வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
மனித வாழ்க்கையை மாயை என்று பார்ப்பது ஒருவகைப் பார்வை. அதுகூட உண்மையைத் தேடுகிற உள்நோக்கம் கொண்டது. வாழ்க்கை மாயையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நிஜம்.
உங்களைப் பொறுத்தவரை உலகம் என்பது உங்களில் தொடங்குகிறது. உங்களில் முடிகிறது. உங்கள் உடம்பின் ஆயுள் நூறாண்டுகள் மட்டும் என்றே இருக்கட்டும். அதனாலென்ன? உங்கள் செயலின் ஆயுள் ஆயிரமாயிரம் ஆண்டுகள்.
பலரும் தங்களின் சம்பாதிக்கும் திறமையும் சுவாசிக்கும் திறமையும்தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டையும் தாண்டி உங்களிடம் இருக்கும் சக்தியை உசுப்பினால், நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியும்.
உங்கள் எல்லைகளைத் தாண்டி யோசித்தால், எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்று யோசித்தால் செயல்திறன் வெளிப்படும். சாதனை வசப்படும்.
வாழ்க்கை ஒரு வாய்ப்பு. தற்காலிகம் தான் நம் இருப்பு. ஆனால் யுகங்கள் தாண்டிய சாதனைகள் நம் எல்லோருக்குமே சாத்தியம்.