வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
நீங்கள் தூக்கிச் சுமக்கிறபெரிய சுமை, உங்களைப்பற்றி அடுத்தவர்கள் தாங்களாக வளர்த்துக் கொண்ட அபிப்பிராயங்கள் தான்.
“இதுதான் நீங்கள்” என யாரோ தீட்டும் சாயத்தை “இதுவும் நான்” என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.
இப்படி அடுக்கடுக்கான அபிப்பிராயங்களை அள்ளிக் கட்டிக் கொண்டு கண்கள் பிதுங்க கம்பீரம் என்று நினைத்தபடி நீங்கள் வலம் வருவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது.
உங்கள் மேல், அப்பிக் கொண்டிருக்கும் இந்த அபிப்பிராயங்களை நீங்கள் அகற்றிய பிறகுதான், உங்கள் சுயத்தை முதலில் நீங்கள் உணர-முடியும். உணர்த்தவும் முடியும்.
மற்றவர்களின் சந்தோஷங்களுக்காக சில காரியங்களைச் செய்யத் தொடங்குபவர்கள் தாங்கள் எந்த வேலைக்காக இந்த உலகுக்கு வந்தோம் என்பதையே மறந்து விடுகிறார்கள்.
உங்கள் முகமூடிகளை முகமென்று மற்றவர்கள் சொல்லச் சொல்ல அதை நீங்களே நம்பக் கூடிய அபாயம் நேரலாம். வாழ்வை முழுதாய் வாழ்வதற்காவது முகமூடிகளைக் கழற்றுங்கள். முகத்தைக் காட்டுங்கள்.