வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
தன்னை மட்டுமே எண்ணிக் கிடப்பவர்கள், தன்னைத் தானே தாண்டி வருவதற்குள் இந்த உலகம் அவர்களைக் கடந்து வெகுதூரம் போய்விடுகிறது.
மிகச் சாமானிய மனிதர்கள், தங்கள் எல்லைகளைத் தாண்டி யோசித்ததன் விளைவாக சாதனை மனிதர்களாய் உயர்ந்திருக்கிறார்கள்.
எல்லை மீறிய பயங்கர வாதம்தான் தவறு. தான், தனது என்னும் எல்லையைத் தாண்டி உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் வளர வளர உலகம் உங்கள் இருப்பை உணர ஆரம்பிக்கிறது.
உலகை விடவும் ஒன்று பெரிதாக முடியுமென்றால், அது நம்முடைய உள்ளம்தான். பிறப்பாலோ, தகுதியாலோ நமக்கிருக்கும் குறுகிய எல்லைகளைக் கடந்து உங்கள் எண்ணத்தின் வீச்சு வளர்கிறபோது உங்கள் ஆளுமை உங்களுக்கே வியப்பளிக்கும்.
உலகமயமாதல் பொருளாதாரத்திற்கு வருகிறதோ இல்லையோ, உள்ளத்திற்கு வருவது அவசியம். அதுதான் உலகத்தால் விரும்பப்படுகிற மனிதனாய்த் திகழ்வதன் ரகசியம்.