வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
தனக்குத் தொண்டர்கள் வேண்டும் என்று கருதுபவர்கள் தலைகனத்த தலைவர்கள். தன்னைப் போல் தலைவர்கள் வேண்டும் என்று நினைப்பவர்களே தலை முறையின் தலைவர்கள்.
அலுவலகம் தொடங்கி அரசியல் வரையில் இன்று ஏற்பட்டிருப்பது தலைமைப் பஞ்சம். ஒருகிணைக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், முன்னேற்றும் சக்தி என எத்தனையோ அம்சங்களை வளர்த்தால்தான் ஒரு நிறுவனம் வளரும்.
இத்தகைய தலைவர்களை வளர்ப்பதே சிறந்த தலைமைப்பண்பின் அடையாளம். சொல்வதைச் செய்பவர்கள் மட்டுமே உடனிருந்தால் அதன் பேர் தலையாட்டி பொம்மைகளைத் தயாரிப்பது.
என்ன செய்யவேண்டும் என்று சொல்லக்கூடியவர்களைத் தயாரிப்பதுதான் வளர்ச்சிக்கு வழிவகுப்பது.
மூத்த தலைவர்களை உடனிருந்து பார்ப்பது, அவர்களுடைய வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் கற்றுக் கொள்வது, உரியவர்களுக்கு உரிய அங்கீகாரங்களைத் தருவது என்பதெல்லாம் தலைமைப் பண்பின் அடையாளங்கள்.
தன்னை மீறி விடுவார்களோ, தன்னிடமிருந்து மாறுபடுவார்களோ என்பது போன்ற அச்சங்கள், தங்களையே நம்பாதவர்களிடம் இருக்கும்.
தலைவர்களை உருவாக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு சிறக்கும்.