பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் எல்லோருக்குமே உண்டு. பிறந்த குழந்தையின் முதல் அழுகை கூட “இங்கே நான் இருக்கிறேன்” என்னும் கவன ஈர்ப்புத் தீர்மானம் தானே!
இந்த உந்துதல் எல்லோருக்கும் இருக்கும் என்றாலும் கூட ஃபேஸ்புக் வாட்ஸப் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உருவான பிறகு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விருப்பம் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது.
ஃபேஸ்புக் வட்ஸப் டிவிட்டர் போன்றவை சமூக வலைத்தளங்கள் என்று சொல்லப்பட்டாலும் அவை இன்று தனிமனிதர்களின் தகவல் சாதனங்களாகத்தான் உள்ளன. நாட்டு நடப்புகள் பற்றி அவரவரின் அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதோடு தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும் இவற்றை மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தொடர்பு கொள்ளவும், உரையாடவும், ஒத்த சிந்தனை உள்ளவர்களை ஒன்று சேர்க்கவும் சமூக வலைத்தளங்கள் தலைசிறந்த ஊடகங்களாக திகழ்கின்றன. ஆனாலும் இவற்றில் நிறைகளைப்போலவே குறைகளும் நிறைய. மனித சமூகத்தில் விழிப்புணர்வுக்கும் கூட்டுச் சிந்தனைக்கும் வலைத்தளங்கள் தளம் அமைத்துத் தந்தாலும் கூட, இவற்றில் உண்மைக்கும், வதந்திக்கும் வித்தியாசம் காண வழிகள் இல்லை. மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவே எதைக் குறித்தும் எதை வேண்டுமானாலும் எழுதுகிற விசித்திரமான மனநிலையை இது வளர்த்து விட்டிருக்கிறது.
ஓர் ஊடகம் ஆக்கப்பூர்வமானதா? அழிவைத் தரக்கூடியதா? என்பதெல்லாம் அதனை கையாள்வதில்தான் இருக்கிறது.
சமூக ஊடகம் என்பது சாலையில் செல்லும் திறந்த வாகனம் போன்றது. அதில் மலர்கள் நிரம்பி இருந்தால், எல்லாத் திசைகளிலும் நறுமணம் பரவும். குப்பைகளை நிரப்பி வலம் வந்தால் துர்நாற்றமும், நோய்களும் தான் பரவும்.
சமூக ஊடகங்கள் ஒருவகையில் பலபேரை ஒரு போதையில் ஆழ்த்தி இருக்கிறது. வயது வரம்பில்லாமல் பற்பலரும் இதற்கு அடிமைப்பட்டிருந்தாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கணிசமான அளவில் இந்த வலை வீழ்த்தி இருப்பது கவலைக்குரியது.
இதே இளைய தலைமுறைதான் சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சென்னையை வெள்ளத்தில் இருந்து கரை சேர்த்தது. சமீபத்தில் கடற்கரையில் இருந்தபடியே வாடிவாசல்களைத் திறந்தது. இவை விதிவிலக்குகள். உங்களுக்கே தெரியும்… விதி விலக்குகள் ஒருபோதும் உதாரணங்கள் ஆவதில்லை.
இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் கணிசமான நேரத்தை செலவழித்து விலைமதிப்பில்லாத தங்கள் நேரத்தையும், ஆரோக்கியத்தையும், சக்தியையும் இழந்து நிற்பதோடு தங்கள் சுயசிந்தனையையும் பெருமளவு தொலைத்து நிற்கிறார்கள். ஒருசில சம்பவங்களில் வலைத்தளங்களில் வெறித்தனமாக ஈடுபட்டு பலர் தங்கள் பொன்னான உயிர்களையும் இழந்திருக்கிறார்கள்-.
இணையதளம் திரைப்படம் சமூக ஊடகங்களை எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் கையாள வேண்டிய அவசியத்தை அதிரடியாகச் சொல்லுகிறது. சைபர்கிரைம் துறையில் ஏற்பட்டு வரும் சுவாரஸ்யமான வளர்ச்சிகளை சுடச்சுட அலசுகிறது. நொடிக்கு நொடி பரபரப்பைக் கூட்டும் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சமூக வெளியில் ஒரு விழிப்புணர்வை மலர்த்தும் இலட்சியத்துடன் வண்ணத்திரைக்கு வருகிறது.
ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கையிலும் உள்ள ஒரு துண்டு தொழில்நுட்பம் உலகத்தோடு உறவாடும் வல்லமையைத் தருகிறது. அதுகுறித்து சமூகத்தில் ஒரு தெளிவான பார்வை உருவாகும் பொருட்டு சில விழிப்புணர்வுத் தகவல்களை இந்தக் கையேட்டில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இணையதளம் திரைப்படத்தின் இயக்குநர்களும், படக் குழுவினரும் சமூக வலைத்தளங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அவற்றை இந்தத் திரைப்படத்தில் சுவையாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மைகளை, சமூக வலைத்தளங்களில் செய்யத் தகுந்தவை எவை? செய்யக் கூடாதவை எவை? என்னும் குறிப்புகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். கையில் ஓர் அலைபேசியையோ மேசையில் ஒரு கணினியையோ வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தக் குறிப்புகள் அவசியம். இவை வெற்றிமிக்க வலைத்தளங்கள் பயன்பாட்டின் இரகசியம்.
இதோ அந்தக் குறிப்புகள்:
1. சுயமாக சிந்திப்பவர்களே முன்னுக்கு வருகிறார்கள், எங்கிருந்தோ வரும் இரவல் தகவல்களை முன்னனுப்பும் மனிதர்கள் சுயசிந்தனையையே இழக்கிறார்கள். உங்களுக்கு கிடைக்கும் தகவல்களை எல்லாம் எல்லோருக்கும் முன்னனுப்புவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
காணாமல் போன ஒரு குழந்தை பற்றியும், நெடுஞ்சாலையில் “சில நிமிடங்கள் முன்” நடந்த விபத்துகள் பற்றியும் அவசரமான இரத்தத் தேவை பற்றியும், சில தகவல்கள் வருடக்கணக்கில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை அவசரப்பட்டு முன்னனுப்பி அசடு வழிபவர்களே அதிகம். உண்மையில் உதவும் எண்ணம் இருக்குமேயானால் அந்த தகவலில் உள்ள எண்ணைத் தொடர்பு கொண்டு இன்னும் அந்தத் தேவை இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு அதன் பின்னர் ஃபார்வர்ட் செய்யுங்கள்.
2. நகைச்சுவை உணர்வு நல்லதுதான் ஆனால் அடுத்தவர்களை புண்படுத்தினால் அது ஆபாசம் ஆகிவிடுகிறது. நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களின் மத உணர்வுகளையோ, ஆன்மீக நம்பிக்கைகளையோ புண்படுத்துவது நாகரீகமான செயல் அல்ல.
3. தனக்கு தெரியவே தெரியாத விஷயங்களைப் பற்றி எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது சமநிலை அவசியம். நடுநிலை அவசியம். இந்தப் பக்குவத்தை வெளிப்படுத்துபவர்கள் வலைவெளிகளில் கருத்து உருவாக்கும் நிபுணர்களாக மதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் வெற்று வதந்திகளை கொத்தித் திரியும் சண்டைக் கோழிகளாக ஒதுக்கப்படுவார்கள்.
4. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.
5. அந்நியர்களுடன் உள்பெட்டி உரையாடல்களை தவிர்த்திடுங்கள். அப்படி சிலருடன் உரையாட வேண்டி வந்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தராதீர்கள். உதாரணமாக நீங்கள் ஒரு மாணவி என்பதை சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்பதெல்லாம் அனாவசியத் தகவல் & ஆபத்தானதும் கூட.
6. உங்கள் சமூக ஊடகக் கணக்குகள் எவற்றிலும் உங்கள் அலைபேசி எண்களை அளிக்காதீர்கள்.
7. பரிவான வார்த்தைகளிலோ பார்க்க அழகான புகைப்படங்களிலோ மயங்கி விடாதீர்கள். இரண்டுமே போலியாய் இருக்கலாம்.
8. யாராவது ஒருவர் உங்களை தவறான நோக்கத்துடன் அணுகுவது தெரிந்தால் அவரை தடைசெய்யத் தயங்காதீர்கள்.
9. உங்கள் வலைக்கணக்குகளின் கடவுச் சொற்களை அவ்வப்போது மாற்றுங்கள்.
10. சமூக வலைத்தளங்களில் குறைவான நேரத்தையே செலவிடுங்கள். உங்கள் பாதுகாப்புக்கும், அடுத்தவர்களின் பாதுகாப்புக்கும் போதிய முக்கியத்துவம் கொடுங்கள். சமூக வலைத்தளங்கள் நீங்கள் கண்டு, கடந்து செல்லக் கூடியவையே தவிர எப்போதும் வசிக்க வேண்டிய இடம் அல்ல.
11. நீண்ட நேரம் செலவிடும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாவிட்டால் இதோ, ஒரு சிறந்த வழி. வலைத்தளத்தில் நுழையும்போதே உங்கள் அலைபேசியில் குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்து விடுங்கள். அலாரம் ஒலிக்கத் தொடங்கியதும் வெளியேறிவிடுங்கள்.
12. வெற்றியாளர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதை பாருங்கள். நேர்மறை எண்ணங்களை பரப்புகிறார்கள். நல்ல விஷயங்களையே பகிர்கிறார்கள், சுருக்கமாக பதில் அளிக்கிறார்கள். எரிச்சலூட்டும் எதிர்வினைகளை அவர்கள் பதிவதில்லை. வெற்று யூகங்களின் அடிப்படையில் எதையும் எழுதுவதில்லை.
13. சாமர்த்திய சாலிகள் ஏன் சமூக வலைத்தளக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் தெரியுமா? வாழ்வின் தரத்தையும், அறிவின் தரத்தையும், உறவுகளின் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள மட்டும்தான். இதற்கு எதிரான எதையும் செய்யலாகாது.
14. புதிய தொடர்புகளையும், உறவுகளையும் உருவாக்கிக் கொள்வதுதான் வளர்ச்சிக்கு வழி. ஆனாலும் உங்கள் நட்பு வளையத்திற்குள் வருகிற மனிதரின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்ட பிறகே தொடர்பை வலுப்படுத்த வேண்டும். உங்களை வெளிப்படுத்திக் கொள்வதிலும் எல்லைகள் வகுக்க வேண்டும்.
15. இணையத்தின் தேடுதளங்கள் சில தகவல்களுக்கான வழிகாட்டிகள் மட்டுமே. அவசரத் தகவல்களை அறிய அவை பயன்படும். உங்கள் அறிவையும், சிந்தனையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமேயானால் நல்ல புத்தகங்களையும், நேர்மறையான எண்ணங்களைத் தூண்டும் நூல்களையும் வாசியுங்கள்.