வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
கேட்க வேண்டியதைக் கேட்காமல் போகிறபோதல்லாம் உங்களுக்கு என்ன நிகழ்கிறது தெரியுமா? நீங்கள் பெறவேண்டியதைப் பெறாமலேயே போகிறீர்கள்.
வீதியில், போகும்போது வழி கேட்க சிலருக்கு கூச்சம். விளைவு? போக வேண்டிய இடத்திற்கு அருகிலேயே இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
பயில்கிற பாடத்தில் சந்தேகம் கேட்பதில் சிலருக்கு கூச்சம். விளைவு-? அரைகுறை அறிவுடன் ஒரு பாடத்தை அவர்கள் கடப்பார்கள்.
இவ்வளவு ஏன்-? காசு கொடுத்து சாப்பிடுகிறபோதுகூட இரண்டாவது முறை கூட்டுப் பொரியல் கேட்கக் கூச்சம். முழு நிறைவில்லாமலேயே கை கழுவுவார்கள்.
வணிக வாய்ப்புகள், வாழ்க்கை வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் கூச்சப்பட்டால் உங்களுக்கு உரியவை உங்களை வந்தடையாமலேயே போகும்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்கிற வீண் கற்பனையில்தான் வாழ்வின் அற்புதமான தருணங்கள் வீணாகின்றன-.
உண்மையில் அவரவருக்கு தங்களைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. எனவே நீங்கள் உங்களுக்கு தேவையானதை கேட்டுப் பெற கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி கொள்ளுங்கள்.