வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
குடத்தில் இருக்கிற தண்ணீர்… புத்தகம். அதைக் குடிக்கப் பயன்படும் குவளை-… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா?
வெட்டி எடுத்த தங்கம்-… புத்தகம். அதை தட்டிச் செய்த அணிகலன்… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா?
கட்டிடத்திற்கான அடித்தளம்… புத்தகம். கட்டி முடித்த கட்டிடம்… புத்தி… நீங்கள் புத்தியா? புத்தகமா?
படிப்பவர்கள் எல்லாமே ஜெயிப்பவர்கள். உண்மைதான். இதற்குப் பொருளே, படித்த விஷயங்களைத் தகவல்களாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், செயல்முறைக்குக் கொண்டு வருவதே வெற்றி என்பதை உணர்த்துவதற்காக.
சேகரித்த தகவலை, சேமித்த செய்தியை வாழ்வில் முடிவெடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் வெளிப்படுத்தும் போது நீங்கள் வாசித்ததன் அர்த்தம் நடைமுறைக்கு வருகிறது.
வாகனத்தில் நிரப்பிய எரிபொருள் வாகனத்திலேயே இருந்து பயனில்லை. அது எரிசக்தியாக வேண்டும். படித்துத் தெரிந்த விஷயங்கள் தகவலாகவே இருந்து பயனில்லை. அது செயல் சக்தி ஆகவேண்டும். செயல்படுங்கள். சிகரம் தொடுங்கள்.