருந்து வைட்ஹவுஸ் வரை இந்த பயமே பரவிக் கிடக்கிற-து.
ஆனால், இது அழிக்க வேண்டிய பயமல்ல. ஆக்கபூர்வமான பயம். நம்மைத் தொடர்ந்து இயக்கும் சக்தி இது. எட்டிய உயரத்தை எப்படியெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற தவிப்பில்தான் அவரவரும் புதிதாய் முயன்று கொண்டிருக்கிறார்கள். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்று திருவள்ளுவர் சொன்ன ஆக்கபூர்வமான அச்சங்களில் இதுவும் ஒன்று.
பயணத்தில் காட்டும் எச்சரிக்கை, பணத்தில் காட்டும் எச்சரிக்கை, தொழிலில் காட்டும் எச்சரிக்கை எல்லாமே இந்த பயத்தின் பயன்கள்தான்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது பயம்போல் தெரியும். ஆனால் இது பயமில்லை. ஏனென்றால் விவரம் புரிந்த பயத்திற்கு விழிப்புணர்வு என்று பெயர்.
‘பயம்’ எனும் புனைபெயர் கொண்ட இந்த விழிப்புணர்வு, வாழ்வை வளப்படுத்தும். வெற்றிகளை வசப்படுத்தும்.