வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
“நான் வளர்கிறேனே மம்மி” என்று சொல்லும் குழந்தைகளை காம்ப்ளான் விளம்பரத்தில் பார்க்கிறோம். தாங்கள் வளர்த்தால் தான் குழந்தை வளரும் என்பது எத்தனையோ பெற்றோர்களின் மூட நம்பிக்கை. அது கூடப் பரவாயில்லை. தங்கள் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்னும் பிரக்ஞை கூட இல்லாமல், தங்கள் கைகளில் தான் அவர்களின் வாழ்வே இருக்கிறது என்றெண்ணும் பெற்றோர் இன்னும் அதிகம்.
நம் பிரியத்துக்குரிய பிள்ளைகள், ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தைப் பார்த்து வளர்கிறார்கள். பார்த்த விஷயங்கள், படித்த புத்தகங்கள், பழகும் மனிதர்கள் என எத்தனையோ வண்ணங்களைத் தொட்டுத் தொட்டு தங்கள் உலகத்தை அவர்கள் வரைந்து கொள்கிறார்கள்.
பெற்றோரின் கறுப்பு வெள்ளைக் கோடுகளையும் தாண்டிய வண்ணங்களால் பிள்ளைகளின் வாழ்க்கை பரிமளிக்கிறது. பிள்ளைகளுக்கு சுயம் மிகமிக முக்கியம். உள்ளங்கையில் பொத்தி வைத்துக் கொண்டால் மணலே நழுவுகிறதே. மகன்களும் மகள்களும் நழுவ மாட்டார்களா?
உங்கள் குழந்தைகளை நீங்கள்தான் உருவாக்கினீர்கள். ஆனால், உங்களுக்காக உருவாக்கவில்லை. தனக்கு வேண்டிய விதமாய் உலகம் அவர்களை வடிவமைக்கட்டுமே, வெற்றி பெறட்டுமே!