வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
மனித உறவுகளின் ஆகப்பெரிய அச்சுறுத்தலே வதந்திதான். மற்றவர்களின் விபரீதக் கற்பனைகள் வளர்ந்து வளர்ந்து விசுவரூபம் எடுக்கும்போது வதந்திகள் உலவத் தொடங்குகின்றன.
உண்மையை மறைப்பதோடு மட்டுமல்ல. உண்மையிலிருந்து வெகுதூரம் நம்மை விலக்கிக்கொண்டு போகிற வேலையை வதந்திகளே செய்கின்றன.
வதந்திகள் பலவிதம். விரோதத்தால் விளைகிற வதந்திகள். அரைகுறை தகவல்களில் கற்பனை கலப்பதால் உருவாகிற வதந்திகள். செயல்படாமல் இருக்கிற மனதின் விளையாட்டு காரணமாய் விளைகிற வதந்திகள். தவறான உள்நோக்கத்தோடு உருவாகிற வதந்திகள்.
கண்ணால் காண்கிற சில விஷயங்களையும் காதில் கேட்கிற சில விஷயங்களையும் மேலோட்டமாய் புரிந்துகொண்டு கூட சில முரண்பாடான விஷயங்களை உருவாக்கிவிட முடியும்.
அதனால்தான், கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்பதாக ஒரு பொன் மொழி உருவானது.
ஒரு வதந்தியைப் பற்றி விரிவாக விவாதிப்பதன் மூலம் என்ன நிகழ்கிறது? இல்லாத ஒரு விஷயம் பற்றிப் பேசுவதில் நேரம், சக்தி, எல்லாமே வீணாகிறது.
எனவே வதந்திகள் விலக்குங்கள்; வெற்றி எட்டுங்கள்.