வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
சில விளக்குகளைக் கண்டால் கண்களுக்கு குளுமையாகவும் இதமாகவும் இருக்கும். ஆனால் சுடரின் குணம் சுடுவது.
ஒரு மனிதனின் இலட்சியத்தை நீங்கள் சுடருடன் ஒப்பிடலாம். எனக்கும் இலட்சியம் இருக்கிறது என்று பெயரளவில் சொல்லிக் கொள்பவர்களுக்கு, சுடர் என்பது அழகுப் பொருளாய், அலங்கராப் பொருளாய் கண்களுக்கு இதம் சேர்க்கும் ஒன்றாய் மட்டுமே இருக்கிறது.
இலட்சியம் என்பது சுடுகிற சுடர். எட்டும் வரைக்கும் நெட்டித் தள்ளும் நெருப்பு, மனசாட்சியை உலுக்கும் மந்திரம். பூமிக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றும் வரையில் தூங்க விடாமல் துரத்தும் சக்தி.
வெளிச்சம் தரவும் குளிர் காயவும் மட்டும் இலட்சிய நெருப்பை பயன்படுத்துபவர்கள் ஒளிவீசப் போவதேயில்லை. தாமே சுடராகி, சுடரே தாமாகி நின்று வெளிச்சத்தை தருபவர்களே வென்று வருவார்கள்.
தங்களுடன் தாங்களே சமரசம் செய்து கொள்பவர்களும் சமாதானம் செய்பவர்களும் இந்த சுடரை வெறுமனே எரியச் செய்து விரயம் செய்கிறார்கள்.
இலட்சியவாதிகளே சுடரின் ஒளியை தங்கள் செயல்களில் நிலைநிறுத்துகிறார்கள்.