வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
இறுக்கமாகவே இருப்பவர்கள் எதையும் சாதித்ததாக சரித்திரமில்லை. வளைந்து கொடுப்பதற்கு தோல்வியென்றும் அர்த்தமில்லை.
எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு. வாழ்க்கையை மிகவும் வறட்சியாக வைத்துக் கொள்ளாதவர்கள் மலர்ச்சியான உறவுகளை சம்பாதிக்கிறார்கள்.
அதிகாரத்தாலும் அதட்டலாலும் சாதிக்க முடியாததை அன்பும் அங்கீகாரமும் சாதிக்கிறது. நம்மிடமிருந்து காத தூரம் தள்ளி நின்றவர்கள் கூட, நாம் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கிவிட்டால் நம்மீது இமாலய நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
மற்றவர்களுக்காக இறங்கி வருபவர்கள் மழையைப் போன்றவர்கள் என்றார் கவிஞர் அப்துல் ரகுமான். இரங்குதல், இறங்குதல் இரண்டுக்கும் ஒரெழுத்து பேதம். இந்த இரண்டு இயல்புகளுமே இதயங்களை வெல்வதற்குப் போதும்.
எல்லோருக்கும் பொதுவான உலகத்தில் வாழ்கிறநாம், எல்லோரும் நம் வழிமுறைகளுக்கு வசப்பட வேண்டுமென எண்ணுவது சாத்தியமல்ல என்பது மட்டுமல்ல. சர்வாதிகாரமும் கூட.
வளைந்து கொடுங்கள்! வளைத்து விடுங்கள்!