வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மனிதர்களைத் தாண்டி வருகிற சூழலில் நாம் எல்லோரும் இருக்கிறோம். இவர்களில் நமக்கு அறிமுகமாகிற எல்லோருமே நம் நட்புக்கு அவர்களோ, அவர்கள் நட்புக்கு நாமோ உகந்தவர்கள் அல்ல.
இந்த உண்மையைப் பலரும் உணர்வதே இல்லை. அதன் காரணமாகவே உறவுகளின் அடிப்படையில் விரிசல் விழுகிறது. உங்களுக்கு அறிமுகம் ஆகிறவரை நண்பராக -ஆக்கிக் கொள்வது அவசியம்தானா என்று முதலில் தீர்மானியுங்கள். உங்கள் வாழ்க்கைமுறை போக்குகள், இவற்றை வைத்தே முடிவெடுக்க வேண்டும்.
அந்த அறிமுகம் நட்பாகக் கனியும் வரை காத்திருங்கள். பலர், ஒரு பிரமுகரின் அறிமுகம் கிடைத்ததுமே அவரைத் தன் நண்பராக எண்ணிக் கொண்டு, பரிந்துரைக்கோ உதவிக்கோ போய் நிற்பார்கள். இது அந்தத் தொடர்பு வளராமல் தடுத்துவிடும்.
நட்பென்பது நுட்பமான உறவு. வருகிறவர், போகிறவர்களையெல்லாம் அந்த வட்டத்தில் இழுத்துவிட்டுக் கொண்டு அவஸ்தைப்படாதீர்கள். அவஸ்தை தராதீர்கள்.