வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஒரு விஷயம் தவறாகப் போனால், இதற்கு யார் பொறுப்பென்று சொல்ல இந்த உலகம் சுட்டுவிரல் நீட்டத் தயாராக உள்ளது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு வலக்கரம் நீட்ட வருபவர்கள் வெகு சிலர் தான்.
குற்றம் சொல்வதால் ஆகப் போவது ஏதுமில்லை. நிலைமையை சீர்செய்ய முயல்வதால் மட்டுமே நடந்ததை மாற்ற முடியும். இந்தப் புரிதல் இருந்தும்கூட குற்றப் பத்திரிக்கை வாசிப்பதில் ஒரு குரூர சுகம் இருப்பதை பலரும் தங்களையும் அறியாமல் வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
ஒரு சூழ்நிலை மாறுவதற்கு உதவி செய்யும் உரமோ தகுதியோ வாய்ப்போ இல்லாதவர்கள் வெற்று சுவாரசியத்திற்காக மட்டும் அந்தச் சூழலில் தலையிடுகிறார்கள்.
இந்த உலகம் விமர்சனங்களால் வளர்ந்ததில்லை. தீர்வுகளால் மட்டுமே வளர்ந்திருக்கிறது. காரியத்தில் வெற்றியை மட்டுமே கணக்கில் எடுப்பவர்கள் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை பெரிதாக்கி கொண்டிருக்கப் போவதில்லை.
சுட்டு விரல் நீளட்டும்… குற்றம் சுமத்துவதற்கல்ல. கண்ணீர் துடைக்க. வலக்கை நீளட்டும்..-. வழக்கை வளர்ப்பதற்கல்ல, உரிய நேரத்தில் கை கொடுக்க..