வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் அவசியமில்லை. எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொல் தேவையுமில்லை.
சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும்கூட அந்தச் சொற்களை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் விவேகத்திற்கே மௌனம் என்று பெயர்.
எத்தனையோ சூழல்கள் பேச்சால் கெட்டிருக்கின்றன. எத்தனையோ சூழல்கள் மௌனத்தால் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உதிராத மலர், மரத்தின் அழகு. உதிராத சொல் மனதின் அழகு.
“திறனறிந்து சொல்லுக சொல்லை” என்றார் திருவள்ளுவர். அம்பை எய்வதன் முன் வில்லை இழுக்கிற அதே விவேகம் சொல்லை சொல்லும் முன் நீங்கள் எடுத்துக் கொள்கிற நேரத்தில் இருக்கிறது.
“தோன்றுவதை எல்லாம் பேசுவது என் சுபாவம்” என்று சிலர் சொல்லலாம். தோன்றுகிற எல்லாவற்றையும் எல்லோரும் சொல்லத்தொடங்கினால் அது அநாகரீகத்தின் உச்சம்.
பிரபஞ்சம் பேசிய முதல்மொழி மௌனம். பூக்களுக்கெல்லாம் பொது மொழி மௌனம். நுரைமொழி பேசும் அலைகளைக் கழித்தால், நடுக்கடல் பேசும் தாய்மொழி மௌனம்.
மௌனத்தை சரியான இடத்தில் சரியான விதத்தில், சரியான விகிதத்தில், பயன்படுத்தினால் அதுவே வெற்றி மந்திரம்!